news@ilakkiyainfo.com

பிரிவுகள்

யானையை வைத்து யாசகம் பெற்ற நாடு ! : இலங்கையின் மூக்குடைத்த தாய்லாந்து

07 Jul, 2023
யானை ஒன்றையே பராமரிக்கத் தெரியாத இலங்கை அரசாங்கம் எப்படி இரண்டு கோடி மக்களை நெருக்கடிகளிலிருந்து காப்பாற்றப் போகிறது என்ற வசனங்கள் கடந்த இரு வாரங்களாக சமூக ஊடகங்களில் அதிகரித்து வருகின்றன. இதற்கு காரணம், தாய்லாந்து அரசாங்கத்தின் நன்கொடையாக 22 வருடங்களுக்கு முன்பு இலங்கை அரசாங்கத்துக்கு வழங்கப்பட்ட முத்துராஜா அல்லது சக்சூரின் என்ற யானையை இலங்கை அரசாங்கம் பராமரிக்க தவறியமையாகும். இதன் காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை 2ஆம் திகதி தாய்லாந்து அரசாங்கம் விசேட விமானத்தின் மூலம் முத்துராஜாவை தனது நாட்டுக்கு வரவழைத்துக்கொண்டது. இனி எக்காரணம் கொண்டும் முத்துராஜா யானையை இலங்கைக்கு அனுப்பமாட்டோம் என தாய்லாந்து சுற்றாடல் அமைச்சர் உறுதியாக கூறிவிட்டார். இந்த சம்பவத்தின் மூலம் இலங்கையானது விலங்குகள் பராமரிப்பு மற்றும் பாதுகாக்கும் கொள்கைகளிலிருந்து விலகி நிற்பதாக பலத்த விமர்சனங்கள் எழுந்துள்ளன. தாய்லாந்து அரசாங்கம் தான் நன்கொடையாக வழங்கிய முத்துராஜாவை மீளப்பெற்றமை அரசாங்கத்துக்கு கெளரவ பிரச்சினையாகிவிட்டது. முத்துராஜாவை மீளவும் எமக்கு ஒப்படைக்க வேண்டும் என்ற கந்த விகாரையின் பெளத்த பிக்குவின் கோரிக்கையை தாய்லாந்து நிராகரித்துவிட்டது. நோய்வாய்ப்பட்டிருந்த முத்துராஜா யானை தாய்லாந்தின் லம்பன் மாநிலத்தில் அமைந்துள்ள யானைகள் பாதுகாப்பு மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டு, அதற்கு சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முத்துராஜாவுக்கு கண்புரை ஏற்பட்டுள்ளதுடன், அதன் முன் இடது கால் பாதிக்கப்பட்டு வளைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தாய்லாந்து அரசாங்கம் தகவல் வெளியிட்டுள்ளது. அது மட்டுமின்றி, அதன் முதுகில் தொற்றினால் புண்கள் ஏற்பட்டுள்ளதாகவும் உள்ளங்கால் மற்றும் நகங்களில் பாதிப்பு உருவாகியுள்ளதாகவும் தாய்லாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால், கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதையாக இலங்கை முத்துராஜாவை பரிசோதித்திருந்த இலங்கை கால்நடை வைத்தியர்கள் குழு அந்தளவுக்கு பாதிப்பு எதுவும் இல்லை என சமாளித்துள்ளனர். இதேவேளை தாய்லாந்து ஏற்கனவே இலங்கைக்கு வழங்கிய இரு யானைகளின் நிலைமைகள் குறித்து ஆராய முடிவெடுத்துள்ளது. குறித்த யானைகளின் உடல் ஆரோக்கியம் குறித்து ஆராய்வதற்கு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் கால்நடை மருத்துவர் குழு ஒன்றை இலங்கைக்கு அனுப்ப தாய்லாந்து அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்நிலையில், நன்கொடையாக கொடுத்த யானையை மீளப்பெற்றுக்கொண்ட தாய்லாந்து இலங்கைக்கு ‘காசோவாரி ‘(Double Wattled Cassowary) என்ற பறவையினத்தின் மூன்று பறவைகளை இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது. அதாவது 'யானையை பராமரிக்க முடியாத நீங்கள் இந்த பறவை இனத்தையாவது பராமரித்துக் காட்டுங்கள்' என்ற செய்தியை இலங்கை அரசாங்கத்துக்கு கூறுவது போன்று அமைந்துவிட்டது. இது இலங்கை அரசாங்கத்துக்கு மேலும் ஒரு தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்திவிட்டது. இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான பறவைகள் பரிமாற்றத் திட்டத்தின் கீழேயே இந்த பறவையினங்கள் அனுப்பி வைக்கப்பட்டன என இலங்கை அரசாங்கம் சமாளித்தாலும் தாய்லாந்தின் பதிலடியாகவே இதை பார்க்க வேண்டியுள்ளது. கடந்த 5ஆம் திகதி புதன்கிழமை இரவு 11 மணியளவில் மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் மூலம் இரண்டு ஆண் காசோவரி பறவைகளும் 9 மாதங்கள் வயதுடைய ஒரு காசோவாரி பறவை குஞ்சும் இலங்கையை வந்தடைந்தன. சுமார் 5 அடி உயரமும் 60 கிலோ எடையும் கொண்ட மிக அபூர்வ பறவையினத்தைச் சேர்ந்த இந்த காசோவாரி பறவைகளால் பறக்க முடியாது என்பது முக்கிய விடயம். இவை விமான நிலையத்திலிருந்து தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு அனுப்பப்பட்டன. எனினும், முத்துராஜா யானை விவகாரம் இப்போது நாடாளுமன்றத்தில் பேசும் அளவுக்கு பரபரப்பாகியுள்ளமை முக்கிய விடயம். குறித்த யானையை உரிய முறையில் பராமரிக்காத காரணத்தினால் தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் பாதிக்கப்படாது என பிரதமர் நாடாளுமன்றத்தில் கூறுமளவுக்கு நிலைமை விபரீதமாகிவிட்டதா என கேட்கத் தோன்றுகிறது. இதற்கு காரணங்கள் பல உள்ளன. ஏனென்றால், உலகில் யானைகளை கடவுளாக போற்றும் நாடு தான் தாய்லாந்து. யானைகளின் நாடு என தாய்லாந்துக்கு ஒரு பெயர் உள்ளது. உலகில் 'வெள்ளை யானைகள் தேசம்' (உண்மையில் அதன் நிறம் இளஞ்சிவப்பு) என தாய்லாந்து வர்ணிக்கப்படுகிறது. இந்த இளஞ்சிவப்பு வெள்ளை யானைகளை அந்நாட்டு மக்கள் கடவுளாக வழிபடுகின்றனர். அதை புனித சின்னமாக கருதுகின்றனர். தங்கத் தட்டில்தான் வெள்ளை யானைகளுக்கு உணவளிக்கப்படுகிறது. மேலும். அரசருக்குரிய அனைத்து வசதிகளும் அவற்றுக்கும் செய்து தரப்படுகிறது. தவிர, புதிதாக வெள்ளை யானையை கண்டுபிடிப்போருக்கு வரிச் சலுகை அளிக்கப்பட்டு அரசு நிலங்களும் பரிசாக அளிக்கப்படுகிறது. தாய்லாந்து நாட்டின் தந்தை என்று அழைக்கப்படும் மொங்குட் அரசரின் தலைமையில் வடிவமைக்கப்பட்ட தாய்லாந்தின் முதல் தேசியக் கொடியில் வெள்ளை யானையின் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆகவே, இந்தளவுக்கு யானைகளுக்கு கெளரவத்தையும் மரியாதையையும் செலுத்தும் தாய்லாந்து நன்கொடையாக வழங்கிய யானைகளை இலங்கை அரசாங்கம் எவ்வாறு பராமரித்திருக்க வேண்டும்? ஆனால், இந்த முத்துராஜா யானை விவகாரத்தால் இலங்கை இன்னுமொரு நெருக்கடியிலும் சிக்கியுள்ளது. அதாவது தாய்லாந்து தவிர்ந்து ஏனைய நாடுகள் நட்பு ரீதியாக நன்கொடையாக வழங்கிய ஏனைய விலங்கினங்களையும் இலங்கை இப்படித்தான் பராமரிக்கின்றதா, விலங்குகளின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் தனது பொறுப்பிலிருந்து விலகியுள்ளதாக என்ற சர்ச்சைகள் எழுந்துள்ளன. தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் உள்ள பெரும்பாலான விலங்குகள் மற்றும் பறவைகள் இலங்கைக்கு நன்கொடையாகவே கிடைக்கப்பெற்றவை. ஏனெனில், அவ்வாறான விலங்குகள் மற்றும் பறவைகள் இலங்கையின் வனப் பிரதேசங்களில் இல்லை. ஆகவே, அவற்றை வழங்கிய நாடுகளும் எதிர்காலத்தில் தமது மருத்துவ குழுவினரை அனுப்ப தயாராகி வருகின்றனவோ தெரியவில்லை. ஆனால், உண்மையில் முத்துராஜா யானைக்கு என்னதான் நடந்தது? தாய்லாந்து அரசாங்கத்தால் (மன்னர்) 2001ஆம் ஆண்டு சக்சூரின் என்ற பெயருடைய இந்த யானை இலங்கை அரசாங்கத்துக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. பின்னர் இந்த யானை அளுத்கம கந்த விகாரைக்கு புண்ணிய நடவடிக்கைக்காக வழங்கப்பட்டது. அங்கு அதன் பெயர் 'முத்துராஜா' என மாற்றப்பட்டது. வருடத்துக்கு ஒரு தடவை விகாரையால் முன்னெடுக்கப்படும் பூஜை நிகழ்வுகளின்போது முத்துராஜா அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படும். அதன் பிறகு அடுத்த வருடம் வரும் வரை இந்த யானையை சும்மா கட்டிப்போட்டு தீனி போடுவது கடினம் என்ற காரணத்தினால் பாரிய மரங்களை அகற்றுவதற்கு முத்துராஜா பயன்படுத்தப்பட்டுள்ளது என விலங்கு உரிமைகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் குழுவினர் விடயத்தை அம்பலப்படுத்தியுள்ளனர். மரம் வெட்டும் குழுவினருடன் பணியாற்ற எவ்வாறு ஒரு விகாரையில் உள்ள யானை ஒப்படைக்கப்பட்டிருக்க முடியும்? அவ்வாறு பயன்படுத்தப்பட்டாலும் அவ்விடத்தில் அதற்கு ஏற்பட்ட ரணங்களை ஆற்றுவதற்குக் கூட விகாரையில் உள்ள பிக்குவுக்கு மனம் இருக்கவில்லையா? ஆக, நட்பின் நிமித்தம் இலங்கைக்கு வழங்கப்பட்ட ஒரு யானை முதலில் விகாரைக்கு வழங்கப்படுகிறது. பூஜை தேவைகளுக்காக வருடத்துக்கு ஒரு தடவை மாத்திரமே இந்த யானை பயன்படுத்தப்படுவதால் மேலதிக வருமானத்துக்காக அது மரம் வெட்டும் குழுவினருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது எவ்வளவு பெரிய அநியாயம்? யானையை வைத்து யாசகம் பெற்றதற்கு இது சமன். இதை ஆராய்ந்து உரியவர்களின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க இன்னும் அரசாங்கம் முன்வரவில்லை. அப்படியானால், குறித்த விகாரையின் தலைமை பிக்குதான் இதற்கு பதில் கூற வேண்டும். யானைக்காக பிக்குவின் மீது நடவடிக்கை எடுப்பதா என பெளத்தர்கள் சீற்றமடையக்கூடும். இப்படித்தான் இலங்கையின் ஆட்சி மற்றும் நிர்வாக இலட்சணம் உள்ளது. எது எப்படியோ யானை ஒன்றை பராமரிக்கத் தெரியாத நாட்டுக்கு பறவைகள் மூன்றை வழங்கி 'இதையாவது பராமரித்துக் காட்டுங்கள்'  என தாய்லாந்து இலங்கையின் மூக்குடைத்துள்ளது என்பதே உண்மை.
-சி.சி.என்-

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!