சூயஸ் கால்வாயின் சரித்திரம் (நிலமெல்லாம் ரத்தம் - 66)
20 Sep, 2026
நாஜிகளின் போர்க்குற்றங்களை வெளிப்படுத்துவதற்கான சட்டமூலம் மிக நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அமெரிக்காவில் சிலகாலம் முன்பு நிறைவேற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்தே குறித்த விடயங்கள் பொதுவெளிக்கு வந்தன. ‘ஹிட்லரின் நிழல்: நாஜி போர்க் குற்றவாளிகள், அமெரிக்க உளவுத்துறை மற்றும் கெடுபிடிப்போர்’ (Hitler’s Shadow: Nazi War Criminals, US Intelligence and the Cold War) என்று தலைப்பிடப்பட்ட அறிக்கையானது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நேச நாட்டு உளவுத்துறை அதிகாரிகள் முன்னாள் நாஜிக்கள் மற்றும் போர்க் குற்றவாளிகள் பயனுள்ளவர்களாகவும் ஒத்துழைப்பவர்களாகவும் இருந்தால் அவர்களைப் பாதுகாத்தனர் என்பதை உறுதிப்படுத்துகின்றது.
‘சந்தேகத்திற்கு இடமின்றி, கெடுபிடிப்போரின் ஆரம்பம் அமெரிக்க உளவுத்துறை அமைப்புகளுக்கு புதிய செயல்பாடுகள், புதிய முன்னுரிமைகள் மற்றும் புதிய எதிரிகளை வழங்கியது.
ஜேர்மனியர்கள் அல்லது ஜேர்மன் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதோ தண்டிப்பதோ முக்கியமானதல்ல. மாறாக சில சமயங்களில், அவ்வாறு செய்வது எதிர்விளைவுகளைத் தோற்றுவிக்கும் போலவிருந்தது’ என்று அறிக்கை குறிப்பிடுகின்றது.
இவ்வறிக்கை சுட்டிக்காட்டுகின்ற எண்ணற்ற உதாரணங்களில் ஒன்றை மட்டும் நோக்கலாம். ருடால்ஃப் மில்ட்னர், நாஜி அதிகாரியாகப் பணியாற்றியவர்.
இன்றும் யூதர்களின் மீதான கொடும்பாதகத்தின் சாட்சியாகக் கொள்ளப்படுகின்ற ஆஷ்விட்ஸ் சித்திரவதை முகாமுக்குப் பொறுப்பாக இருந்தவர்.
இதை அமெரிக்கா நன்கு அறிந்திருந்தது. போருக்குப் பின்னர் வியன்னாவில் வைத்து விசாரிக்கப்பட்டபோது, அமெரிக்க அதிகாரிகள் அவரை ‘மிகவும் நம்பகமானவர் மற்றும் ஒத்துழைப்பவர்’ என்று நற்சான்றிதழ் கொடுத்தனர் என்று சொல்லும் அறிக்கை, ஆஷ்விட்ஸில் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட மில்ட்னர், ‘ஒழுங்கைப் பாதுகாக்க மற்றும் நாசவேலைகளைத் தடுக்க, போலந்து மற்றும் சிலேசியாவில் உள்ள ஜேர்மனியர்கள் அதைச் செய்ய வேண்டும்’ என்று கூறி, தனது நடவடிக்கைகளை நியாயப்படுத்த முயன்றதாகக் கூறுகிறது.
இவ்வறிக்கை அமெரிக்க உளவுத்துறை அவர் நியூரேம்பேர்க் தீர்ப்பாயத்தில் இருந்து தப்பி தென்னமெரிக்கா செல்வதற்கு உதவியது என்று கூறுகிறது.
இவ்வாறு பலரை அமெரிக்கா பாதுகாப்பாகத் தப்புவதற்கு உதவியது என்பது இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அதேபோலவே பல நாஜிகள் அமெரிக்க உளவுத்துறையால் மன்னிக்கப்பட்டு ஜேர்மனியில் இயங்க அனுமதிக்கப்பட்டார்கள்.
வெளித்தோற்றத்திற்கு ‘நாசிச சிந்தனைகளுக்கு தடை’ இருந்தபோது நடைமுறையில் அது இருக்கவில்லை.
மாறாக கம்யூனிச அபாயத்திற்கு எதிரான நல்ல கூட்டாளிகளாக நாஜிகள் கருதப்பட்டார்கள். எனவே அச்சித்தாந்தம் உயிர்ப்புடன் இருக்கவும் இயங்கவும் அமைப்பாகவும் அனுமதிக்கப்பட்டது.
1945க்குப் பிறகு சோவியத் கூட்டமைப்பு மேற்குலகின் பொது எதிரியாக இருந்ததால், கெடுபிடிப்போரின் புதிய முனைகளில் அவர்களின் திறமைகள் பயனுள்ளதாக இருந்தால், முன்னாள் நாஜிக்கள் நீதியிலிருந்து தப்பிக்க முடியும் என்பதை நேச நாட்டு அதிகாரிகள் பரவலாக ஏற்றுக்கொண்டதாக பல வரலாற்றாசிரியர்கள் கூறியுள்ளனர்.
அதேபோல 2010ஆம் ஆண்டு ஜேர்மனியின் ஸ்டாசி ஆவணக்காப்பகத்தின் அதிகாரிகள் மேற்கு ஜேர்மனியின் இரகசிய சேவை முன்னாள் நாஜிக் குற்றவாளிகளை பணியமர்த்துவதைக் காட்டும் சில தகவல்களை வெளியிட ஒப்புக்கொண்டுள்ளனர்.
ஆனால் சில முக்கிய தகவல்கள் இன்னமும் மறைத்து வைக்கப்பட்டுள்ளன. வெளியிடப்பட்ட தகவல்கள், மேற்கு ஜேர்மன் உளவுத்துறை எவ்வாறு முன்னாள் நாஜிக்கள் மற்றும் போர்க் குற்றவாளிகளைப் பயன்படுத்தியது என்பதைக் காட்டுகிறது.
ஜேர்மன் உளவுத்துறையின் கடந்த காலத்தைப் பற்றிய முக்கியமான தகவல்கள் ஸ்டாசி கோப்புகளில் நீண்ட காலமாக மறைக்கப்பட்டுள்ளன.
முன்னாள் கம்யூனிஸ்ட் கிழக்கு ஜெர்மனியின் இரகசியப் பொலிஸாரான ஸ்டாசியால் உன்னிப்பாகச் சேகரிக்கப்பட்ட ஏராளமான தகவல்களைக் கொண்ட தகவல்களின் பரந்த காப்பகமே இப்போது ஸ்டாசி ஆவணக் காப்பகமாகும்.
வெளியாகியிருப்பவை, ஜேர்மனியின் மிக மோசமான இரகசியங்களில் ஒன்றாகும். ஆயினும்கூட, மேற்கு ஜேர்மனியின் பொலிஸ், இரகசிய சேவை மற்றும் அரசியலில் முன்னாள் நாஜிக்கள் மற்றும் போர்க்குற்றவாளிகள் இருப்பதை இன்னும் கேள்விகள் சூழ்ந்துள்ளன.
அந்த மக்கள் யார், அவர்கள் நாஜி ஜெர்மனியிலும் பின்னர் போருக்குப் பிந்தைய மேற்கு ஜெர்மனியிலும் என்ன பதவிகளை வகித்தனர்? இவை இன்னமும் பதில் தெரியா வினாக்கள்.
ஆனால் இவை ஜேர்மனியில் நாசிசம் எவ்வாறு தப்பிப்பிழைத்தது என்பதைப் புரிந்து கொள்ளப் போதுமானது.
-தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ-
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!