வாழப் போராடும் தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்கள்! கண்டுகொள்ளாத அபிவிருத்தி திட்டங்கள் (ஒரு நேரடி றிப்போட்)
யுத்தம் முடிவடைந்து 7 ஆண்டுகள் நெருங்குகின்றது. யுத்தத்தின் போது கைது செய்யப்பட்ட மற்றும் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட 12 ஆயிரம் வரையிலான முன்னாள் போராளிகள் சமூகத்துடன் இணைக்கப்பட்டு விட்டார்கள்.
ஆனால், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்கியவர்கள், சாப்பாடு கொடுத்தவர்கள், சந்தேகத்தின் பேரில் கைது செயடயப்பட்டவர்கள் மற்றும் காணாமல் போனவர்கள் போன்றவர்களின் முடிவு தான் இன்று வரை விடை தெரியாத வினாக்களாக தொடர்கின்றன.
இந்நிலையில் நாட்டின் 14 சிறைச்சாலைகளிலும் இருந்த 217 தமிழ் அரசியல் கைதிகள் தம்மை பொது மன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என தொடர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் இரு கட்டங்களாக இருந்தனர்.
நல்லாட்சி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய வாக்குறுதியை அடுத்து முதலாவது கட்ட போராட்டம் கைவிடப்பட்டது. வழங்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படாமையால் இரண்டாம் கட்டமாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து சிலர் கடும் நிபந்தனையுடன் கூடியதான பிணையில் விடுதலை செய்யப்பட்டதுடன், 100 வரையிலான தமிழ் அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வு வழங்குவதாகவும், நீதிமன்றில் வழக்கு உள்ளவர்களின் வழக்கு விசாரணையை துரிதப்படுத்துவது எனவும் வழங்கப்பட்ட வாக்குறுதியையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் டிசம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னர் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் அல்லது மீண்டும் தாம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலைக்காக போராட அதற்கு வலுச் சேர்க்கும் வகையிலான போராட்டங்கள் வடக்கு, கிழக்கிலும் இடம்பெற்று வருகின்றது.
அதன் ஒரு உச்சமாக யாழ் கொக்குவில் இந்து கல்லூரி மாணவன் செந்தூரன் (18 வயது) அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி புகையிரதம் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதற்கு பின்னரும் நல்லாட்சி என கூறும் அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பது ஒரு புறம்மிருக்க, தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்கள் இன்று சமூகத்தில் நாளாந்தம் வாழ்வதற்கும், ஒரு வயிறு சோற்றுக்காகவும் போராடும் அவலநிலை தொடர்கிறது.
இது தொடர்பில் அரச அதிகாரிகளோ, மக்கள் பிரதிநிதிகளோ கவனம் செலுத்தியதாக இல்லை என்கின்றனர் பாதிக்கப்பட்டவர்கள். அந்தவகையில் தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்களின் இன்றைய அவலநிலையை வெளிப்படுத்தும் சில பதிவுகளே இவை…
கூலி வேலை செய்து பிள்ளையுடன் வாழப் போராடும் குணநாதன் நிர்மலாதேவி
வவுனியா, கோவில் புளியங்குளம் பகுதியில் வசிப்பவர் குணநாதன் நிர்மலாதேவி. யுத்த்தின் பாதிப்புக்களை நேரடியாக சுமந்த நிர்மலாதேவியின் குடும்பம் இறுதி யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து, இறுதியில் இராணுவத்திடம் தஞ்சம் அடைந்து செட்டிகுளம் ஆனந்தகுமாரசாமி முகாமில் தங்கவைக்கப்பட்டனர்.
அங்கு வைத்து 2009 செப்ரெம்பர் 24 ஆம் திகதி நிர்மலாதேவியின் கணவன் கந்தையா குணநாதன் கைது செய்யப்பட்டார். அதன் போது தனது 7 வயது மகளுடன் முகாமில் தனிமையில் இருந்து விடுதலையாகி தற்போது கோவில்புளியங்குளம் பகுதியில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இவரது கணவன் இன்று வரை விடுதலை செய்யப்படாத நிலையில் அனுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதியாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
மீள்குடியேறியவர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுதிட்ட வீட்டில் அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் இன்று தரம் 9 இல் கல்விகற்கும் தனது மகளுடன் வாழ்வதற்காக போராடுகிறது இந்த குடும்பம்.
குடும்பத்தை பார்க்க வேண்டிய கணவன் சிறையில், கையில் காயம் அடைந்து பெரிய வேலைகள் செய்ய முடியாத நிர்மலா தேவி தனது பிள்ளையின் படிப்புக்காகவும் சிறையில் இருக்கும் தனது கணவனை சென்று பார்த்து வருவதற்காகவும் உழைக்க வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டாள்.
நாள்ளாந்தம் கூலிவேலைக்குச் சென்று தன்னால் முடிந்ததை செய்து 500 ரூபாய் சம்பளம் பெற்று அதில் தனது சீவியத்தை போக்குகிறது இந்த குடும்பம்.
அக்கம், பக்கமமெல்லம் வழங்கப்பட்டுள்ள மின்சாரம் இந்த குடும்பத்தின் வீட்டை மட்டும் இன்னும் எட்டிப் பார்க்கவில்லை. சமுர்த்தி தொடக்கம் அரசின் எந்தவொரு வாழ்வாத உதவிகளும் இந்த குடும்பதற்கு கிடைக்கவில்லை.
காரணம் என்ன என கண்ணீர் வீடுகின்றனர் நிர்மலாதேவியும், கையில் புத்தகமைப்பையுடன் நிற்கும் மகளும்.
சிவலிங்கம் சேமமாலினியின் சோகமும் பிள்ளையின் ஏக்கமும்
மன்னார், மடு, இரணைஇலுப்பைக்குளம் பகுதியில் வசித்து வரும் சிவலிங்கம் சேமமாலினியின் குடும்பத்தின் சோகத்திற்கும் இன்று வரை முடிவில்லை.
வன்னியின் வட்டக்கச்சிப் பகுதியில் குடியிருந்த சேமமாலினியின் குடும்பம் இறுதி யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து முள்ளியவாய்க்கால், வட்டுவாகல் என நகர்ந்து ஓமந்தை ஊடாக இராணுவ பிரதேசத்திற்குள் வந்தவர்களே சேமமாலினியின் குடும்பத்தினர்.
பிள்ளை பிறந்து ஒரு மாதமே ஆகியிருந்த நிலையில் 2009 மே 20 ஆம் திகதி சேமமாலினியின் கணவன் நல்லான் சிவலிங்கம் ஓமந்தையில் இராணுவத்திடம் சரணடைந்தார்.
சரணடைந்தவர்கள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டுவிட்டதாக கூறப்படும் நிலையில் சிவலிங்கம் மட்டும் இன்றும் தமிழ் அரசியல் கைதிகளின் வரிசையில் சிறையில் வாடுகிறார். அனுராதபுரம் மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு எந்தவொரு முடிவும் இன்றி கடந்த 6 வருடங்களைக் கடந்தும் இவரது வழக்கு மீதான விசாரணை தொடர்கிறது. பிறந்து ஒரு மாதத்தில் தனது தந்தையை பறிகொடுத்த குழந்தை இன்று 6 வயது நிரம்பிய நிலையில் ‘அப்பா எப்ப வருவார்… மைத்திரி மாமா அப்பாவை விடமாட்டடாரா… என்னை அப்பா எப்ப தூக்குவார்.. அப்பா தூக்கும் முன்பு நான் வளர்ந்து விடப்போறன்..’ என தினமும் தாயிடம் கேட்டபடி உள்ளார். சிறுமியின் கேள்விக்கு விடை சொல்ல முடியாத தாயார் தினமும் கண்ணீர் விட்டழுதபடி உள்ளார். இந்த சோகத்திற்குள் தோட்டம், கோழி வளர்ப்பு என தினமும் போராட்ட வாழ்க்கை நடத்தி தனது வாழ்வாதாரத்தை போக்குகிறார் சேமமாலினி.
வீண் போன தங்கமணியின் நம்பிக்கையும் தொடரும் சோகமும்
வவுனியா, நாகர்இலுப்பைக்குளத்தைச் சேந்தவர் சுப்பிரமணியம் தங்கமணி. யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் பல்வேறு இடம்பெயர்வுகளைச் சந்தித்திருந்த இருந்த குடும்பம் இராணுவ கட்டுப்பாடடு பகுதியில் நீண்ட காலமாக வசித்தும் வந்தது.
இந்நிலையில் கடந்த 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வீட்டில் இருந்து வேலைக்காக சென்ற தங்கமணியின் மூத்த மகன் (அப்போது வயது 20) செட்டிகுளம் பொலிசாரால் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டார்.
இன்று 10 வருடங்கள் ஆகின்ற நிலையில் கூட குறித்த இளைஞன் விடுதலை செய்யப்படாது தொடர்ந்தும் தமிழ் அரசியல் கைதியாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அவனை எப்படியாவது விடுவிக்க வேண்டும் என வீட்டில் இருந்த பணம், நகைகள் எல்லாவற்றையும் முழுவதுமாக இழந்த நிலையில் இன்று ஒரு நேர வயிற்றுப் பசிக்காக நான்கு ஜீவன்கள் போராடிக் கொண்டிருக்கின்றன. மகன் பிடிபட்டதில் இருந்து மன ரீதியாக பாதிக்கப்பட்ட தந்தை இன்றும் பராமரிக்கப்பட வேண்டியவராகவே உள்ளார்.
தங்கமணியின் உடல் இயலாத தாயும் இன்று தங்கமணியின் குழந்தையாகவே உள்ளார். தங்கமணியின் மகள் வேலைக்கு போனால் தான் அந்த வீட்டு அடுப்படியில் வெளிச்சம் தெரியும் நிலையில் உள்ளது அவர்களது நிலமை. ஒரு நாள் வேலைக்கு செல்லவில்லை என்றால் அன்று இவர்கள் வீட்டில் உண்ணாவிரதம் தான்.
அரசாங்கம் வடக்கில் அபிவிருத்தி, பொருளாதார உதவி என கூறுகின்றது ஆனால் பல அரசியல் கைதிகளின் வீடுகளில் தினமும் உண்ணாவிரதமே தொடர்கிறது.
அப்படியாயின் அரச உதவிகள் யாருக்கு வழங்கப்பட்டது…? ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கும் போது எனது மகன் வந்துவிடுவான் என நம்பியிருந்த தங்கமணியின் நம்பிக்கையும் வீண்போன நிலையில் அவர்கள் வாழ்க்கைப் போராட்டம் தொடர்கிறது.
தமிழ் அரசியல் கைதிகளாக சிறையில் உள்ளவர்களின் சில குடும்பங்களின் பதிவே இவை. இதுபோலவே இன்றும் பல தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்கள் வாழப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் தமிழ் மக்களுக்கான பொருளாதார உதவிகள், அபிவிருத்திகள் பெரிதும் புறக்கணிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தமிழ் பேசும் மக்களின் ஆதரவுடன் நிறுவப்பட்ட நல்லாட்சி அரசாங்கம் இன்று பொறுப்பேற்று 10 மாதங்கள் கடந்த நிலையில் கூட தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்களின் அவலம் தொடர்கிறது.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை என்பது ஒரு புறமிருக்க, அவர்களின் குடும்பங்கள் இன்று வாழ்வதற்கே நாளாந்தம் போராட வேண்டிய நிலையில் உள்ளது.
சமுர்த்தி நிவாரணம், பொருளாதார சுயதொழில் உதவிகள் என அரசால் பலருக்கும் வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கு அவை வழங்கப்படாது புறக்கணிக்கப்படுவது ஏன்..?
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக குரல் கொடுக்கும் மக்கள் பிரதிநிதிகள், வடமாகாண சபை அவர்களின் குடும்பங்கள் தொடர்பில் கவனம் செலுத்தாதது ஏன்..? அரசியல் கைதிகள் குடும்பங்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகிறார்களா..? என பல வினாக்கள் அவர்களிடம் எழாமலும் இல்லை.
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், அவர்கள் விடுதலையாகி வரும் போது அவர்களை பார்க்க அவர்களது குடும்பங்கள் இங்கு இருக்க வேண்டும். அதற்காக அரசாங்கமும் மக்கள் பிரதிநிதிகளும் என்ன செய்யப் போகிறார்கள் என்பதே இப்போதுள்ள கேள்வி.
-கே.வாசு-

கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!