இஸ்ரேல் தேர்தல்: யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனால் அரசாங்கம் எப்படி அமையும்?
28 Oct, 2026
ஷபாஸ் ஷெரீஃப்
ஷாபாஸ் ஷெரீஃப் பாகிஸ்தானின் புகழ்பெற்ற வணிகக் குடும்பத்தில் பிறந்தவர். ஷாபாஸ் ஷெரீஃப் காஷ்மீரி வம்சாவளியைச் சேர்ந்த பஞ்சாபி என்று டெய்லி டைம்ஸ் இணையதளம் கூறுகிறது. இவர் ஜம்மு காஷ்மீரின் மியான் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்.
ஷெரீஃப் குடும்பம் காஷ்மீரில் உள்ள அனந்த்நாக்கில் வசித்தவர்கள். வணிகம் காரணமாக அமிர்தசரஸில் (அம்ரித்சர்) உள்ள ஜடி உம்ரா கிராமத்திற்கு அவர்கள் இடம்பெயர்ந்தனர்.
அதன் பின்னர் இந்தக்குடும்பம் அம்ரித்ஸரில் இருந்து லாகூருக்கு குடிபெயர்ந்தது. ஷாபாஸ் ஷெரீஃப்பின் தாயின் குடும்பம் காஷ்மீரின் புல்வாமாவைச் சேர்ந்ததாகும் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் வெளியிடப்பட்ட செய்தி தெரிவிக்கிறது.
தனது பட்டப்படிப்பை முடித்த பிறகு, பாகிஸ்தானில் தனது தந்தை முகமது ஷெரீஃபால் தொடங்கப்பட்ட இத்தெஃபாக் குழுமத்தின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.
'Ittefaq Group' என்பது பாகிஸ்தானின் மிகப்பெரிய வணிகக் குழுவாகும். இதில் எஃகு, சர்க்கரை, ஜவுளி, பலகைத் தொழில்கள் ஆகியவை அடங்கும் என்றும் ஷாபாஸ் ஷெரீஃப் இந்த குழுமத்தின் இணை உரிமையாளர் என்றும் Dawn இணையதளம் தெரிவிக்கிறது.
பிபிசியிடம் பேசிய பாகிஸ்தானின் அரசியல் ஆய்வாளர் சுஹைல் வாராய்ச், "ஷாபாஸ் ஷெரீஃப் ஒரு பிரபலமான குடும்பத்தில் பிறந்தவர். ஆரம்பத்தில், அவர் தனது மூத்த சகோதரர் நவாஸ் ஷெரீஃப்பின் வேலைகளில் உதவினார். பின்னர் தனது சகோதரரின் உதவியுடன் அரசியலில் நுழைந்தார்," என்று கூறினார்.
ஷாபாஸ் ஷெரீஃப் 1985 இல் லாகூர் வர்த்தக மற்றும் தொழில் சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவரது அரசியல் பயணம் 1988 ஆம் ஆண்டு பஞ்சாப் மாகாண சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது தொடங்கியது. ஆனால் சட்டப்பேரவை கலைக்கப்பட்டது. அவர் தனது பதவிக்காலத்தை முடிக்க இயலவில்லை.
இதையடுத்து ஷாபாஸ் ஷெரீஃப் தேசிய அரசியலில் கால் பதித்தார். 1990 இல், அவர் பாகிஸ்தானின் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் ஷெரீஃப் பதவியேற்ற நேரம் இது. நவாஸ் ஷெரீஃப் பிரதமராக இருந்த காலம் முழுவதும் ஷாபாஸ் ஷெரீஃப் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.
ராணுவத்தின் அழுத்தம் அதிகரித்ததால், 1993ல் பிரதமர் நாற்காலியில் இருந்து நவாஸ் ஷெரீஃப் விலக நேரிட்டது. அதே ஆண்டில், ஷாபாஸ் ஷெரீஃப் பஞ்சாப் மாகாண சட்டப்பேரவை உறுப்பினராக ஆனார். 1996 வரை எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். 1997 இல், அவர் மூன்றாவது முறையாக பஞ்சாப் மாகாண சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, முதலமைச்சரானார்.
ராணுவம் ஆட்சியை கைப்பற்றியபோது கைது செய்யப்பட்டார்
முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபுடன் ஷபாஸ் ஷெரீஃப் (கோப்புப்படம்)
பஞ்சாப் முதல்வராக ஷாபாஸ் ஷெரீஃப் பதவியேற்ற இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானில் ராணுவப் புரட்சி நடந்தது.
1999 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் தேதி மாலை, பாகிஸ்தானில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை ஜெனரல் பர்வேஸ் முஷாரப் கவிழ்த்தார். இந்த நிலையில், ஷாபாஸ் ஷெரீஃப்பும் கைது செய்யப்பட்டார்.
2000 வது ஆண்டு ஏப்ரலில் ஷாபாஸ் ஷெரீஃப்பின் மூத்த சகோதரர் நவாஸ் ஷெரீஃப்புக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
ஜெனரல் முஷாரஃபின் விமானத்தை கடத்தியதற்காகவும், பயங்கரவாத குற்றச்சாட்டின் பேரிலும் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
சுமார் எட்டு மாதங்களுக்குப் பிறகு, பாகிஸ்தானின் ராணுவ அரசு நவாஸ் ஷெரீஃப்புக்கு மன்னிப்பு அளித்தது. 40 குடும்ப உறுப்பினர்களுடன் நவாஸ், செளதி அரேபியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். இந்த 40 பேரில் ஷாபாஸ் ஷெரீஃப்பும் ஒருவர்.
பாகிஸ்தானில் கைது செய்யப்படும் அபாயம் இருந்தபோதிலும் ஷாபாஸ், அபுதாபியில் இருந்து விமானம் மூலம் 2004இல் லாகூர் வந்தார். சில மணி நேரத்திலேயே அவர் செளதி அரேபியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார் என்று ராய்ட்டர்ஸ் செய்தி முகமை கூறுகிறது.
-பிபிசி தமிழ் செய்தி-
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!