இஸ்ரேலின் அடுத்த பிரதமர் நெதன்யாஹுவா, ஐசென்கொட்டா?
25 Nov, 2026
தமிழ்த் தரப்பை நோக்கி, பௌத்த சிங்கள மேலாதிக்க சிந்தனை கோலொச்சும் பாராளுமன்றத்துக்குள்ளேயே தீர்வு காணப்படும்; அதற்கு இணங்கிக் கொள்ள வேண்டும்; அதைச் செய்யாது, வெளியில் நின்று கூப்பாடுபோடுவதால் பலனில்லை என்ற அறிவிப்பை ரணில் விடுக்கிறார்.
அதே நேரம், சர்வதேசத்தை நோக்கி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்றத்துக்குள், இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காண முயற்சிப்பதுதான் ‘ஜனநாயக நெறி’ என்று அவர் படம் காட்டவும் செய்கிறார்.
இதன்மூலம், தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்ற சர்வதேசத்தின் குரல்களைப் புறந்தள்ளவும் முடியும்.
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்ற ஒற்றை இலக்கோடு இருக்கும் ரணிலுக்கு, தன்னை நோக்கிய புற அழுத்தங்கள் இருப்பதில் விருப்பமில்லை. ராஜபக்ஷர்களை விரட்டியடிக்க வீதிக்கு வந்த மக்களை,
தான் அதிகாரத்தை அடையும் வரையில் ஆதரித்த ரணில், அதிகாரத்துக்கு வந்ததும் படை பலத்தைக் கொண்டு ஓடவிடத் தொடங்கினார்.
அவரின் உண்மை முகம் அதுதான்! அது, அதிகாரங்களை குறிவைக்கும் அரசியல்வாதிகள் கொண்டிருக்கும் ஒரே முகம்! அவரின் முகத்துக்கு ஜனநாயக முலாம் பூசிக் கொண்டு, மாற்றத்தின் சக்தி என்று பார்ப்பது எல்லாம் களவாணித்தனமாகும்.
சுதந்திர இலங்கையில், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண, தந்தை செல்வா தொடங்கி இன்றைக்கு இரா.சம்பந்தன் வரையில், போராடித் தோற்ற வரலாறுதான் பதிவாகி இருக்கின்றது.
ஐக்கிய தேசிய கட்சியும், அதிலிருந்து முளைத்த சுதந்திரக் கட்சியும், அதன் பின்னால் இந்தக் கட்சிகளில் இருந்து விரிந்த பொதுஜன பெரமுனவும், ஐக்கிய மக்கள் சக்தியும், தமிழர் பிரச்சினையை ஒரே கண்ணோட்டத்தில் மாத்திரமே அணுகி வந்திருக்கின்றன.
பௌத்த மேலாதிக்க சிந்தனைகளுக்கு அப்பால் நின்று, தமிழ் மக்களையோ, அவர்களின் பிரச்சினைகளையோ அணுகுவதற்கு அந்தக் கட்சிகள் ஒருபோதும் தயாராக இருப்பதில்லை.
ஏனெனில், இந்தக் கட்சிகளின் அடிப்படைச் சிந்தனை என்பது, மகாவம்ச மனநிலையில் இருந்து கட்டமைக்கப்படுவது. அது, தமிழ் மக்களை வில்லன்களாக சித்திரிக்கும் அரசியலின் நீட்சி.
அத்தோடு, தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு கண்டால், ஆட்சியை அடைவதற்கான இலகுவான கருவியாக இதுவரை கையாண்டுவந்த இனவாத அரசியல் எனும் தீயை, கையில் ஏந்த முடியாது.
தேர்தல் வெற்றிக்கு எந்தவித உழைப்பும் இல்லாமல் இனவாத, மதவாத அரசியலைத் தூண்டினால் இலகுவான வெற்றியைக் கண்டுவிடலாம் என்பதுதான், இலங்கை அரசியலின் ஒரே வரலாறு!
நிலைமை அப்படியிருக்க, அந்தக் கருவியை கைவிடுவதற்கு எந்த அரசியல்வாதியும் தயாராக இருக்கமாட்டார்கள். அதனால்தான், அவ்வப்போது தமிழர் பிரச்சினைக்கான தீர்வு பற்றிய பேச்சுகளுக்கு புற அழுத்தங்களால் இணங்கினாலும், தென் இலங்கை ஆட்சியாளர்கள் அதை எப்படியாவது தட்டிக்கழிக்கவே செய்திருக்கிறார்கள்.
ரணிலும் இப்போது அதைத்தான் செய்கிறார். ‘பாராளுமன்றமே அரசாங்கம்’ என்கிற வார்த்தை ஜாலம், தட்டிக்கழிப்பதை நோக்கியதுதான்.
ஆனால், அதில் அவர் செப்படிவித்தையொன்றைக் காட்ட விளைகிறார். அதாவது, பாராளுமன்றத்துக்குள் தீர்வைக்கான முயற்சிக்கிறேன். ஆனால், ராஜபக்ஷர்களினால் சூழப்பட்ட பாராளுமன்றம் அதற்கு இணங்கவில்லை. அதனால், தன் மீது குற்றமில்லை என்று சர்வதேசத்தின் கேள்விகளில் இருந்து நழுவ நினைக்கிறார்.
அத்தோடு, பாராளுமன்றத்துக்குள் தீர்வு என்று பேசினால், தமிழ்த் தரப்புகள், சிறிதுகாலம் கூச்சல் போட்டுவிட்டு ஓய்ந்துவிடும். அதனால், அவர்களின் தொல்லையும் இல்லை. ஏனெனில், கடந்த காலத்தில் தமிழர் பிரச்சிகைளுக்கான தீர்வு குறித்த எந்த முயற்சிகளையும் பாராளுமன்றம் அனுமதித்ததேயில்லை.
மாறாக, பிரச்சினைகளை அதிகரிக்கவே செய்திருக்கின்றது. அதனால், தமிழ்க் கட்சிகள் கத்திக் களைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்பது வெளிப்படையான செய்தி.
ரணில் என்கிற பழுத்த அரசியல்வாதி, தனது இறுதிக் காலத்தில் கிடைத்த ஜனாதிபதி என்கிற அதியுச்ச அதிகாரத்தை இறுகப் பற்றிக் கொள்வதற்காக, ஒட்டுமொத்த நாட்டையும், சர்வதேசத்தையும் ஏமாற்றி ஆட நினைக்கிறார்.
அவ்வளவுதான். அதைத் தவிர்த்து அவரது உழைப்பாளர் தினச் செய்தியில் எதுவும் இல்லை.
-புருஜோத்தமன் தங்கமயில்-
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!