ரவி மோகனின் ‘சுயமரியாதை’ பேச்சுக்கு ஆர்த்தியின் அதிரடி பதிலடி
நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இடையே கடந்த ஆண்டு பிரிவு ஏற்பட்ட நிலையில், இது தொடர்பான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ரவி மோகன் தனது தோழியுடன் வெளியுலகத்தில் ஜோடியாக தோன்றியும், ஆர்த்தி தனது மகன்களுடன் வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டும் வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
சமீபத்தில் நடைபெற்ற பராசக்தி திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய ரவி மோகன், அந்த படத்தில் நடித்ததற்கான முக்கிய காரணம் அது சுயமரியாதையை காப்பாற்ற போராடும் கதையைக் கொண்டது என்பதாகவும், தனது வாழ்க்கையிலும் சுயமரியாதையை காப்பாற்ற போராடியதாகவும் கூறினார். இந்த பேச்சு, அவரது தனிப்பட்ட வாழ்க்கையை மறைமுகமாக குறிப்பதாக சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியது.
இந்த சூழலில், ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்துடன் கருத்தொன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், சுயமரியாதை மற்றும் கொடுமை குறித்த குற்றச்சாட்டுகள் பல நேரங்களில் ஆதாரமில்லாமல் சுமத்தப்படுவதாகவும், அவ்வாறு பேசுபவர்கள் தாங்கள் சொல்வதுபோல் வாழ்வதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆனால், துரோகம் ஆதாரங்களுடன் வரும் என்றும், மேடை என்பது நடிப்பதற்காக ஆனால் நிஜ வாழ்க்கைக்கு நேர்மை தேவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஒருவர் மற்றொருவர்மீது பழிச்சுமத்த மேடையை பயன்படுத்தும்போது, அது பழி சுமத்துபவரைப் பற்றியே அதிகம் வெளிப்படுத்துகிறது என்றும், ஒருநாள் தானும் அதே மேடையில் உண்மையை வெளிப்படுத்தும் வாய்ப்பு வரும் என்றும் ஆர்த்தி தெரிவித்துள்ளார். அந்த நாள் நடிப்பாக இருக்காது, உண்மையின் வெளிப்பாடாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தனது பதிவின் இறுதியில், ஒருகாலத்தில் நம்பிய ஒருவரை காதலித்திருந்தாலும், பின்னர் அவள் அறிந்த வில்லனிடமிருந்து தப்பி உயிர் பிழைத்து, எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக தன் சுயமரியாதையை நிலைநிறுத்துகிறாள் என்றும் ஆர்த்தி குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.

கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!