சூயஸ் கால்வாயின் சரித்திரம் (நிலமெல்லாம் ரத்தம் - 66)
20 Sep, 2026
ஹெஸிலின் நோக்கம் ஒன்றுதான். எழுத்து அவருக்குக் கைவந்த கலை. அதன் அத்தனை சாத்தியங்களிலும் யூத தேசம் ஒன்றை உருவாக்குவது குறித்த தம் எண்ணங்களை வெளிப்படுத்த அவர் முடிவெடுத்தார். அதற்காகத் திட்டமிட்டுச் செயல்படவும் தொடங்கினார்.
இத்தனைக்கும் தொடக்க காலத்தில் அத்தனை யூதர்களும் தியோடர் ஹெஸிலின் ஜியோனிச இயக்கத்தை ஆதரித்து, அதில் இணைந்துவிட்டார்கள் என்று சொல்லமுடியாது. அதையும் அவநம்பிக்கையுடன் பார்த்தவர்கள் இருந்திருக்கிறார்கள்.
ஆனால் யூத நிலவங்கிகள் பாலஸ்தீனில் திட்டமிட்டபடி நிலங்களை வாங்கிச் சேர்க்கத் தொடங்கிய பிறகு இந்தப் போக்கு அறவே மாறிப்போனது. உலகில் உள்ள அத்தனை யூதர்களும் தம்மை ஜியோனிஸ இயக்கத்துடன் இணைத்துக்கொண்டார்கள்.
மறுபுறம் ஹெஸில், தமது இயக்கத்துக்கு மிகப்பெரிய இடங்களில் ஆதரவு பெறவேண்டும் என்று நினைத்தார். அதாவது யாரும் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாத உயர்மட்டங்களின் ஆதரவு.
ஆகவே, அவர் இரண்டு மிக முக்கியப் பயணங்களை மேற்கொண்டார். இது நடந்தது 1898-ம் ஆண்டு. முதலில் ஜெர்மானிய சக்கரவர்த்தி கெய்ஸர் வில்லியம் 2ஐ (ரிணீவீsமீக்ஷீ கீவீறீலீமீறீனீ 2) சந்தித்துப் பேசினார். ஐரோப்பாவெங்கும் யூதர்கள் தாக்கப்படுவது பற்றி, யூதர்களும் மனிதர்களே என்பது பற்றி, அவர்கள் சுதந்திரமாக, நிம்மதியாக வாழ ஒரு நிலம் வேண்டும் என்பது பற்றி! ஜெர்மன் கெய்ஸர், மிகுந்த அக்கறையுடன் ஹெஸிலின் கருத்துக்களுக்குக் காது கொடுத்தார். ஆனால் பதில் சொல்லவில்லை.
அடுத்தபடியாக ஹெஸில் இஸ்தான்புல்லுக்குப் போய் ஒட்டாமான் துருக்கியப் பேரரசின் சுல்தான் மெஹ்மூத் வாதிதீனைச் (ஷிuறீtணீஸீ விமீலீனீமீபீ ஸ்ணீலீபீமீபீபீவீஸீ) சந்தித்தார். மணிக்கணக்காகப் பேசியும் சுல்தான் வெறுமனே தாடியை உருவிக்கொண்டு சிந்தித்தாரே தவிர அவரும் ஹெஸில் விரும்பும் விதத்தில் எந்தப் பதிலும் சொல்லத் தயாராக இல்லை.
ஆகவே ஹெஸில் யோசித்தார். எந்த ஐரோப்பிய தேசத் தலைவரும் துருக்கி சுல்தானும் தனக்குச் சற்றும் உதவப்போவதில்லை என்கிற அவரது முடிவு இந்த இரு சந்திப்புகளால் மேலும் வலுப்பட்டது. இறுதி முயற்சியாக பிரிட்டனை மட்டும் அணுகலாம் என்று நினைத்தார். ஒரு யூதரை பிரதம மந்திரியாகவே ஆக்கிய தேசமல்லவா?
ஆகவே அவர் பிரிட்டனுக்குப் புறப்பட்டார். அப்போது பிரிட்டனின் காலனிகளாக இருந்த தேசங்களை நிர்வகித்துக்கொண்டிருந்த பிரிட்டிஷ் அரசின் மூத்த அமைச்சர் ஜோசப் சாம்பர்லெயின் (யிஷீsமீஜீலீ சிலீணீனீதீமீக்ஷீறீணீவீஸீ) ஹெஸிலைச் சந்தித்தார். சாம்பர்லெயின் தவிர வேறு சில முக்கிய அதிகாரிகளையும் ஹெஸிலால் அப்போது சந்தித்துப் பேச முடிந்தது.
ஜெர்மன் சக்ரவர்த்தியும் ஒட்டாமான் சுல்தானும் அளித்த அளவுக்கு பிரிட்டன் அரசுத்தரப்பு ஹெஸிலுக்கு ஏமாற்றம் அளிக்கவில்லை என்றாலும், அவரது தலையாய யோசனையை அதாவது பாலஸ்தீனில் ஒரு யூத தேசம் என்பதை அவர்கள் முதலில் ஏற்கத் தயாராக இல்லை.
சாம்பர்லெயின் மிகத்தெளிவாகச் சொன்னார். யூதர்களுக்கு ஒரு தனிநாடு வேண்டுமென்பது முக்கியம்தான். அவர்கள் இனியும் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கக் கூடாது என்பதையும் பிரிட்டன் ஏற்றுக்கொள்கிறது. ஆனால், அப்படித் தனியாட்சி உரிமையுடன் அவர்களுக்கான தேசம் ஒன்றை நிறுவுவது என்றால் அதை கிழக்கு ஆப்பிரிக்காவில்தான் செய்ய முடியும். குறிப்பாக, உகாண்டாவில்.
ஹெஸிலுக்குக் கொஞ்சம் ஏமாற்றம்தான். எப்படியாவது பாலஸ்தீனில் ஒரு யூத தேசத்தை உருவாக்க பிரிட்டனைச் சம்மதிக்க வைப்பதுடன் அவர்களது முழு ஆதரவுடன் அதற்கான முயற்சிகளை உடனே தொடங்கிவிட வேண்டும் என்று அவர் எண்ணியிருந்தார்.
இருபதாம் நூற்றாண்டு தொடங்கவிருந்த சூழலில் ஐரோப்பிய அரசியல் வானில் அப்போது ஏற்பட்டுக்கொண்டிருந்த பல சிக்கல்களையும் கருத்தில் கொண்டு, தம்முடைய இந்தக் கோரிக்கைக்கு பிரிட்டன் கண்டிப்பாக சம்மதம் தெரிவிக்கும் என்று அவர் நினைத்தார். பிரிட்டனுக்கு யூதர்களின் பரிபூரண ஆதரவைத் திரட்டித் தருவதனால் அவர்கள் மூலம் தங்களுக்கு ஆகவேண்டிய காரியங்களைச் சாதித்துக்கொள்ள முடியும் என்று கருதினார். ஆனால் அதெல்லாம் முடியாமல் ஆகிவிட்டது. ஆகவே, தன் வருத்தத்தைக் காட்டிக்கொள்ளாமல் நாசூக்காகப் பேசிவிட்டுக் கிளம்பிவிட்டார்.
பின்னால் அதே பிரிட்டன்தான் உலகப்போருக்குப் பின் பாலஸ்தீனின் ஆட்சி அதிகாரத்தை வென்று, அங்கே இஸ்ரேல் உருவாவதற்கு முன்னணியில் நின்று உதவி செய்தது. இதற்கு, மனமாற்றம் காரணம் என்று யூதர்கள் சொன்னாலும் நிறைய பணப்பரிமாற்றம் நடந்த பிறகே பிரிட்டனை வசப்படுத்த முடிந்தது என்று சரித்திரத்தின் வதந்திப் பக்கங்கள் தெரிவிக்கின்றன.
இருபதாம் நூற்றாண்டு பிறந்தபோதே மிகுந்த பரபரப்புடன்தான் பிறந்தது. புதிய நூற்றாண்டுக் கொண்டாட்டங்கள் முடிவதற்குள்ளாகவே உலகப்போர் வந்துவிடப்போகிறது. அதற்கும் முன்பாக, ரஷ்ய யூதர்கள் மகா அவலமான போராட்டங்களைச் சந்திக்க நேரிட்டது. ஏதாவது உடனடித் தீர்வு அவசியம் என்கிற நிலையில், 1903-ல் கூடிய ஆறாவது ஜியோனிஸ காங்கிரஸ் மாநாட்டில் பிரிட்டன் முன்வைத்த உகாண்டா யோசனையைக்கூட பொருட்படுத்தி விவாதிக்க வேண்டி நேர்ந்தது.
ஹெஸில், தன் அபிப்பிராயம் என்பதாக அல்லாமல், பிரிட்டன் தன்னிடம் தெரிவித்த ஒரு சாத்தியமாக அதனை முன்வைத்தார். அதாவது, உகாண்டாவில் ஒரு யூத தேசம். ஆனால், இது ஒரு தாற்காலிகத் தீர்வாக மட்டுமே இருக்கமுடியும் என்பதையும் அவர் அப்போது தெரிவித்தார்.
“ரஷ்யாவில் யூதர்கள் தாங்கமுடியாத கொடுமைகளுக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள். அங்கிருந்து ஆயிரமாயிரம் யூதர்கள் தினசரி அகதிகளாக வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களெல்லாம் எங்கே போவார்கள்? அகதிகளாகவும், நாடோடிகளாகவும் சுற்றிச்சுற்றியே யூத இனம் மடிந்துபோய்விடும் அபாயம் உண்டாகியிருக்கிறது. ஆகவே, பிரிட்டன் முன்வைத்த உகாண்டா யோசனையை ஓர் உடனடி ஏற்பாடாக, ஆனால் தாற்காலிக ஏற்பாடாக மட்டும் நாம் சிந்தித்துப் பார்க்கலாம்’’ என்று அந்த மாநாட்டில் பேசினார்.
துரதிருஷ்டவசமாக அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட பலரால் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. ஹெஸில் தன் கொள்கையிலிருந்து சறுக்கிவிட்டார் என்று நினைத்துவிட்டார்கள். தவிரவும் அவரை நம்பிக்கைத் துரோகி என்றும் யூதர் குலத்துக்கே எமனாக வந்து சேர்ந்தவர் என்றும் பேசத் தொடங்கினார்கள்.
மிகவும் மனம் ஒடிந்துபோனார் ஹெஸில். எந்த யூதகுலத்துக்காக, அவர்களின் நலனுக்காக நாளெல்லாம் சிந்தித்துச் செயல்பட்டுக்கொண்டிருந்தாரோ, அதே யூதர்கள்தான் அவரை துரோகி என்று சொன்னார்கள்.
இந்த வருத்தத்திலேயே ஹெஸில் படுக்கையில் விழுந்தார். கடும் நிமோனியாக் காய்ச்சல் வந்தது. 1904-ம் ஆண்டு காலமாகிப்போனார்.
பின்னால் தியோடர் ஹெஸிலின் தன்னலமற்ற சேவையும் இஸ்ரேல் உருவாவதற்காக அவர் எடுத்துக்கொண்ட கடும் முயற்சிகளும் மேற்கொண்ட போராட்டங்களும் முழுமையாகத் தெரியவந்தபோது ஒட்டுமொத்த யூதகுலமும் தன் தவறை எண்ணி வருந்தியது.
இன்னொருமுறை இந்தமாதிரி தவறேதும் செய்யக்கூடாது என்று மனத்துக்குள் தீர்மானம் செய்துகொண்டார்கள். ஹெஸிலை ஒரு கண்கண்ட தெய்வமாகவே கருதி எல்லா யூதர்களும் தம் வீட்டில் அவர் புகைப்படத்தை மாட்டிவைத்தார்கள்.
அப்புறமென்ன? மீண்டும் போராடக் கிளம்பிவிட்டார்கள்.
யூத தேசிய காங்கிரஸ், யூத நில வங்கிகள், யூத காங்கிரஸ் மாநாடு இந்தச் சம்பவங்கள் 19ம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளில் காற்றுக்குக் கூடத் தெரியாத ரகசியமாகத்தான் வைத்திருந்தார்கள். (நிலமெல்லாம் ரத்தம்–41) பா. ராகவன்
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!