அநுராதபுரத்தில் பௌத்த பிக்குகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பில் 'மக்கள் ஆணைக்கான பிரஜைகள்' அமைப்பின் இரண்டாவது அமைதிப் பேரணி!
19 Oct, 2026
அத்துடன், யாழ். போதனா வைத்தியசாலையிலும் 32 பேரும் பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 24 பேரும், கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 24 பேரும், மருதங்கேணி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 6 பேரும் மற்றும் சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேரும் சிகிச்சைகளைப் பெற்று வருகின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேநேரம், வட மாகாணத்தில் காய்ச்சல் காரணமாக உயிரிழந்த 7 பேரில் 2 பேர் எலிக்காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் விசேட வைத்திய நிபுணர் துஷானி தாபரே அறிவித்துள்ளார். குறிப்பாக, யாழ்ப்பாணத்தில் உயிரிழந்தவர்களிடமிருந்து பெறப்பட்டு அனுப்பப்பட்ட மாதிரிகளில் 3 பேருக்கு எலிக்காய்ச்சல் நோய் இருப்பதாக கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மைய நாட்களில் வடக்கில் எலிக்காய்ச்சலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. எனினும், நாடாளவிய ரீதியில் கணிசமான அளவுக்கு அக்காய்ச்சல் ஆதிக்கம் செலுத்துகின்றது என்பதை மறுப்பதற்கில்லை.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் தொற்று நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் குமுது வீரகோன், 'இந்த ஆண்டின் இதுவரையிலான காலத்தில் 10ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்' என்று கூறியுள்ளார்.
அத்துடன், நாடளாவிய ரீதியில் கடந்த வருடம் மாத்திரம் எலிக்காய்ச்சலால் பாதிப்புற்ற 9ஆயிரம் பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 200 பேர் உயிரிழந்துள்ளனர். இரத்தினபுரி, குருநாகல், காலி, மாத்தறை, கொழும்பு ஆகிய மாவட்டங்களிலேயே அதிக நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பத்துத் தொடக்கம் 12 மாவட்டங்கள் அதியுயர் அபாயம் மிக்க பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன என்றும், எலிக்காய்ச்சலின் தீவிரத்தன்மையை உணர்ந்து நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் விசேட வைத்திய நிபுணர் குமுது வீரகோன், தெரிவித்துள்ளார்.
நிலைமைகள் இவ்வாறிருக்கையில், எலிக்காய்ச்சல் என்றால் என்ன என்பதும், அதன் தாக்கம் எவ்வாறானது என்பதும், அதனால் அதிகம் ஆபத்துக்குள்ளாகக் கூடியவர்கள் யார் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியது தற்போதைய சூழலில் இன்றியமையாததாகவுள்ளது.
அந்தவகையில், எலிக்காய்ச்சல் தொடர்பில் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில், எலிக்காய்ச்சலானது (வயல் காய்ச்சல், சுரங்கக் காய்ச்சல், சேற்றுக்காய்ச்சல்) எலிகளால் அல்லது வேறு சில விலங்குகளால் (மாடுகள், எருமைகள்) பரப்பப்படும் காய்ச்சலாகும் என்று அடையாளப்படுத்தப்படுகின்றது.
இந்தக் காய்ச்சலானது, மனிதனில் இருந்து மனிதனுக்கு பரப்பப்படுவதில்லை. மாறாக, Leptospira interrogans எனப்படுகின்ற ஒரு வகை பக்டீரியாவால் ஏற்படுகிறது. இந்த நோய்க் கிருமி பொதுவாக எலி போன்ற மிருகங்களின் சிறுநீருடன் வெளியேற்றப்படுகிறது. இவ்வாறு வெளியேற்றப்பட்ட நோய்க்கிருமி நீர்த்தேக்கங்களில் இருந்து மனிதனின் தோலில் உள்ள சிறு புண்கள் ஊடாகவோ அல்லது தோலின் மென்மையான பகுதிகள் ஊடாகவோ மனித உடலின் குருதிச் சுற்றோட்டத்தைச் சென்றடைகின்றது. சில சந்தர்ப்பங்களில் இந்த நோய்க் கிருமி உள்ள நீரைப் பருகுவதாலும் மனித உடலைச் சென்றடைகின்றது.
அவ்வாறு மனித உடலுக்குள் கிருமி சென்றடைந்தவுடன் ஏழு முதல் பன்னிரெண்டு நாட்கள் கழித்தே எலிக்காய்ச்சல் நோயின் அறிகுறிகள் தென்படும். முதல் வாரத்தில் குளிர்க்காய்ச்சல், நடுக்கம், தலைவலி, உடல் வலி, உடல் தளர்வு, கண்கள் சிவந்துபோதல், கண் கூச்சம், வயிற்று வலி, வாந்தி, உடலில் தடிப்புகள் போன்றவை ஏற்படும்.
அதன்பிறகு, சுமார் ஒரு வாரம் முதல் பத்து நாட்கள் வரை காய்ச்சல் இல்லாமல் இருக்கும். இரண்டாவது கட்டத்தில், கிருமிகள் பல்வேறு திசுக்களையும் உடல் உறுப்புகளையும் தாக்குவதால் பாதிப்பு ஏற்படும். கல்லீரல், சிறுநீரகம் அதிகமாக பாதிக்கப்படும்.
இந்த நிலையில் ஒருபோதும் எந்த ஒரு சிகிச்சையினையும் பெறாமல் இருந்தால், இருதயம், மூளை, பாதிப்படைவதோடு சிறுநீருடன் இரத்தம் கலந்து வெளியேறுதல், சிறுநீர் வெளியேறுவது குறைதல் ஆகிய நிலைமைகள் உருவெடுக்கும். அதிலிருந்து மீள முடியாத நிலைமையில் உயிரிழப்பு ஏற்படும்.
வயல்களில் வேலை செய்யும் விவசாயிகள், சேற்று நிலங்களில் பயிர்ச்செய்கைகளில் ஈடுபடுபவர்கள், ஆறுகள் அல்லது வயல் வெளிகளில் செங்கல் தயாரித்தல் அல்லது மணல் அள்ளுதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள், இரத்தினக்கல் சுரங்கத் தொழிலாளர்கள், சேற்று நிலம் அல்லது நீர் தேங்கிய இடங்களில் விளையாட்டு அல்லது செயற்பாடுகளில் ஈடுபவர்கள் இந்த நோய்த் தாக்கத்துக்கு இலகுவாக உள்ளாகக் கூடியவர்களாக உள்ளனர்.
இவ்வாறான நிலையில், குறித்த நோய்நிலைமையில் இருந்து எவ்வாறு பாதுகாப்பைப் பெற்றுக்கொள்ள முடியுமென்றும் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கைகள் குறித்தும் யாழ். போதனா வைத்தியசாலை பொது வைத்தியநிபுணர் வைத்தியர் த.பேரானந்தராஜா விளக்கமளித்துள்ளார்.
வயல்கள், சேற்று நிலங்கள், கழிவுநீர் வாய்க்கால்கள் போன்றவற்றில் பணிபுரிபவர்கள் கவசங்களை (கையுறைகள், காலுறைகள்) பயன்படுத்துவது பொருத்தமானதாக இருக்கும்.
தேவையில்லாமல் நீர் தேங்கியிருக்கும் இடங்களுக்கோ அல்லது சேற்று நிலங்களுக்கோ போவதை தவிர்ப்பதோடு அவ்வாறான இடங்களில் குளிப்பதையோ அல்லது கழுவுவதையோ தவிர்க்க வேண்டும்.
வயல்கள் மற்றும் வாழிங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளை சுத்தமாக வைத்திருப்பதும் நீர் தேங்கி நிற்காதவாறு பார்த்துக்கொள்வதும் அவசியமாகும்.
பொதுஇடங்களில் கிடைக்கின்ற நீரைப்பருகுவதை தவிர்ப்பதோடு கொதித்து ஆறிய நீரைப் பருகுவது மிகப்பொருத்தமானதொரு பாதுகாப்பு முறையாகும்.
நீர்நிலைகள், சதுப்பு நிலங்கள், கழிவு வாய்க்கால்கள் போன்ற பகுதிகளில் அதிகம் பிரசன்னம் உடையவர்கள் அருகில் உள்ள சுகாதாரப் பணிமனைக்கோ அல்லது வைத்தியசாலைகளுக்கோ நேரடியாகச் சென்று முற்பாதுகாப்பு மாத்திரைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
அதேநேரம், நோய்த்தொற்று அறிகுறிகளைக் கொண்டவர்கள் உடனடியாக, அருகில் உள்ள வைத்தியசாலைகளுக்குச் சென்று வைத்திய அதிகாரியைச் சந்திப்பதும் உரிய சிகிச்சைகளை பின்பற்றுவதும் மிகவும் முக்கியமானதாகும்.
பொது வைத்திய நிபுணர் வைத்தியர் த.பேரானந்தராஜாவின் ஆலோசனைகள் இவ்வாறிருக்கையில், வடக்கில் இம்முறை ஏற்பட்ட அதிக மழையின் காரணத்தால் ஏற்பட்டுள்ள வெள்ளம் வடிந்தோட முடியாமலிருக்கும் சூழல் தான் எலிக்காய்ச்சலுக்கான அடிப்படையாக இருக்கின்றது.
ஆக, வடக்கின் வடிகாலமைப்பு முறைமையை மீளாய்வு செய்தலாலே எலிக்காய்ச்சலின் கணிசமான தாக்கத்தில் இருந்து மீட்சி பெற்றுக்கொள்ளக்கூடிய இயலுமையை இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
ஆர்.ராம்-Virakesari
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!