விஷ்ணு பிரியா தற்கொலைக்கு உயரதிகாரிகளே காரணம்: பெண் டி.எஸ்.பி. பரபரப்பு குற்றச்சாட்டு! -(வீடியோ)
சேலம் மாவட்டம், திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணு பிரியா (27). இவர், முகாம் அலுவலகத்தில் உள்ள தனது குடியிருப்பில் திடீரென நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடலூரை சேர்ந்த திருமணமாகாத நேர்மையான அதிகாரியான விஷ்ணு பிரியா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காவல்துறையை மட்டுமல்லாமல் தமிழகத்தையே பெரும் பரபரப்புக்குள்ளாக்கி உள்ளது.
இந்நிலையில் விஷ்ணு பிரியாவின் தோழியும், கீழக்கரை டி.எஸ்.பி.யுமான மகேஸ்வரி கூறும்போது, ''விஷ்ணு பிரியா காவல்துறையை மிகவும் நேசித்தார். அவர் பணம் எதுவும் வாங்காமல் செயல்பட்ட நேர்மையான அதிகாரி. மிகவும் திறமையான அதிகாரியும் ஆவார். தனிப்பட்ட முறையில் எனக்கு அவரை கடந்த 6 ஆண்டுகளாக தெரியும். நானும் அவரும் மிகவும் நெருங்கிய தோழிகள்.
தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு எல்லாம் விஷ்ணு பிரியா கோழை கிடையாது. தற்கொலை செய்துகொள்வதற்கு முன் அவர் என்னிடம்தான் கடைசியாக பேசினார்.
அவர் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு சென்றுவிட்டு வந்து என்னிடம் சுமார் மதியம் 2.48 மணியளவில் பேசினார்.
நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்போது, திடீரென எஸ்.பி. லைனில் வருவதாக கூறிவிட்டு லைனை விஷ்ணு பிரியா துண்டித்துவிட்டார். அதன்பின் அவரது தொலைபேசி சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
அவருக்கு வாழ்க்கையில் எந்தவித பிரச்னையும் இல்லை. போலீஸ் சொல்வதெல்லாம் சுத்த பொய். இதை சொல்வதால் என் வேலைகூட போகலாம். அதனால் எனக்கு பிரச்னை ஏதும் இல்லை.கோகுல்ராஜ் கொலை வழக்கில் அவருக்கு எல்லா மட்டத்தில் இருந்தும் நெருக்கடி கொடுத்திருக்கிறார்கள். அவருடைய தற்கொலைக்கு எஸ்.பி., டி.ஐ.ஜி. போன்ற உயரதிகாரிகள்தான் முழுக்க முழுக்க காரணம்.
காவல்துறை அதிகாரிகள் மட்டுமல்லாமல், (கோகுல்ராஜ் வழக்கில் தேடப்படும் குற்றவாளி) யுவராஜ் தரப்பில் இருந்தும் அவருக்கு அச்சுறுத்தல் இருந்துள்ளது.
குறிப்பாக காவல்துறையினர், குற்றவாளிகள் அல்லாத 3 பேர் மீது குண்டாஸ் போட சொல்லி விஷ்ணு பிரியாவை வற்புறுத்தி உள்ளனர்.
இப்படி செய்ய எனக்கு உடன்பாடு இல்லை என்று அவர் என்னிடமே பலமுறை சொல்லி இருக்கிறார்.
நானும் ஒரு டி.எஸ்.பி. என்கிற முறையில் இதுபோன்ற அச்சுறுத்தல்களை தினமும் சந்தித்து கொண்டு தான் இருக்கிறேன். குறிப்பாக, காவல்துறையில் பெண்களுக்கு இதுமாதிரியான அச்சுறுத்தல்கள் தொடர்ந்து கொண்டுதான் இருகிறது.
விஷ்ணு பிரியா எழுதியதாக கூறப்படும் கடிதத்தில், 'போலீஸ் வேலையை நான் உயிராக நினைக்கிறேன். ஆனால் அதற்கு நான் தகுதியானவள் இல்லை' என்பதுபோல் எழுதி இருக்கிறார் என்று காவல்துறை சார்பில் சொல்கிறார்கள்.
ஆனால் அவர் முழுக்க முழுக்க தகுதியானவர்தான். அவரை இந்த நிலைக்கு தள்ளியவர்கள் உயரதிகாரிகள் தான்.
இது தொடர்பாக முறையாக விசாரித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அப்போது தான் என்னைப்போன்ற பெண் காவலர்கள் பயமில்லாமல் பணியாற்ற முடியும். மேலும் இதுபோன்ற உயிரிழப்புக்களை தடுக்கவும் முடியும்" என்றார் ஆவேசமாக.
முன்னதாக, கோகுல்ராஜ் வழக்கில் தேடப்படும் குற்றவாளியான யுவராஜின் உறவினர் என நம்பப்படும் கோமதி என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், கோகுல் ராஜ் கொலை வழக்கு விசாரணை பற்றிய போலீசாரின் வெளியிட முடியாத ஆவணங்களை நாமக்கல் ஏ.டி.எஸ்.பி.யிடம் கேட்டுள்ளார்.
இதையடுத்து ஏ.டி.எஸ்.பி., கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணை பற்றி கோமதி கேட்கும் தகவல்களை உடனடியாக கொடுக்குமாறு திருச்செங்கோடு டி.எஸ்.பி க்கு உத்தரவிட்டிருக்கிறார்.
இந்நிலையில்தான் டி.எஸ்.பி. விஷ்ணு பிரியா நேற்று தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
- எம்.புண்ணியமூர்த்தி
திருசெங்கோடு: அப்பா... அம்மாவைத் திட்டாதீங்கப்பா... அம்மா... ஐ லவ் யூ... நான் எங்க இருந்தாலும் உங்களை பார்த்துக்கிட்டுதான் இருப்பேன்... உங்களோட பேசிட்டுதான் இருப்பேன் என்று தனது மரணத்திற்கு முன்னர் உருக்கமான கடிதம் எழுதியுள்ளார்.


கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!