தீவிரமாகும் எரிபொருள் நெருக்கடி
19 Oct, 2026
இஸ்ரேலுடன் தொடர்புடையவை என அவர்கள் கூறும் பல கப்பல்கள் மீது ஹூத்திகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்
அதற்குப் பிறகு அவர்கள் தாக்கிய இரண்டு கப்பல்கள் மூழ்கின, பல டஜன் கப்பல்கள் சேதமடைந்துள்ளன.
கடந்த 2024 மார்ச் மாதத்தில் பார்படாஸ் கொடியுடன் சென்ற ட்ரூ கான்பிடன்ஸ் என்ற சரக்குக் கப்பல் மீது நடந்த ஹூத்தி ஏவுகணைத் தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.
இஸ்ரேலுக்கு சொந்தமான, இஸ்ரேலிய கொடியைத் தாங்கிய அல்லது இஸ்ரேலால் இயக்கப்பட்ட அல்லது இஸ்ரேல் துறைமுகங்களுக்குச் செல்வதாக அவர்கள் நம்பும் கப்பல்களைக் குறிவைப்பதாக அந்தக் குழு கூறுகிறது. ஆனால் ஹூத்திகள் தாக்குதல் நடத்திய பல கப்பல்களுக்கு இஸ்ரேலுடன் எந்தத் தொடர்பும் இல்லை.
கடந்த 2024 செப்டம்பரில், அமெரிக்க கடற்படையின் கூற்றுப்படி ஹூத்திகள் அந்தப் பகுதியில் இருக்கும் அமெரிக்க கடற்படை கப்பல்கள் மீது "மிகவும் நுட்பமான தாக்குதலை" நடத்தினர். ஆனால் அவர்களது ஏவுகணைகள் அனைத்தும் சுட்டுவீழ்த்தப்பட்டன.
இதற்கு பதிலளிக்கும் வகையில், அமெரிக்க படைகள் ஏமனில் இருக்கும் ஹூத்தி தளங்கள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்தத் தளங்களில் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்த அந்தக் குழு பயன்படுத்தி வந்த ஆயுதங்களின் பாகங்கள் இருந்ததாக அமெரிக்க ராணுவம் கூறுகிறது.
ஏமன் மீது ஏழு வாரங்களாக தொடர்ந்து தீவிர தாக்குதல்களை அமெரிக்கா மேற்கொண்டது. அதைத் தொடர்ந்து ஹூத்திகள் அமெரிக்காவுடன் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு மே மாதத்தில் ஒப்புக்கொண்டனர்.
சரக்கு கப்பல் ஒன்றில் ஹூதி வீரர்கள்
நவம்பர் 2023இல் பிரிட்டனுக்கு சொந்தமான ஜப்பான் வழிநடத்திய கப்பலை செங்கடலில் ஹூத்தி வீரர்கள் சிறை பிடித்தனர்
ஆனால், ஏமன் மீது பல சுற்று பதிலடி தாக்குதல்களை நடத்தியுள்ள இஸ்ரேல் மீதான தாக்குதல்களை நிறுத்துவது இந்த ஒப்பந்தத்தில் இடம்பெறவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.
ஜூலை, 2025இல் ஒரு வாரத்தில் மேலும் இரண்டு கப்பல்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு மூழ்கடிக்கப்பட்டன. மேஜிக் சீஸ் மற்றும் எட்டர்னிட்டி-சி என்ற அந்த இரண்டும் லைபீரிய கொடிகளை தாங்கிய, கிரேக்கர்களால் நடத்தப்பட்ட கப்பல்கள். அவை இஸ்ரேலுக்கு சென்று கொண்டிருந்ததாக அந்தக் குழு சொல்கிறது.
இந்தத் தாக்குதல்கள், "கடற்பயண சுதந்திரத்திற்கும், பிராந்திய பொருளாதார மற்றும் கடல் போக்குவரத்துப் பாதுகாப்புக்கும் இரான் ஆதரவு பெற்ற ஹூத்திகளால் ஏற்படும் அபாயத்தைக் காட்டுவதாக" அமெரிக்க வெளியுறவுத் துறை கண்டனம் தெரிவித்தது.
ஹூத்தி தாக்குதல் அபாயம் பல கப்பல் நிறுவனங்களை செங்கடலைத் தவிர்க்க வைத்துள்ளது.
சர்வதேச அளவில் கப்பல் மூலம் கொண்டு செல்லப்படும் சரக்குகளில் 15% செங்கடலைப் பயன்படுத்துகின்றன. எனவே இது சர்வதேச வணிகத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹூத்தி புரட்சியாளர்கள் விஷயத்தில் அமெரிக்காவும் பிற நாடுகளும் செய்வது என்ன?
ஏமனை சுற்றிய பகுதிகளில் கடற்பாதைகளைப் பாதுகாக்க அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் மேலும் 12 நாடுகளின் கடற்படைகள் ஆபரேஷன் பிராஸ்பெரிட்டி கார்டியன் என்ற பெயரில் ஒரு பாதுகாப்பு பணியைத் தொடங்கியுள்ளன.
கடந்த 2024 ஜனவரி முதல் ஏமனில் உள்ள ஹூத்தி தளங்கள் மீது அமெரிக்க மற்றும் பிரிட்டன் படைகள் பல வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன.
ஹூத்தி தாக்குதல்களுக்கு பதிலடி தரும் வகையில் அவர்களது தளங்களின் மீது இஸ்ரேலும் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
அமெரிக்காவின் தாக்குதல்களில் நீண்ட தூர ஸ்டெல்த் வகை குண்டு வீசும் விமானங்களும் அடங்கும். இவை ஆயுதங்கள், பாகங்களைச் சேமித்து வைத்திருக்கும் நிலத்தடி தளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தின.
கடந்த 2024 அக்டோபர் தாக்குதல்கள் அமெரிக்காவால் அதன் எதிரிகள் "எட்ட முடியாத இடத்தில்" வைக்க விரும்பும் இடங்களைக்கூட தாக்க முடியும் என்பதைக் காட்டியதாக அமெரிக்க முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் லாய்ட் ஆஸ்டின் தெரிவித்தார்.
இஸ்ரேலுக்கு எதிரான "எதிர்ப்பின் அச்சு" அமைப்பில் ஹூத்திகள் ஓர் அங்கமாக உள்ளனர்
அதிபர் ஹாதியின் ஆட்சியின்போது, அதிகாரத்தில் இருந்து தூக்கி எறியப்பட்ட சலே மற்றும் அவருக்கு விசுவாசமான படையினருடன் ஹூத்திகள் ஒரு கூட்டணியை உருவாக்கிக்கொண்டனர். அதன் பின்னர் அவர்கள் வடக்கு மாகாணமான சடாவின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றி, ஏமன் தலைநகர் சனாவை ஆக்கிரமித்தனர்.
கடந்த 2015ஆம் ஆண்டில், இந்தப் புரட்சியாளர்கள் மேற்கு ஏமனின் பெரும்பகுதியைக் கைப்பற்றி, அதிபர் வெளிநாடு தப்பிச் செல்லக் காரணமாகினர்.
ஹூத்திகள் ஏமனை முழுமையாக ஆக்கிரமித்து அதைத் தனது எதிரியான இரானின் துணை நாடாக்கிவிடுவார்களோ என அண்டை நாடான செளதி அரேபியா அச்சமடைந்தது.
அது போரில் தலையிட்ட அரசுக் கூட்டணியை உருவாக்கியது. ஆனால் பல ஆண்டுகளாகத் தொடரும் வான்வழித் தாக்குதல்களும், தரைவழித் தாக்குதல்களும் ஹூத்திகள் ஆக்கிரமித்த பகுதிகளில் இருந்து அவர்களை அப்புறப்படுத்தவில்லை.
இப்போது செளதி அரேபியா ஹூத்திகளுடன் ஓர் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்த முயன்று வருகிறது. மேலும், ஐ.நா மத்தியஸ்தம் செய்த போர் நிறுத்தம் 2022 ஏப்ரல் முதல் அமலில் உள்ளது.
ஆயுத மோதல் நிகழ்விடம் மற்றும் நிகழ்வு தரவு திட்டத்தின்படி (Armed Conflict Location & Event Data Project - ACLED), இந்தப் போர் 160,000-க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்றுள்ளது, 40 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
கடந்த 2022இல் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைநகர் அபுதாபியை குறிவைத்து அனுப்பப்பட்ட டிரோன் ஒன்றின் சிதைவுகள்
ஜூன் 2025இல் இரானின் உள்ள அணு ஆயுத மற்றும் ராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல் நடத்தியது. இதன் பின்னர் இஸ்ரேலை குறிவைத்து வான்வழித் தாக்குதல்கள் மூலம் இரான் பதிலடி அளித்தது.
அமெரிக்கா மத்தியஸ்தம் செய்த போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து 12 நாள் போர் முடிவுக்கு வந்தது. இந்தப் போர் இரானின் அணு ஆயுத ஆற்றலை கணிசமாகப் பலவீனப்படுத்தியிருக்கலாம்.
ஹூத்திகளின் மற்றொரு கூட்டாளியான லெபனானின் ஹெஸ்பொலா மீது 2024 செப்டம்பருக்கு பிறகு தீவிரமடைந்த இஸ்ரேலின் தொடர் தாக்குதலைத் தொடர்ந்து இது நடந்தது.
இரான் மற்றும் ஹெஸ்பொலா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள், ஹூத்திகளுக்கு அவர்கள் அளிக்கக்கூடிய உதவியை எந்த அளவு பாதிக்கக்கூடும் என்பதில் தெளிவில்லை.
இஸ்ரேல் மீதான் தொடர்ச்சியான ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களுக்கு பதிலடியாக 2025 ஜூலையில் இஸ்ரேல் ராணுவம் ஏமனில் ஹூத்திகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.
இரான் ஆதரவு பெற்ற ஹூத்திகள் "தங்களது செயல்களுக்கு ஒரு பெரிய விலையைத் தர நேரிடும்," என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கேட்ஸ் எச்சரித்துள்ளார்.
"ஏமனின் விதி, டெஹ்ரானின் விதியைப் போன்றதுதான். இஸ்ரேலுக்கு தீங்கு விளைவிக்கும் யாராக இருந்தாலும் தீங்குக்கு உட்படுத்தப்படுவார்கள்,
இஸ்ரேலுக்கு எதிராக கரத்தை உயர்த்துபவர்களின் கரம் வெட்டப்படும்," எனத் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்தார்.
ஏமனின் எவ்வளவு பகுதிகளை ஹூத்திகள் கட்டுப்படுத்துகின்றனர்?
ஹூத்திகள் சனா மற்றும் செங்கடல் கடற்கரைப்பகுதி உள்பட ஏமனின் வடக்கு-மேற்கு பகுதியைக் கட்டுப்படுத்துகின்றனர்.
ஏமனின் பெரும்பகுதி மக்கள் இந்தப் பகுதிகளில் வசிக்கின்றனர். ஹூத்திகள் இந்தப் பகுதியில் வரி வசூலித்து, பணம் அச்சிடும் ஓர் அரசை நடத்தி வருகின்றனர்.
சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஏமன் அரசு, தெற்குப் பகுதியில் உள்ள ஏடன் துறைமுகத்தில் அமைந்துள்ளது.
கடந்த 2022இல் அதிபர் ஹாதி அதிகாரத்தை ஒப்படைத்த எட்டு உறுப்பினர் கொண்ட அதிபர் தலைமை மன்றம் இதைக் கண்காணிக்கிறது.
-
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!