முச்சக்கரவண்டியில் வந்தவர்களால் நபர் ஒருவர் வெட்டிப் படுகொலை
கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஜம்பட்டா வீதியில் நேற்று பட்டப்பகலில் நபர் ஒருவர் முச்சக்கர வண்டியில் வந்த நால்வரால் கூரிய வாள் மற்றும் கத்தி கொண்டு வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று பிற்பகல் 1.15 மணியளவில் ஜம்பட்டா வீதியில், கல்பொத்த வீதிக்கு திரும்பும் இடத்துக்கு அருகே உள்ள கடைக்கு முன்னால் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் 33 வயதுடைய ஜோன் பீட்டர் ரெக்ஸி றீகன் என்ற நபரே உயிரிழந்துள்ளதாகவும் பழிக்கு பழிதீர்க்கும் முகமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர கேசரிக்கு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் அறிய முடிவதாவது, நேற்று பிற்பகல் 1.15 மணியளவில் முச்சக்கர வண்டியொன்றில் நால்வர் வாள், கத்திகளுடன் வந்துள்ளனர்.
அவர்கள் ஜம்பட்டா வீதியில், கல்பொத்த வீதிக்கு திரும்பும் இடத்துக்கு அருகே உள்ள கடைக்கு முன்னால் இருந்த றீகனை சரமாரியாக வெட்டி சாய்த்துள்ளனர். இதன் போது ஸ்தலத்திலேயே றீகன் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து சந்தேக நபர்கள் நால்வரும் தாம் வந்த முச்சக்கர வண்டியிலேயே தப்பிச் செல்ல முற்பட்ட போதும் அது சாத்தியப்படவில்லை. அந்த முச்சக்கர வண்டியை ஸ்தலத்திலேயே போட்டுவிட்டு அவர்கள் நால்வரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவத்தையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்தனர்.
இதன் போது தப்பிச் சென்ற சந்தேக நபர்களை அடையாளம் கண்ட பொலிஸார் அவர்களது சகோதரன் ஒருவனை றீகன் கொலை செய்ததான குற்றச்சாட்டு உள்ளதாகவும் அது தொடர்பில் கைதாகி கடந்த ஒருவாரத்துக்கு முன்னரேயே அவர் பிணையில் வெளியே வந்துள்ளமையையும் அவர்கள் கண்டறிந்தனர்.
இந் நிலையில் இது பழிக்கு பழிவாங்கும் நோக்கோடு புரியப்பட்ட கொலை என சந்தேகிக்கும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கொலை செய்யப்பட்டுள்ள றீகன் என கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவிலேயே வசித்து வரும் நபருக்கு எதிராக ஒரு மனிதப் படுகொலை, இரு கொள்ளைகள் மற்றும் கைக்குண்டு வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச் சாட்டுக்கள் தொடர்பில் நீதிமன்றங்களில் வழக்குகள் உள்ளதாக பொலிஸ் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இதனிடையே இந்த கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் நால்வரில் இருவரை நேற்று மாலை 6.00 மணியளவில் கொட்டாஞ்சேனை பொலிஸார் கைது செய்தனர். 26, 21 வயதுடைய கொட்டாஞ்சேனை பிரதேசத்தை சேர்ந்தோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
https://youtu.be/L5yM9gOq0KY
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!