சூயஸ் கால்வாயின் சரித்திரம் (நிலமெல்லாம் ரத்தம் - 66)
20 Sep, 2026
ஆனால் அதே தினத்தில், அப்போதைய சட்ட அமைச்சராக இருந்த சுப்ரமணியம் சுவாமி, “விடுதலைப் புலிகள் அமைப்பால்தான் ராஜிவ் காந்தி கொல்லப்பட்டார்” என்று பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்தார்! அதைவது, இந்திய உளவு அமைப்புகளால் ஊகம்கூட செய்ய முடியாத ஒரு விஷயம், சுப்ரமணியம் சுவாமிக்குத் தெரிந்திருந்தது!
இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்வதற்கு, சில நிபந்தனைகளின் அடிப்படையில் சம்மதித்தார் டி.ஆர். கார்த்திகேயன்.
மறுநாளே, ஹைதராபாத்திலிருந்து சிறப்பு விமானம் மூலம் சென்னைக்குப் புறப்பட்ட கார்த்திகேயன், மாலை 6 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் போய் இறங்கினார்.
(சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைவராக கார்த்திகேயன் நியமிக்கப்பட்ட முறையான அறிவிப்பு இந்திய அரசாங்கத்திடமிருந்து மே 24ம் தேதிதான் வெளியானது. அதற்கு ஒரு தினம் முன்னரே சென்னை சென்று விட்டார் அவர்)
இது நடைபெற்ற காலப்பகுதியில், தமிழக காவல்துறையின் தலைவராக இருந்தவர் பி.பி. ரங்கசாமி. ஸ்ரீபெரும்புதூரில் குண்டு வெடித்த இடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு ஒட்டுமொத்தப் பொறுப்பு அதிகாரியான (ஐ.ஜி.) இருந்தவர்,
ஆர்.கே. ராகவன். இவர்கள் இருவரும், காவல்துறை தடய அறிவியல் நிபுணர்களுடன் சேர்ந்து, குண்டு வெடிப்பு நடைபெற்ற இடத்தில் சில தடயங்களை ஏற்கனவே சேகரித்திருந்தனர்.
சென்னையில், சி.பி.ஐ.யின் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் பிரதான அலுவலகமாகச் செயற்பட, தமிழக அரசு, ‘மல்லிகை’ என்ற அரசு மாளிகையை ஒதுக்கிக் கொடுத்தது.
‘மல்லிகை’ நீண்ட காலமாகப் பூட்டிக் கிடந்ததால் மோசமான நிலையில் இருந்தது. அலுவலகத்திற்காகவோ, குடியிருப்பதற்காகவோ இந்தக் கட்டடத்தை எவரும் விரும்பாத காரணத்தாலேயே அப்படி இருந்தது.
காரணம், அதற்கு முன் அங்கு குடியிருந்தவர்கள், ராசியில்லாத கட்டடம் என்று அதை ஒதுக்கி விட்டிருந்தனர்.
ராசியில்லாத ‘மல்லிகையில்’ இருந்தே இயங்கத் தொடங்கியது, ராஜிவ் காந்தி கொலையைத் துப்பறிய நியமிக்கப்பட்ட, சி.பி.ஐ.யின் சிறப்பு புலனாய்வுக்குழு.
இந்த வழக்கு சி.பி.ஐ.யிடம் ஒப்படைப்படுவதற்கு முன், தமிழக தடய அறிவியல் சோதனைக் கூடத்தைச் சேர்ந்த நிபுணர்கள், ராஜிவ் காந்தி கொலை நடந்த இடத்தை அலசியிருந்தனர்.
அந்த நாட்களில் தமிழக தடய அறிவியல் துறையின் இயக்குநராக இருந்தவர் பேராசிரியர் டாக்டர் பி. சந்திரசேகர்.
கொலை நடைபெற்ற இடத்தில் கிடைத்த முதல் நிலைத் தடயங்களைக் கைப்பற்றியிருந்த அவர்கள், அவற்றை ஆராய்ந்து ஒரு பிரீலிமினரி ரிப்போர்ட்டைத் தயாரித்திருந்தனர்.
இந்த ரிப்போர்ட், சி.பி.ஐ.யின் சிறப்பு புலனாய்வுக்குழுவிடம் கொடுக்கப்பட்டது. அதுதான், ராஜிவ் கொலை தொடர்பாக சிறப்பு புலனாய்வுக்குழுவின் கைகளில் கிடைத்த முதலாவது ஆவணம்.
இந்த ஆவணத்தில், முக்கியமாக இருந்தவை, ராஜிவ் காந்தி கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு பற்றிய இவர்களது ஆய்வுகள். அந்த ரிப்போர்ட் என்ன சொன்னது?
ராஜிவ் காந்தி கொல்லப்பட்டு, அவரது உடல் வீழ்ந்து கிடந்த இடத்துக்கு அருகே, கந்தலாகிப் போன நீல நிறத் துணி ஒன்று காணப்பட்டது.
அந்தத் துணிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதன் காரணம், குறிப்பிட்ட நீலத் துணியுடன் மின் ஒயர்கள் இணைக்கப்பட்டிருந்ததை தடய அறிவியல் நிபுணர்கள் அவதானித்தனர்.
இந்த நீல நிறத் துணி லேப்புக்கு கொண்டு செல்லப்பட்டு ஆராயப்பட்டது. அப்போது, அது ஒரு துணி பீஸ் அல்ல என்பது தெரியவந்தது.
வெளிப்பார்வைக்கு ஒரே துணிப் பகுதி போலத் தெரிந்த அது, 3 அடுக்குகளாக, ஒரு வெள்ளைத் துணி, அதற்கு மேல் 2 நீல நிறத்துணிகள் என்று, ஒரு ‘துணி பெல்ட்’ போல தைக்கப்பட்டிருந்தது.
துணி பெல்ட்டை ஒட்டுவதற்காக டேப் பயன்படுத்தப்பட்டிருந்தது. மின் ஒயர்கள் துணிக்குள் மறைந்து இருக்கும் படியாக தைக்கப்பட்டிருந்தன.
துணி பெல்ட்டுடன், பச்சை மற்றும் ஆரஞ்சு நிறத் துணித் துண்டுகளும், ப்ராவின் ஒரு பகுதியும் ஒட்டிய நிலையில் காணப்பட்டன. அத்துடன், துணியுடன் மனிதச் சதைத் துண்டும் காணப்பட்டது.
அங்கே கிடைத்த துணித் துண்டுகளை ஒன்றிணைத்துப் பார்த்தபோது, இடுப்பு பெல்டுடன் கூடிய ‘வெஸ்ட் ஜாக்கெட்’ என்பது தெரியவந்தது.
இவ்வளவு விபரங்களும் கிடைத்ததில் இருந்து, வெடித்த குண்டு, ஒரு பெண்ணின் உடலில் இணைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்பதைத் தெரிந்துகொள்ள முடிந்திருந்தது.
அந்தப் பெண் கொல்லப்பட்ட நேரத்தில், பச்சை மற்றும் ஆரஞ்சு நிறத்திலான ஆடை அணிந்திருக்கலாம் என்ற முடிவுக்கும் வரக்கூடியதாக இருந்தது.
சம்பவ இடத்தில் உயிரிழந்த 15 பேரில், ஒரு பெண்ணின் உடல் மாத்திரம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது.
அவரது உடல் பகுதி கிட்டத்தட்ட முழுமையாக சிதறி விட்டிருந்தது. வலது கை குண்டுவெடிப்பில் துண்டு துண்டாகப் பிரிந்து சற்றுத் தொலைவில் கிடந்தது.
பிரிந்து கிடந்த உடல் உறுப்புகளில் ‘சிறு குண்டுகள்’ பாய்ந்த ஓட்டைகளும், தீயில் கருகிய அடையாளங்களும் காணப்பட்டன.
சிதறிக்கிடந்த உடல் உறுப்புகள் மீது ஆரஞ்சு மற்றும் பச்சை நிறத் துணித் துண்டுகள் ஒட்டிக்கொண்டிருந்தன.
சம்பவ இடத்தில் நூற்றுக்கணக்கான சிறு குண்டுகளும், 9 வோல்ட் கோல்டன் பவர் பேட்டரியின் சில பகுதிகளும், எலக்ட்ரிக் டெட்டனேட்டர்களுக்கான வெள்ளை நிற ஒயர்களும், 2 ஸ்விட்சுகளும் கிடைத்தன.
குண்டுவெடிப்பு சம்பவத்தில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் உடல்களிலில் இருந்து நூற்றுக்கணக்கான சிறு குண்டுகள் எடுக்கப்பட்டன.
சிதைந்து கிடந்த உடல் உறுப்புகள் ரசாயன சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. உடல் உறுப்புக்களில் கிடைத்திருந்த சிறு குண்டுகளும் சோதனை செய்யப்பட்டன.
இந்தச் சோதனைகளின் முடிவில், ராஜிவ் காந்தியைக் கொல்வதற்காக வெடிக்க வைக்கப்பட்டது மிக வீரியமான பிளாஸ்டிக் வெடிகுண்டு என்பதும், அதில் பயன்படுத்தப்பட்ட வெடிப்பொருள் ஆர்.டி.எக்ஸ். என்பதும் தெரியவந்தது.
ஆர்.டி.எக்ஸ்., பொதுவாக ராணுவ ரீதியான பாவனைக்கு உபயோகிக்கப்படுவது. தமிழகம் போன்ற இடத்தில் சுலபமாகக் கிடைக்காத பொருள் அது. அதைப் பயன்படுத்தி வெடிகுண்டு தயாரிப்பதற்கு, திறமையும், பயிற்சியும் தேவை.
கிடைத்த விபரங்களில் இருந்து, வெடிக்க வைக்கப்பட்ட வெடிகுண்டு எந்த வகையில் செட் செய்யப்பட்டிருந்தது என்பதை, முழுமையாகத் தெரிந்து கொள்ள முடிந்திருந்தது. அதன் மெக்கானிசம், தடயவியல் நிபுணர்களை திகைக்க வைத்தது.
சுமார் அரை கிலோ எடையுள்ள ஆர்.டி.எக்ஸ். அடங்கிய வெடிகுண்டு, இடுப்பு பெல்ட்டில் மறைத்து வைக்கப்பட்டு, வெடிக்கச் செய்யப்பட்டுள்ளது.
இதில் சுமார் பத்தாயிரம் சிறு குண்டுகள் கலக்கப்பட்டிருந்தன. சிறு குண்டுகள் ஒவ்வொன்றும் ஒரேயளவாக, 0.2 மில்லி மீற்றர் விட்டம் கொண்டவையாக இருந்துள்ளன.
வெடிகுண்டுடன் இணைக்கப்பட்டிருந்த எலக்ட்ரிக் டெட்டனேட்டருடன், 9 வோல்ட் கோல்டன் பவர் பேட்டரி, 2 சுவிட்சுகளுடன் இணைக்கப்பட்டிருந்தன.
ஒரு சுவிட்சை அழுத்தியதும் பலத்த ஓசை, தீப்பிளம்புடன் குண்டு வெடிக்கும். அத்துடன் பத்தாயிரம் சிறு குண்டுகளும் அசுர வேகத்தில் சீறிப்பாய்ந்து, எதிரில் இருப்போரின் உடல் பூராவும் ஊடுருவிவிடும்.
ஒரே இடத்தில் தாக்காமல், இருதயம், நுரையீரல், மூளை என்று மனித உடலின் முக்கிய பாகங்கள் அனைத்திலும் சிறு குண்டுகள் வேகமாகத் துளைத்துச் செல்லதால், உடனடி மரணம் சம்பவிக்கும்.
இந்த ஆர்.டி.எக்ஸ். வெடிகுண்டை, ஒரு பெண் தனது உடையில் மறைத்து வந்து எளிதாக இயக்கியுள்ளார்.
ராஜிவ் காந்திக்கு முன்னே வந்த அந்தப் பெண், ராஜிவ் நின்றிருந்த இடத்தில் இருந்து,
நேருக்கு நேராக தன்னை நிறுத்திக் கொண்டதை முதலில் உறுதி செய்து கொண்டிருக்க வேண்டும். அதன்பின், வெடிகுண்டை இயக்குவதற்கான சுவிட்சை அவர் அழுத்தியிருக்க வேண்டும்.
நேருக்கு நேராக நின்று இயக்கப்பட்டதால், அந்தக் குண்டு ராஜிவ் காந்தியின் முகத்திலும், நெஞ்சுப் பகுதியிலும் வெடிக்கும் வகையில் இருந்துள்ளது.
ராஜிவ் காந்தியின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர் சிசிலியா சிரில், அவரது உடலில் 22 காயங்கள் காணப்பட்டதாகக் கூறியுள்ளார்.
ராஜிவ் காந்தியின் போஸ்ட்மோர்ட்டம் ரிப்போர்ட் கூறுவது என்ன என்பது, அடுத்த பராவில் தரப்பட்டுள்ளது. சென்சிட்டிவ்வான வாசகர்கள், அதைப் படிப்பதைத் தவிர்க்கவும்.
ராஜிவ் காந்தியின் மண்டை ஓடு வெடித்து, உட்பகுதி பாதுகாப்பற்ற நிலைக்கு சென்றிருந்தது. மூளைப்பகுதி, முகத்தின் தசைகள், உதடு, மூக்கு, இரு கண்கள் ஆகியவை சேதமடைந்திருந்தன.
தாடை எலும்புகள் நொறுங்கியிருந்தன. கருகிப்போன மார்பில் பல இடங்களில் ஆழமான காயங்கள் காணப்பட்டன.
அடிவயிற்றில் குறுக்கும் நெடுக்குமாகக் கண்டபடி கீறல்கள் இருந்தன. ஈரலும், வயிற்றின் உட்பகுதிகளும் அப்படியே வெளியே வந்துவிட்டன. இடது புற நுரையீரலைக் காணவில்லை.
வலது கைப் பெருவிரலும், ஆள்காட்டி விரலும் சிதைந்திருந்தன. உடலின் பல பகுதிகளில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது. உடல் முழுவதும் சிறு குண்டுகள் பாய்ந்திருந்தன.
தொடரும்…
கி.பாஸ்கரன் சுவிஸ்
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!