யாழ். மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள ரூ. 36 கோடி நிதியை மலையகத்திற்கு வழங்குங்கள்
இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் யாழ்ப்பாணத்திற்காக ரூ. 36 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அந்தப் பணம் யாழ்ப்பாணத்திற்கு தேவையில்லை அதனை தோட்டப்புற மக்களுக்கு வழங்குமாறும் யாழ். மாவட்ட எம்.பி. அர்ச்சுனா இராமநாதன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அத்துடன் மக்களுக்காக தமது உயிரைத் தியாகம் செய்யும் இராணுவ வீரர்களை இந்த அரசாங்கம் சிப்பாய்கள் என அழைப்பதை விடுத்து இராணுவ வீரர்கள் என கௌரவமாக அழைக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
பாராளுமன்றத்தில் இன்று (05) இடம் பெற்ற 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இறுதி நாள் விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
”வட மாகாணத்திற்கு ரூ. 36 கோடி நிதி அண்மையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் ரூ. 25,000 நிதி வழங்கப்படுகின்றது.
முழந்தால் அளவுக்கு தண்ணீர் வந்தவனுக்கும் அதே தொகைதான் முழுமையாக வீடு பாதிக்கப்பட்டடோருக்கும் அதே தொகைதான்.
வடக்கு, கிழக்கு உள்ளிட்ட சகல பிரதேசங்களிலும் மிக மோசமான நிலையே காணப்படுகின்றது.
யாழ்ப்பாணத்திற்காக ரூ. 36 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தப் பணம் யாழ்ப்பாணத்திற்கு தேவையில்லை.
அதனை தோட்டப்புற மக்களுக்கு வழங்குங்கள். எனக்கு வழங்க உள்ள கெப் வாகனத்திற்கான பணத்தை மக்களுக்கு வழங்குங்கள். எனக்கு அந்த வாகனம் அவசியமில்லை.
வடக்கிற்கும், கிழக்கிற்கும் புலம்பெயர்ந்தோரிடமிருந்து பணத்தைப் பெற்றுத்தருகின்றேன்.
தேவைப்பட்டால் தெற்கிற்கும் பகிர்கின்றேன். நான் ஆம் என்று கூறினால் உடனே பணம் வரும்” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!