சூயஸ் கால்வாயின் சரித்திரம் (நிலமெல்லாம் ரத்தம் - 66)
20 Sep, 2026
ஆனால், தொழுவதற்கு என்று புறப்பட்டு வந்த முஸ்லிம்கள், உரிய நேரத்தில் தொழுதே தீரவேண்டும் என்கிற உறுதி கொண்டவர்கள். ஆகவே, என்ன ஆனாலும் சரி என்று தம் வழக்கமான தொழுகையைத் தொடங்கினார்கள்.
காத்திருந்த குறைஷிகள் அவர்களைத் தாக்கத் தொடங்கினார்கள். நிம்மதியாகத் தொழக்கூட முடியவில்லையே என்கிற துக்கம் கோபமாக உருக்கொண்டது, அவர்களில் ஒரே ஒருவருக்குத்தான்.
அவர் பெயர் ஸஅத். இயற்கையிலேயே போர்க்குணம் மிக்க ஸஹ்ரா என்கிற வம்சத்தில் வந்தவர் அவர்.
தமது மூர்க்க சுபாவங்களை விட்டொழித்து, முகம்மதின் வழிகாட்டுதல்களை ஏற்று அமைதியாகத் தம் கடமைகளில் ஈடுபட்டுவந்த ஸஅத், அன்றைக்குச் சகிக்கமுடியாத கோபம் மேலோங்க, ஆயுதம் ஏந்தினார்.
ஒட்டகத்தின் தாடை எலும்பு.உருட்டுக்கட்டைகளுடனும் தடிகளுடனும் வந்திருந்த குறைஷிகள் ஸஅத்திடமிருந்து அப்படியோர் ஆயுதத்தை எதிர்பார்க்கவில்லை.
அவர்களால், அந்த எலும்புத் தாக்குதலைச் சமாளிக்கவும் முடியவில்லை.இஸ்லாத்தின் சரித்திரத்தில் சிந்தப்பட்ட முதல் ரத்தம் அது. குறைஷிகளின் ரத்தம். ஸஅத்தின் கோபத்தின் விளைவாக உதிர்ந்த ரத்தம்.ஆனால் சம்பவத்தைக் கேள்விப்பட்ட முகம்மது, தற்காப்புக்காகக் கூட இனி யாரையும் தாக்கக்கூடாது என்று அவர்களை எச்சரித்துவிட்டார்.
தோதாக, அச்சம்பவம் நடைபெற்றதற்குச் சற்றேறக்குறைய சமமான காலத்தில் அவருக்கு அருளப்பட்ட இறை வசனங்களும் முகம்மதின் கருத்தையே பிரதிபலிப்பதாக இருந்ததைக் கவனிக்கவேண்டும்.
ஓர் உதாரணம் : “நபியே, நிச்சயமாக அவர்கள் சூழ்ச்சி செய்கிறார்கள். அவர்கள் கூறுவதையெல்லாம் சகித்துக்கொண்டு கண்ணியமான முறையில் அவர்களை விட்டு விலகி இருங்கள்.
இந்நிராகரிப்போருக்கு அவகாசம் அளியுங்கள். அதிகமல்ல; சொற்ப அவகாசம் போதும்.” (குர்ஆனின் இறுதி அத்தியாயங்களில் ஒன்றான அத்தாரிக் (உதய தாரகை) என்னும் பகுதியில் வருவது இது. (86:17.) ஆனால் முகம்மதுக்கு மிகத் தொடக்க காலத்திலேயே இது அருளப்பட்டுவிட்டது.)
கண்ணியமாக விலகியிருங்கள் என்கிற உத்தரவுக்கு, திரும்பத் தாக்காதீர்கள் என்று அர்த்தம்.ஒரு சௌகரியம், இஸ்லாத்தை நம்பி ஏற்றுக்கொண்ட அந்தச் சிறு குழுவினருக்கு ஆரம்பத்திலிருந்தே முகம்மது மீதும், அவர் மூலமாக வழங்கப்படும் வேதத்தின் வரிகள் மீதும் ஒரு சந்தேகமும் ஒருக்காலும் ஏற்பட்டதில்லை.
வழங்கப்படும் ஒவ்வொரு வரியையும் அதன் முழு அர்த்தத்துடன் வாழ்க்கையில் கடைப்பிடிப்பது என்கிற முடிவில் இருந்தார்கள்.
ஆகையால், அடுத்தடுத்த சந்தர்ப்பங்களில் குறைஷிகளால் எத்தனை துன்பங்களுக்கு உள்ளானபோதும் கையையும் வாயையும் கட்டிக்கொண்டு சும்மாவே இருக்கப் பழகிக்கொண்டார்கள்.என்னதான் இருக்கிறது உங்கள் இஸ்லாத்தில் என்று விரும்பிக் கேட்டவர்களிடம் மட்டுமே முகம்மது விளக்கம் அளித்தார். குர்ஆனிலிருந்து சில வரிகளை ஓதிக் காண்பித்தார்.
நாலு வார்த்தை பேசி அவமானப்படுத்தலாம் என்று வந்தவர்கள், முகம்மது ஓதிக்காண்பித்ததும் பேச்சிழந்து இஸ்லாத்தில் இணைந்துவிடுவார்கள்.
இது மிகையல்ல. ஆரம்பகாலங்களில் ஏராளமான முறை இத்தகைய சம்பவங்கள் நடந்திருக்கின்றன.
முகம்மதே இப்படி இருக்கையில் அவரது தோழர்கள் (முகம்மது தொண்டர்கள் வைத்துக்கொண்டதில்லை. எல்லாருமே அவருக்குத் தோழர்கள்தாம்.) வேறு எப்படி இருப்பார்கள்?ஆயினும் இஸ்லாம் பரவத்தொடங்கி மூன்றாண்டுகள் நிறைவடைந்தபோது, அம்மதத்தில் இருந்தோரின் மொத்த எண்ணிக்கை வெறும் நாற்பது பேர் மட்டுமே.
நான்காவது ஆண்டின் தொடக்கத்தில்தான் பகிரங்கமாகப் பிரசாரம் செய்யலாம் என்கிற இறை உத்தரவு முகம்மதுக்கு வந்தது. அதுவுமே கூட “உங்கள் உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்து அழைப்பு விடுங்கள்” என்கிற உத்தரவுதான்.
முதல்முதலாக இஸ்லாம் என்றொரு மார்க்கம் குறித்த வெளிப்படையான அறிவிப்பும் அதில் இணைய வரும்படியான அழைப்பும் அந்த நான்காவது ஆண்டில்தான் முகம்மது நபியால் செய்யப்பட்டது.இஸ்லாம் என்கிற பதம் முதல்முதலில் பாலஸ்தீனைச் சென்றடைந்ததும் அப்போதுதான்.
– பா. ராகவன்
அரேபியர்களின் சரித்திரத்தில் முகம்மது ஓர் அத்தியாயம் அல்ல. மாறாக, அவர்களது சரித்திரம் (நிலமெல்லாம் ரத்தம் – 13 )
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!