மானிப்பாய் பிரதேச சபை முறைகேடு : கவனயீர்ப்பு போராட்டத்தில் குதித்த மக்கள்
மானிப்பாய் பிரதேச சபையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சாந்தை கிராம சேவகர் பிரிவு மக்கள் இன்று (19.12.2025) காலை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஜே/148 கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட வைரவர் வீதி புனரமைப்பு பணிகளில் பல்வேறு முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டியே, அப்பகுதி மக்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
முறைகேடுகள் குறித்து மக்கள் குற்றச்சாட்டு
போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவிப்பதாவது,
-
வைரவர் வீதி புனரமைப்பிற்காக ஒரு மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
-
ஆனால், கேள்வி விண்ணப்பம் (Tender) கோரப்படாமல், ஒரே தரப்புடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
-
இதனைத் தொடர்ந்து புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்ட போது, மக்கள் வீதி ஓரங்களில் இருந்த மரங்களை அகற்றி முழு ஒத்துழைப்பையும் வழங்கினர்.
தரமற்ற புனரமைப்பு
புனரமைப்பு பணிகளின் போது,
-
வீதிக்கு தரமான அடித்தளம் அமைக்கப்படவில்லை,
-
தரமற்ற முறையில் வேலைகள் மேற்கொள்ளப்பட்டதாக மக்கள் குற்றம் சாட்டினர்.
இதுதொடர்பில் பிரதேச சபை தவிசாளர், தொழில்நுட்ப உத்தியோகத்தர் மற்றும் ஒப்பந்ததாரர் ஆகியோரிடம் மக்கள் முறையிட்டபோது, அவர்கள் ஒருவருக்கொருவர் மாறுபட்ட கருத்துகளை தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
பின்னர் ஓரளவு அடித்தளம் இடப்பட்டாலும், அது கூட திருப்திகரமாக இல்லை என மக்கள் தெரிவித்தனர்.
மூலப்பொருட்கள் வேறு வீதிக்கு மாற்றம்
மேலும்,
-
வைரவர் வீதிக்காக கொண்டு வரப்பட்ட மூலப்பொருட்கள் மக்கள் அனுமதியின்றி வேறு ஒரு வீதிக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு புனரமைப்பு செய்யப்பட்டது.
-
இதனால், இரண்டு வீதிகளும் அரைகுறையாக காணப்படுவதாக மக்கள் தெரிவித்தனர்.
மக்களின் கோரிக்கை
இதனை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்,
-
வைரவர் வீதியை முழுமையாக புனரமைக்க வேண்டும்,
-
மற்றைய வீதிக்கு தனி நிதி ஒதுக்கி தனியாக புனரமைப்பு மேற்கொள்ள வேண்டும்,
-
குறித்த முறைகேடுகள் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்
என வலியுறுத்தினர்.
இந்த சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுப்பார்களா என்பது தொடர்பில், அப்பகுதி மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!