news@ilakkiyainfo.com

பிரிவுகள்

முல்லைத்தீவின் அபிவிருத்திக்கு தடையாக இரண்டு தமிழ்க் கட்சிகள்

10 Jan, 2026

கரைத்துறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் யோகேஸ்வரன் அனோஜன் குற்றச்சாட்டு

முல்லைத்தீவு:
முல்லைத்தீவு மாவட்டம் இதுவரை காலமும் போதிய அளவில் அபிவிருத்தி அடையாமல் இருப்பதற்கு, மாவட்டத்தில் செயல்பட்டு வரும் இரண்டு தமிழ்க் கட்சிகளே முக்கிய காரணம் என கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் உப தவிசாளர் யோகேஸ்வரன் அனோஜன் குற்றம்சுமத்தியுள்ளார்.

அரச அதிகாரி ஒருவரை அச்சுறுத்தியதாக வெளியான செய்தி தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அபிவிருத்தி பணிகளில் தடையா?

இதுகுறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“எனது வட்டாரத்தில் வீதி அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பிரதேச சபை செயலாளரிடம் யே.சி.பி (JCB) கனரக இயந்திரம் ஒன்றை கோரி வருகிறேன். ஆனால் இதுவரை அந்த இயந்திரம் வழங்கப்படவில்லை.

எனது கிராம மக்கள், வீதி அபிவிருத்தி, மின்விளக்கு பொருத்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பெற்றுத்தரவே என்னை பிரதேச சபைக்கு அனுப்பியுள்ளனர். அபிவிருத்தி செய்வதே என் முதன்மை நோக்கம்,” என அவர் கூறினார்.

“அச்சுறுத்தல் இல்லை” – உப தவிசாளர் விளக்கம்

பிரதேச சபை இயந்திரம் வழங்கப்படாத நிலையிலும் அபிவிருத்தி பணிகளை நிறுத்தவில்லை என்றும், மாற்று இயந்திரம் ஒன்றை பயன்படுத்தி வீதி அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க முயன்றதாகவும் அவர் தெரிவித்தார்.

“நான் வீதி வேலை செய்த இடத்திற்கு குறித்த அரச அதிகாரி, சில உத்தியோகத்தர்களுடன் வந்து பணிகளைத் தடுக்க முயன்றார். அந்த இடத்தில் நான், ‘கனரக இயந்திரம் தரவில்லை என்றாலும், எங்களை வேலை செய்ய விடுங்கள்’ என்று மட்டுமே கூறினேன்.

அவரை அடிப்பதாகவோ, கொலை அச்சுறுத்தல் விடுத்ததாகவோ கூறப்படும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை. அதுதான் உண்மைச் சம்பவம்,” என உப தவிசாளர் விளக்கமளித்தார்.

அவதூறு பரப்பப்படுவதற்கான காரணம்

மேலும் அவர் கூறுகையில்,
“முல்லைத்தீவு மாவட்ட கரைத்துறைப்பற்று பிரதேச சபை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதை நான் மகிழ்ச்சியுடன் பார்க்கிறேன். அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் மக்களுக்கான அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து வருகிறது.

எங்கள் கிராமத்திற்கும் அபிவிருத்தி கிடைக்கும் என்ற நம்பிக்கையிலேயே இந்த நிர்வாக மாற்றத்தை ஏற்றுக்கொண்டோம். ஆனால், இங்கு செயல்படும் இரண்டு தமிழ்க் கட்சிகள் மக்களுக்கு சேவை செய்வதை விட, தங்கள் கட்சியை வளர்ப்பதிலேயே கவனம் செலுத்துகின்றன,” என்றார்.

கடும் குற்றச்சாட்டு

அவர் தொடர்ந்தும்,
“இந்த இரண்டு கட்சிகளே முல்லைத்தீவு மாவட்டம் அபிவிருத்தி அடையாமல் இருப்பதற்கான பிரதான காரணம். மக்களை ஏமாற்றி, தங்கள் அரசியல் வளர்ச்சியையே முன்னிலைப்படுத்தி வந்துள்ளனர்.

இவ்வாறான கட்சிகளுடன் இணைந்து செயல்படும் கரைத்துறைப்பற்று பிரதேச சபை செயலாளர், இங்கு நடைபெறும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு தடையாக இருக்கிறார்,” எனவும் குற்றம்சாட்டினார்.

எதிர்கால இலக்கு

“எமது பிரதேசத்தை பல மடங்கு அபிவிருத்தி அடையச் செய்வதே எங்கள் நோக்கம். மத்திய அரசாங்கத்திடமிருந்து முல்லைத்தீவு மாவட்டத்திற்கு ஆறு வீதிகள் கிடைத்துள்ளன. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கரைத்துறைப்பற்று பிரதேச சபையை கைப்பற்றிய பின்னர் நடந்த சம்பவங்களே தற்போது இவ்வாறு திரித்து வெளியிடப்படுகின்றன,” என உப தவிசாளர் யோகேஸ்வரன் அனோஜன் தெரிவித்தார்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!