news@ilakkiyainfo.com

பிரிவுகள்

வடக்கு, கிழக்கின் பல பகுதிகளில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்- (வீடியோ)

19 May, 2024
)2009 ஆம் ஆண்டு யுத்தத்தில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இறுதி யுத்தத்தில் உயிர் நீத்தவர்களின் ஆத்மசாந்தி வேண்டி வடக்கு, கிழக்கின் பல்வேறு பகுதிகளில் இன்று நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு 15 ஆவது வருடமாகவும் முள்ளிவாய்க்கால் நினைவு வளாகத்தில் இன்று முற்பகல் 10:30 அளவில் நடைபெற்றது. நினைவு முற்றத்தில் முள்ளிவாய்க்கால் பிரகடன உரை நிகழ்த்தப்பட்டு, பொதுச்சுடர் ஏற்றப்பட்டதுடன், மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது. சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் Agnès Callamard உம் இந்நிகழ்வில் கலந்து கொண்டு உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். நினைவேந்தல் நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர்களான M.A.சுமந்திரன், S. சிறிதரன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும், உயிரிழந்தவர்களின் உறவினர்களும் பங்கேற்றனர். நினைவேந்தலை முன்னிட்டு மல்லாவி , துணுக்காய் நகரங்களில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. மன்னாரில் இன்று காலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடம்பெற்றது. தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில், அதன் தலைவர் V.S.சிவகரன் தலைமையில் தந்தை செல்வா உருவச்சிலை அமைந்துள்ள பகுதியில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. மலரஞ்சலியை தொடர்ந்து, முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கப்பட்டது. இந்த நினைவேந்தல் நிகழ்வில் அரசியல் பிரதிநிதிகள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். இறுதிப் போரில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் 15 ஆவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கம் அறிக்கை ஒன்றையும் விடுத்துள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு, கிளிநொச்சி மாவட்டத்தில் பொதுச்சந்தைகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 15 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரின் போராட்ட இல்லத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு நடைபெற்றது. காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி 2645 ஆவது நாளாக போராடி வரும் உறவுகள், காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இலங்கை தமிழரசுக் கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக் கிளையின் ஏற்பாட்டில் காரைநகர் மூலக்கிளை தலைவரின் தலைமையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும், முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகமும் இடம்பெற்றது. இன்று பிற்பகல் வலந்தலை மடத்துக்கரை முத்துமாரியம்மன் ஆலய முன்றலில் நிகழ்வு நடைபெற்றது. மட்டக்களப்பு சிவில் சமூகம் மற்றும் பொதுமக்களினால் நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டதுடன், முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது. சித்தாண்டி- முச்சந்தி பிள்ளையார் ஆலய பிரதான முன்றலில் இந்நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு, பாண்டிருப்பு திரௌபதி அம்மன் ஆலய முன்றலில் இன்று நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உயிர் நீத்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், அதனை தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சியும் பறிமாறப்பட்டது. இலங்கை தமிழரசு கட்சியின் காரைத்தீவு கிளையில் முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களுக்காக ஆத்ம சாந்தி பிரார்த்தனை இன்று இடம்பெற்றது உயிரிழந்த உறவினர்களுக்கு சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!