ரஷ்ய தூதரகத்தில் பணியாற்றிய நேயல் ரணவீர கொலை செய்யப்பட்டாரா? திடீர் விபத்தா? திட்டமிட்ட விபத்தா?
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மருமகன் முறையான ரஷ்ய தூதரகத்தில் பணியாற்றிய நேயல் ரணவீர சடலம் 9 மாதங்களுக்கு பின்னர் தோண்டி எடுக்கப்பட்டு பொலிஸ் விசாரணைகள் தொடங்கியுள்ளன.
- நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட சடலம் மீது பிரேத பரிசோதனை கூட மேற்கொள்ளாதது ஏன்? - கழுத்தில் இருந்த அடையாளம் என்ன? - ரஷ்யாவில் சரியான சோதனைகள் நடந்ததா?விதிகளையோ அல்லது சட்டத்தையோ மீறி செய்யப்படும் செயற்பாடுகளை நாம் குற்றம் என வரைவிலக்கணப் படுத்துகின்றோம். அந்த வகையில் அக்குற்றமானது பல்வேறாக நோக்கப்படுகின்றது.
சிறு குற்றம், பெருங் குற்றம் என இவ்வாறு பிரிக்கப்பட்டு அது பார்க்கப்பட்டாலும் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்கான பொதுவான வியாக்கியானங்களில் எவ்வித மாற்றமும் இல்லை.சிறு குற்றமோ, பெருங் குற்றமோ எதுவாக இருந்தாலும் என்றோ ஒரு நாள் அது வெளி வந்தே தீரும். இதுவே குற்றவியலின் நியதி.
எந்த ஒரு காரியத்தை அல்லது செயலை அல்லது குற்றத்தை செய்பவனும் அதற்குரிய சாட்சியங்களை அல்லது ஒரு சாட்சியையேனும் விட்டு வைக்காமல் செய்வதில்லை என்பது முன்னோர் சொன்னது. எனினும் அதில் அர்த்தம் நிறைந்துள்ளது.
பல வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கொலைகள், கொள்ளைகள் உள்ளிட்ட பல குற்றங்கள் தொடர்பில் தேடப்பட்டவர்கள் 30, 40 வருடங்களின் பின்னர் சிக்கிய சம்பவங்களை நாம் ஊடகங்கள் ஊடாக அறியாமல் இல்லை.
இந் நிலையில் தான் கடந்த 9 மாதங்களுக்கு முன்னர் அதாவது கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் விபத்தில் உயிரிழந்தார் என்று இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு புதைக்கப்பட்ட ரஷ்யாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் பணியாற்றிய இளைஞரின் மரணத்தில் தற்போது சந்தேகங்கள் ஏற்பட்டு அதனை தீர்க்க சாட்சியங்கள் சேகரிக்கப்படுகின்றன.
ஆம், ரணவீர களு ஆரச்சிகே டொன் நோயல் ரணவீர ரஷ்யாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் சாதாரண ஒரு எழுதுவினைஞர் .
வில்லியம் அப்புஹாமி மற்றும் ஜோஸபின் நோநா தம்பதிகளின் மகனான நோயல் ரணவீர முதன் முதலில் ரஷ்யாவுக்கு சென்றது 2002 ஆம் ஆண்டிலாகும்.
2002 ஆம் ஆண்டு ஜூலை 21 ஆம் திகதி ரஷ்யாவுக்கு சென்ற நோயல் ரணவீர அங்குள்ள க்ளப் லங்கா என்ற உக்ரேன் ஹோட்டலில் முதலில் வேலைக்கு சென்றுள்ளார்.
இந்த ஹோட்டலானது முன்னாள் ஜனாதிபதியின் உறவினரும் ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவருமான உதயங்க வீரதுங்கவுக்கு சொந்தமானது.
இந் நிலையில் கடந்த 2008 ஆம் ஆண்டு உதயங்க வீரதுங்க ரஷ்யாவுக்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து நோயலும் தூதரக அதிகாரியானார்.
யார் இந்த உதயங்க வீரதுங்க?.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு மருமகன் முறை. ரஷ்யாவின் தூதுவராக இருந்தவர். இன்னும் விளக்கமாக சொல்வதென்றால் ரஷ்ய ஆதரவு உக்ரேன் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதம் விற்பனை செய்தவர் என உக்ரேன் அரசாங்கத்தால் இலங்கை வெளி விவகார அமைச்சிடம் முறைப்பாடளிக்கப்பட்டவர். தற்போது முகவரியின்றி காணாமல் போயுள்ளவர்.சரி, இனி விடயத்துக்கு வருவோம். உதயங்க வீரதுங்கவின் ஹோட்டலில் சில காலம் வேலை செய்த நோயல் ரணவீரவுக்கு தனது எஜமான் வீரதுங்கவின் நம்பிக்கையை வெல்ல அவ்வளவு நாள் தேவைப்படவில்லை.
அதன் வெளிப்பாடு, இலங்கைக்கு விடுமுறையில் வரும் நோயல் ரணவீர மீண்டும் ரஷ்யாவுக்கு திரும்பும் போது ரஷ்யாவில் உள்ள இலங்கை தூதரக அதிகாரியாக செல்ல முடியுமாக இருந்தது.
இந் நிலையில் ரஷ்யாவிலேயே தங்கிவிட்ட நோயல் ரணவீர இறுதியாக இலங்கை வந்து தனது உறவுகளை சந்தித்தது கடந்த பொது நலவாய அரச தலைவர்களின் மா நாட்டின் போது என கூறப்படுகின்றது.
அப்போது நாட்டுக்கு வருகை தந்த அப்போதைய ரஷ்ய தூதுவர் உதயங்க வீரதுங்கவுடனேயே நாட்டுக்கு வந்திருந்த நோயல் ரணவீர சில உண்மைகளையும் இரகசியங்களையும் தனது உறவினர்களிடம் குறிப்பிட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
அதாவது, உதயங்க வீரதுங்கவும் நோயல் ரணவீரவும் இணைந்து இணைப்பு வங்கிக்கணக்கொன்றைப் பேணுவதும் அதில் பெருந்தொகைப் பணம் உள்ளதும் கூறப்பட்ட ரகசியங்களில் ஒன்று. மற்றையது இவ்விருவரும் சேர்ந்து விமானம் ஒன்றை விற்பனை செய்ததாக கூறியமையாகும்.
இந்த இரு ரகசியங்களும் வெளியே கசியும் போது நோயல் ரணவீர உயிருடன் இல்லை. உதயங்க வீரதுங்கவை காணவில்லை.
இந் நிலையில் தான் தனது சேவையாளர் ஒருவருடன் இணைந்து இணைப்புக் கணக்கொன்றை பேண வேண்டிய அவசியம் ஒரு தூதுவருக்கு எப்படி ஏற்பட்டது என்பதையும் கீழ் நிலை அதிகாரி ஒருவருடன் இணைந்து வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவது முடியுமான விடயமா அல்லது அனுமதிக்கப்பட்டதா போன்ற கேள்விகளையும் ஏற்படுத்துகின்றன.
இப்படியான ஒரு பின்னணியில் தான் கடந்த 2014 அம் ஆண்டு ஜூன் 11 ஆம் திகதி இரவு ரஷ்யாவின் ரொஸ்ரொவ் ஒன் டொன் என்ற நகரில் இரவு நேரத்தில் இடம்பெற்ற விபத்தொன்றில் நோயல் ரணவீர இறந்துவிட்டதாக செய்தி நண்பர்கள் ஊடாக உறவினர்களுக்கு கொடுக்கப்படுகின்றது.
இந்த சம்பவத்தினை மறு நாள் அதாவது 2014 ஆம் ஆண்டின் ஜூன் மாதம் 12 ஆம் திகதி இணைய ஊடகமொன்று இப்படி செய்தி வெளியிட்டிருந்தது.'ரஷ்யாவில் நேற்று மாலை நடந்த சம்பவத்தில், அங்குள்ள இலங்கை தூதரகத்தில் பணியாற்றும் எழுதுவினைஞர் ஒருவர் கொல்லப்பட்டதுடன், இரண்டாவது செயலர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிப் படுகாயமடைந்தார்.
ரஷ்யாவின் தென்பகுதியில் உள்ள ரொஸ்ரொவ் ஒன் டொன் நகரில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ரொஸ்ரொவ் நகரில், ரஷ்யாவில் இலங்கையின் நாட்கள் என்ற நிகழ்ச்சிக்காக ரொஸ்ரொவ் நகருக்கு வந்த இலங்கை தூதரகத்தில் பணியாற்றும் எழுதுவினைஞரே, வாகனம் ஒன்றினால் மோதிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை தூதரகத்தில் இரண்டாவது செயலாளர் நெஞ்சில் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை தூதரக அதிகாரிகளை அவர்கள் தங்கியிருந்த டொன் பிளாசா விடுதி அருகே, இவர்களின் பொதிகளை ஏற்றிவந்த பாரஊர்தியின் இரண்டு சாரதிகள் மேலதிக பணத்தைக் கேட்டபோது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதன்போதே, எழுதுவினைஞரை தமது வாகனத்தால் மோதிக் கொன்று விட்டும், தூதரக இரண்டாவது செயலரை துப்பாக்கியால் சுட்டுவிட்டும் அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
இவர்கள் பின்னர் கைது செய்யப்பட்ட தாக ரஸ்ய செய்தி நிறுவனம் தெரிவித் துள்ளது. எனினும், இந்தச் சம்பவம் தொடர்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சு எந்த தகவலையும் வெளியிட வில்லை.
ரணவீர
இந்தச் சம்பவத்தை ரஷ்ய வெளிவிவகார அமைச்சு நேற்றிரவு உறுதிப்ப டுத்தியுள்ளது.
பார ஊர்தி ஒன்றின் சாரதியே, ரஷ்ய தூதரக நிர்வாக- தொழில்நுட்ப பணியாளரான ரணவீர என்பவரை தனது வாகனத்தால் மோதிக் கொன்றதாக அதில் கூறப்பட்டுள்ளது.
இலங்கை தூதரக இரண்டாவது செயலர் ரத்நாயக்க நெஞ்சில் படுகாயமடைந்துள்ளார் என்றும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவத்துக்காக ரஷ்யா தனது கவலையை தெரிவித்துள்ளது.'
இந் நிலையில் 2014 ஜூன் மதம் 15 ஆம் திகதி நோயலின் சடலம் பலகைப் பெட்டியொன்றில் அடைக்கப்பட்டு கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக எடுத்துவரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்ட பின்னர் 2014 ஜூன் 18 ஆம் திகதி கம்பஹா மாவட்டத்தின், அத்தனகல்ல தேர்தல் தொகுதியின் வெலிக்கடமுல்ல பிரதேசத்தில் உள்ள பொது மயானத்தில் நோயலின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
நோயலின் உடல் அஞ்சலிக்கக வைக்கப்பட்டிருந்த போது ஒரு சம்பவம் இடம்பெறுகின்றது. அது அப்போது பெரிதாக ஊடகங்கள் கண்களில் படவில்லை.ஆம், நோயலின் தாய் உள்ளிட்ட உறவினர்களுக்கு மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டதே அதுவாகும். எனினும் அன்று அவர்களால் அதனை வெளிப்படுத்த முடியாமல் போய்விட்டது.
நோயலின் கழுத்தில் ஒரு நீல நிற அடையாளம் இருந்ததாகவும் அது கழுத்தை நெரித்ததால் ஏற்படும் அடையாளத்துக்கு சமாந்தரமாக இருந்ததாகவும் உறவினர்கள் குறிப்பிடுகின்றனர்.
எனினும் ரஷ்யாவில் இருந்தே அடக்கத்துக்கு தயார் நிலையில் கொண்டுவரப்பட்ட நோயலின் உடலில் இருந்த சட்டயைக் களற்றி அது என்ன என்பதை பார்க்க உடனிருந்த அப்போதைய ரஷ்ய தூதுவர் உதயங்க வீரதுங்க இடமளிக்கவில்லை.
எனினும் நீடித்த சந்தேகம் கடந்த ஆட்சி மாற்றத்தின் பின்னர் வேலை செய்யத் தொடங்கியது.
அது 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17 அம் திகதி. கொழும்பில் உள்ள வெளிவிவகார அமைச்சுக்கு சென்ற நோயலின் உறவினர்கள் , 2014 ஜூன் 11 ஆம் திகதி ரஷ்யாவில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பிலும் அதில் உயிரிழந்த நோயல் தொடர்பிலும் கேள்வி எழுப்பி விளக்கம் கோரியுள்ளனர்.
அங்கு தான் உதயங்க வீரதுங்கவின் கூத்து அம்பலமாகிறது. அப்படியொரு சம்பவம் வெளிவிவகார அமைச்சில் பதிவாகவில்லை என பதிலளித்துள்ள அங்குள்ள அதிகாரிகள் ஊடகங்கள் வாயிலாக அப்படி ஒரு சம்பவத்தை கேள்வியுற்றதாக குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் அந்த அதிகரிகள் இன்னுமொரு விடயத்தையும் சுட்டிக்காட்டியுள்ளனர். அதாவது நோயலின் மரணம் தொடர்பில் உதயங்க வீரதுங்க மரண சான்றிதழ் ஒன்றையும் அவரது உறவினர்களிடம் கொடுத்திருந்த நிலையில் அதன் நம்பகத்தன்மையை கேள்விக்குட்படுத்தும் வகையில் அந்த அதிகாரிகளின் விளக்கம் இருந்துள்ளது.
அதாவது தூதுவர் ஒருவருக்கு மரண சான்றிதழ் விநியோகிக்கும் எந்தவொரு அதிகாரமும் இல்லை. அப்படியே ஒரு மரண சான்றிதழ் விநியோகிக்க வேண்டி ஏற்பட்டால் அதனை வெளி விவகார அமைச்சே பெற்றுக்கொடுக்க வேண்டும் என அந்த அதிகாரி நடைமுறையை விளக்க நோயலின் குடும்பத்தாரின் சந்தேகம் பல் மடங்கானது.
2015 ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் திகதி நிட்டம்புவ பொலிஸ் நிலையத்துக்கு செல்லும் நோயலின் சகோதரி உள்ளிட்ட உறவினர்கள் நோயலின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக முறைப்பாடொன்றை அளிக்கின்றனர்.
இந்த முறைப்பாட்டை கம்பஹா உதவி பொலிஸ் அத்தியட்சரின் ஆலோசனைக்கு அமைய நிட்டம்புவ பொலிஸார் விசாரணைக்கு எடுத்து விசாரித்து தகவல் சேகரித்து வந்த போது நோயலின் தாயார் அத்தனகல்ல நீதிவான் நீதிமன்றில் தனிப்பட்ட வழக்கொன்றை தாக்கல் செய்து தனது மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டார்.
இந் நிலையில் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட அத்தனகல்ல பிரதான நீதிவான் எம்.வை.எம்.இர்ஷதீன் ஒன்பது மாதங்களுக்கு முன்னர் அடக்கம் செய்யப்பட்ட நோயலின் சடலத்தை அத்தனகல்ல மேலதிக நீதிவான் எஸ்.அபயகுணவர்தன முன்னிலையில் மீண்டும் தோண்டி எடுத்து சோதனை செய்ய நிட்டம்புவ பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்தார்.
அதன் பலனாக நோயல் ரணவீரவின் சடலமானது நேற்று முன் தினம் தோண்டி வெளியே எடுக்கப்பட்டது.
அத்தனகல்ல மேலதிக நீதிவான் எஸ்.அபயகுணவர்தன முன்னிலையில் ராகம வைத்தியசாலையின் விஷேட சட்ட வைத்திய நிபுணர் சந்துன் விஜேயவர்தனவின் மேற்பார்வையில் சடலம் மீட்கப்பட்டு ராகம வைத்தியசாலைக்கு மேலதிக பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இதன் அறிக்கை அத்தனக்கல்ல நீதிவானுக்கும் நிட்டம்புவ பொலிஸாருக்கும் கிடைத்ததன் பின்னர் அது கொலையா விபத்தா என்பது தொடர்பிலான அடுத்த கட்ட
விசாரணைகளை பொலிஸார் முன்னெடுப்பர் என பொலிஸ் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவிக்கின்றார்.
விபத்தை ஏற்படுத்தி நோயல் கொலை செய்யப்பட்டாரா அல்லது குடும்பத்தினரின் சந்தேகங்களை ஒத்த உடலில் வேறு துப்பாக்கிச் சூட்டுக்காயங்களோ வேறு காயங்களோ உள்ளனவா போன்ற விடயங்கள் இன்னும் சில நாட்களில் அம்பலமாகும்.
உதயங்க வீரதுங்கவினால் கொடுக்கப்பட்டுள்ள மரண சான்றிதழில் வாகன விபத்தில் நெஞ்சுப் பகுதியில் ஏற்பட்ட அதிர்ச்சிகரமான கடுங் காயத்தால் மரணம் (TRAUMATIC BLUNT INJURIES TO THE CHEST FOLLOWING A VEHICLE ACCIDENT)சம்பவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந் நிலையில் விசாரணைகளை தொடர்ந்தும் முன்னெடுக்கும் பொலிஸார் மிக விரைவாக இதில் உள்ள மர்மத்தை துலக்குவார்கள் என எதிர்பர்க்கலாம்.
எம்.எப்.எம்.பஸீர் –


கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!