தேர்தல் முடிந்ததும் ஈரானைத் தாக்குங்கள் - ட்ரம்புடன் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தொலைபேசியில் பேச்சு!
02 Nov, 2026
பாதுகாப்பு தேடும் ரஷ்ய மக்கள்
குர்ஸ்க் பிராந்தியத்தில் யுக்ரேனிய படைகளின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்த முடியாமல் ரஷ்யா திணறி வருகிறது. கூடுதல் படைகளை அனுப்பி வைத்துள்ள போதிலும் பலன் கிடைக்கவில்லை.
இதனால், அந்த பிராந்தியத்தில் இருந்து சுமார் 76 ஆயிரம் மக்கள் பாதுகாப்பு தேடி இடம் பெயர்ந்துவிட்டனர்.
குர்ஸ்க், பெல்கோரோட், பிரையன்ஸ் ஆகிய பிராந்தியங்களில் பயங்கரவாத எதிர்ப்பு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
இதன் பொருள், அந்த பிராந்தியங்களில், மக்கள் நடமாட்டம் மற்றும் வாகனங்களின் இயக்கத்தை அதிகாரிகள் கட்டுப்படுத்தலாம். தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்பது, கண்காணிப்பது போன்ற பிற நடவடிக்கைகளையும் அதிகாரிகள் மேற்கொள்ள முடியும்.
யுக்ரேனின் "துரோக" தாக்குதல்
ரஷ்ய எல்லைக்குள் ரஷ்யா - யுக்ரேன் ராணுவ வீரர்களுக்கும் இடையிலான மோதல்கள் சனிக்கிழமை இரவு முதலே நடந்து வருவதாகத் தெரிகிறது.
குர்ஸ்க் ஆளுநர் அலெக்ஸி ஸ்மிர்னோவ் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தாக்குதலில் மக்கள் காயமடைந்ததை சுட்டிக்காட்டி, யுக்ரேனின் "துரோக" தாக்குதல் என்று குறிப்பிட்டார்.
சனிக்கிழமை பிராந்திய தலைநகர் குர்ஸ்கில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் மீது யுக்ரேனிய ஏவுகணையின் பாகங்கள் விழுந்ததில் 13 பேர் காயமடைந்ததாக அவர் முன்னதாக தெரிவித்திருந்தார்.
யுக்ரேன் எல்லையே ஒட்டியுள்ள ரஷ்யாவின் பெல்கோரோட் மற்றும் வோரோனேஜ் பிராந்தியங்களிலும் ஒரே இரவில் யுக்ரேனிய ட்ரோன் தாக்குதல்கள் நடந்ததாக அவற்றின் ஆளுநர்கள் கூறியுள்ளனர். இருப்பினும் சேதங்கள் பற்றி அவர்கள் ஏதும் குறிப்பிடவில்லை.
அதேநேரத்தில், யுக்ரேன் தலைநகர் கீவ் பகுதியில் ராக்கெட் பாகம் ஒன்று குடியிருப்பு மீது விழுந்ததில் 35 வயது ஆணும் அவரது நான்கு வயது மகனும் கொல்லப்பட்டதாக அவசர சேவை அமைப்புகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன. 13 வயது குழந்தை உட்பட மேலும் 3 பேர் காயமடைந்தனர்.
கீவ் நகர மேயர் விட்டலி கிளிட்ச்கோ ஞாயிற்றுக்கிழமை அதிகாலை டெலிகிராமில் வான் பாதுகாப்புப் படைகள் தீவிரமாக "செயல்படுகின்றன" என்றும் பொதுமக்களை வெளியே வர வேண்டாம் என்றும் எச்சரித்தார்.
டாங்கிகள் மற்றும் ராக்கெட் லாஞ்சர் அமைப்புகள் ஆகியவற்றை ரஷ்யா குர்ஸ்க் பிராந்தியத்திற்கு அனுப்பியுள்ளது
யுக்ரேனிய படைகள் திடீர் ஊடுருவல்
ரஷ்யாவுக்குள் யுக்ரேனின் `அரிதான’ ஊடுருவல் கடந்த செவ்வாய்க்கிழமை காலை தொடங்கியது. அப்போது 1,000 வீரர்கள் அடங்கிய படை, டாங்கிகள் மற்றும் கவச வாகனங்களுடன் குர்ஸ்க் பிராந்தியத்திற்குள் நுழைந்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
யுக்ரேனியர்கள் பல கிராமங்களைக் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது, மேலும் சுட்ஜா நகரையும் அவர்கள் அச்சுறுத்தி வருகின்றனர்.
வெள்ளியன்று, ஆயுதமேந்திய யுக்ரேனியப் படை வீரர்கள் நகரத்தின் மீது கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதாகக் கூறும் வீடியோவும், காஸ்ப்ரோம் நிறுவனத்திற்குச் சொந்தமான ஒரு முக்கிய ரஷ்ய எரிவாயு மையத்தையும் கைப்பற்றிவிட்டதாக காட்டும் வீடியோவும் வெளியானது.
யுக்ரேன் எல்லையில் இருந்து சுமார் 7 கிமீ தொலைவில் உள்ள சுட்ஷாவின் வடமேற்கு புறநகரில் எடுக்கப்பட்ட வீடியோ அது என்பதை `பிபிசி வெரிஃபை’ உறுதிப்படுத்தியுள்ளது.
முழு நகரத்தையும் யுக்ரேனிய துருப்புகள் கைப்பற்றியதாகக் கூறப்படும் வீடியோவை பிபிசி சரிபார்க்கவில்லை.
ரஷ்ய நகரமான சுட்ஷாவில் உள்ள காஸ்ப்ரோம் எரிவாயு நிலையத்தில் யுக்ரேனிய வீரர்கள் நிற்கும் காட்சி
ரஷ்ய ராணுவம் சொல்வது என்ன?
ரஷ்ய ராணுவ வீடியோ பதிவுகள், சுட்ஜா நகரம் இன்னும் ரஷ்யாவின் கைகளில் இருப்பதாக கூறுகிறது.
வெள்ளிக்கிழமை காலை ஆன்லைனில் வெளியிடப்பட்ட மற்றொரு வீடியோவின் இருப்பிடத்தை பிபிசி வெரிஃபை உறுதிப்படுத்தியது.
ரஷ்யாவின் எல்லையில் இருந்து சுமார் 38 கிமீ தொலைவில் உள்ள ஒக்டியாப்ர்ஸ்கோ நகரத்தின் வழியாக ஒரு சாலையில் 15 வாகனங்கள் கொண்ட ரஷ்ய கான்வாய் சேதமடைந்ததால் கைவிடப்பட்டதை அந்த வீடியோ காட்டுகிறது.
இந்த காட்சிகளில் ரஷ்ய வீரர்கள் உள்ளனர். அவர்களில் சிலர் காயமடைந்தவர்கள், சிலர் இறந்திருக்கலாம் - மேலும் சிலர் வாகனங்களில் இருப்பதும் வீடியோவில் தெரிகிறது.
குர்ஸ்க் பிராந்தியத்திற்கு டாங்கிகள் மற்றும் ராக்கெட்-லாஞ்சர் அமைப்புகள் உட்பட கூடுதல் ஆயுத தளவாடங்களை ரஷயா அனுப்பியுள்ளது. ரஷ்ய துருப்புகள் யுக்ரேனியப் படைகளின் "முயற்சியை முறியடிக்கத் தொடர்ந்து முன்னேறுகின்றன" என்று ரஷ்ய ராணுவம் கூறியுள்ளது.
மோதல் நடக்கும் இடத்தில் அணுமின் நிலையம் இருப்பதால் அச்சம்
வெள்ளிக்கிழமையன்று, ரஷ்யா மற்றும் யுக்ரேன் ஆகிய இரு நாடுகளையும் "அதிகபட்ச கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்குமாறு" ஐநா அணுசக்தி அமைப்பு வலியுறுத்தியது. ஏனெனில் மோதல்கள் நடக்கும் பகுதி குர்ஸ்க் அணுமின் நிலையத்திற்கு அருகில் உள்ளது. இது ரஷ்யாவின் மிகப்பெரிய அணுசக்தி தளங்களில் ஒன்று.
சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) தலைவர் ரஃபேல் க்ரோஸி, "கடுமையான கதிரியக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய அணுசக்தி விபத்தைத் தவிர்க்க" நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றார்.
சுட்ஜாவிலிருந்து வடகிழக்கே சுமார் 60 கிமீ தொலைவில் மின் உற்பத்தி நிலையம் அமைந்துள்ளது.
-பிபிசி தமிழ் நியூஸ்-
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!