``விசுவோட மூணு பொண்ணுங்க இறுதி சடங்குக்கு வந்தாங்களானுகூட தெரியல!" - கமலா கண்ணீர்
`விசுவுடைய இறப்புக்கு என்னால போக முடியல. இதுதான் பெரிய வலியைக் கொடுக்குது. நேத்துல இருந்து அழுதுகிட்டே இருக்கேன். எனக்கு உடல்நிலை சரியில்லை.’
``என் கணவர் காமேஷின் நெருங்கிய நண்பர் விசு. அப்ப, மயிலாப்பூர்ல எங்க வீடு இருந்தது. விசு எப்பவும் எங்க வீட்டுலதான் இருப்பார்.
நிறைய மேடை நாடகங்களுக்கான ஒத்திகை, டிஸ்கஷன் எல்லாமே எங்க வீட்டுல நடக்கும். விசுவின் நாடகங்களுக்கு என் கணவர் இசையமைப்பார். அதனால எப்போவும் வீடு கச்சேரியும், சந்தோஷமுமா இருக்கும்.
அதை நினைச்சா இப்பக்கூட கண்ணுல கண்ணீர் வருது. என் கணவர் மூலமாதான் விசுவைத் தெரியும். விசு திருமணத்துக்குப் பெண் பார்த்துட்டு, `சுந்தரியைக் கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன். உங்களுக்கு எப்படிப் படுது'னு கேட்டார்.
அந்தளவுக்கு வீட்டுக்கு நெருக்கமான ஒருத்தர். விசுவோட படங்கள்ல அறிமுகமாகுறதுக்கு முன்னாடி `குடிசை'னு ஒரு படத்துல ஹீரோயினா நடிச்சிருந்தேன்.
இந்தப் படத்துக்கான எடிட்டிங் போயிட்டிருந்தப்ப விசு என்னோட ஆக்டிங் பார்த்துட்டு கமலேஷ்கிட்ட, `கமலா நல்லா நடிக்குறாங்க. தொடர்ந்து நடிக்கட்டும்.
திறமையோட வீட்டுல ஏன் இருக்கணும்'னு கேட்டார். `அவளுக்கு நடிக்க தெரியாதுபா. ஏதோ இந்தப் படத்துல முயற்சி பண்ணியிருக்கா'னு காமேஷ் சொன்னார்.
விசு விடாம என் கணவர்கிட்ட பேசிட்டு அவரோட மேடை நாடகங்கள்ல என்னை நடிக்க வெச்சார். கிட்டத்தட்ட 2000-க்கும் மேலே மேடை நாடகங்கள்ல நடிச்சிருக்கேன்."
``காமேஷ் இறந்தப்ப, உமா கையிலே ஏழு வயசு குழந்தையா இருந்தா. அவளைக் கையிலே வெச்சுக்கிட்டு தனியா நின்னுட்டு இருந்தேன்.
அப்ப விசுவோட மொத்தக் குடும்பமும் வந்து எல்லாருக்கும் சாப்பாடு சமைச்சு போட்டு எல்லா காரியங்களையும் நடத்துனாங்க.
இந்த உதவியை நான் மறக்கவே மாட்டேன். அதே மாதிரி விசுவுடைய இறப்புக்கு என்னால போக முடியல. இதுதான் பெரிய வலியைக் கொடுக்குது. நேத்துல இருந்து அழுதுகிட்டே இருக்கேன்.
எனக்கு உடல்நிலை சரியில்லை. இடுப்புல ஏழு முறை வரைக்கும் ஆபரேஷன் நடந்திருக்கு. அதனாலதான் நடக்க முடியாமப் போகல. கடைசியா விசுவை ஆச்சி அம்மா இறந்தப்ப நேர்ல பார்த்தேன். `கமலா எப்படியிருக்க'னு பேசுனார். அப்பவே அவருக்கு டயாலசிஸ் சிகிச்சை போயிட்டிருந்தது.
அதுமட்டுமல்லாம, எந்த நேரத்துலயும் கொஞ்சமும் என்னை விசு விட்டுக்கொடுத்ததே இல்லை. அவரை மொத்த யூனிட்லயும் பேர் சொல்லிக் கூப்பிடுற நபர் நான் மட்டும்தான்."
`எனக்கான மரியாதையை அவரும் கொடுப்பார். 'அவள் சுமங்கலிதான்' படத்தின்போது பரிசல்ல ஷூட் போயிட்டிருந்தப்ப எல்லாரும் இறங்கிப் போயிட்டாங்க.
கடைசியா இறங்க முடியாம நான் தவிச்சிருந்தப்ப அங்கே இருந்த மேனேஜர் ஒருத்தரை 'டேய் புளியங்கொட்டை வாடா'னு கூப்பிட்டேன்.
இதைப் பார்த்துட்டு இருந்த கார்த்திக், `யாரை எப்படி கூப்பிடணும்னு தெரியா வேண்டாம்'னு விளையாட்டா சொன்னார். உடனே விசு, `இந்த யூனிட்ல என்னைப் பெயர் சொல்லி கமலாதான் கூப்பிடுவாங்க. அந்தளவுக்கு அவங்களுக்கு மரியாதை கொடுத்திருக்கேன்.
என் நெருங்கிய நண்பனின் மனைவி கமலா. இந்த யூனிட்ல இருக்கிற யாரையும் எப்படி கூப்பிடவும் அவளுக்கு உரிமை இருக்கு'னு கார்த்திக்கிட்ட சொன்னார். அந்தளவுக்கு என்னைப் பார்த்துக்குவார்.
என் பொண்ணோட உமா பெயரை அவருக்கு ரொம்பப் பிடிக்கும். அவரோட படத்துல வர்ற பெரும்பாலான ஹீரோயின்ஸ் பேர் உமானுதான் இருக்கும்.
விசுவை நினைச்சிட்டா பழைய நினைவுகள் எல்லாமே நினைவுல வருது. அவரோட முகத்தைக் கடைசியா பார்க்க முடியலனு கஷ்டமா இருக்கும். அவருக்கு மூணு பொண்ணுங்க. ஒருத்தி துபாய், இன்னொருத்தி டெல்லினு இருந்தாங்க. எல்லாரும் இறுதிச் சடங்குக்கு வந்தாங்களானு தெரியல. தெரிஞ்சுன்னா யாராவது சொல்லுங்க''னு கண்ணீர் மல்கக் கூறுகிறார் கமலா.

கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!