Israel Election : உலகின் மிக விசித்திரமான தேர்தல் முறை — அக்டோபர் 27ல் என்ன நடக்கும்? Explained
25 Oct, 2026
ஹோர்முஸ் ஜலசந்தியை மூடும் திட்டத்திற்கு இரான் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளதாக அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது
படக்குறிப்பு, உலகின் 20 சதவீத எண்ணெய் ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்கிறது
ஹோர்முஸ் ஜலசந்தியை இந்தியா எந்த அளவு சார்ந்துள்ளது?
இந்தியா, தனது கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதத்தையும், எரிவாயு தேவையில் 50 சதவீதத்தையும் பூர்த்தி செய்ய பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறது.
இந்தியாவின் மொத்த எண்ணெய் இறக்குமதியில் 60 சதவீதம் செளதி அரேபியா, இராக் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற வளைகுடா நாடுகளிலிருந்து வருகிறது.
ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் Nelson Mandela Centre for Peace and Conflict Resolution மையத்தின் பேராசிரியர் ரேஷ்மி காஜி கூறுகையில், 'இந்தியா, நாள்தோறும் 50 லட்சம் பீப்பாய்களுக்கும் அதிகமான கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறது. அதில் சுமார் 20 லட்சம் பீப்பாய்கள் ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக வருகின்றன'.
"செளதி அரேபியா, இராக் போன்ற வளைகுடா நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய், ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியாவை வந்தடைகிறது. இந்தியாவின் பொருளாதாரத்தின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு எண்ணெய் மிகவும் முக்கியமானது, எனவே ஹோர்முஸ் ஜலசந்தி செயல்பாட்டில் இருப்பது முக்கியம்" என்று என்றார்.
இருப்பினும், இரானிய நாடாளுமன்றம் ஹோர்முஸ் ஜலசந்தியை மூட முடிவு செய்துள்ளதாக செய்தி வந்தபோது, இந்தியாவின் பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, இதனால் இந்தியாவிற்கு அதிக பாதிப்பு ஏற்படாது என்று எக்ஸ் சமூக ஊடக தளத்தில் பதிவிட்டார்.
"கடந்த இரண்டு வாரங்களாக மத்திய கிழக்கில் மாறிவரும் புவிசார் அரசியல் சூழ்நிலையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். பிரதமர் நரேந்திர மோதியின் தலைமையில், கடந்த சில ஆண்டுகளில் நமது எண்ணெய் விநியோகத்தை நாம் பன்முகப்படுத்தியுள்ளோம், இப்போது நமது எண்ணெய் விநியோகங்களில் பெரும்பகுதி ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக வருவதில்லை" என்று அவர் கூறினார்.
"நமது எண்ணெய் விநியோக நிறுவனங்களுக்கு இந்த வாரத் தேவைக்கான எண்ணெய் உள்ளது, அத்துடன் அவை வேறு வழிகள் மூலமாகவும் கொண்டு வரப்படுகின்றன." என்றும் தெரிவித்தார்.
இந்தியா, கச்சா எண்ணெய், வளைகுடா நாடு
இந்தியாவின் கச்சா எண்ணெயில் பாதிக்கும் மேற்பட்டவை வளைகுடா நாடுகளிலிருந்து வருகின்றன
தாக்கம் என்னவாக இருக்கும்?
ஹோர்முஸ் ஜலசந்தியை மூடினால், அது இந்தியாவிற்கு மிகப்பெரிய அடியாக இருக்கும் என்று ரேஷ்மி காஜி கூறுகிறார்.
"ஹோர்முஸ் ஜலசந்தி இந்தியாவிற்கு மிகவும் குறைந்த செலவு பிடிக்கும் பாதையாகும். இத்தகைய சூழ்நிலையில், அந்த வழி மூடப்பட்டால், இந்தியாவின் இறக்குமதியில் மிகப்பெரிய தாக்கம் ஏற்படும். ஏனெனில் வேறு ஏதேனும் வழியைப் பயன்படுத்தும்போது கப்பல்களுக்கான செலவு அதிகரிக்கும்" என்று அவர் கூறினார்.
"இவை அனைத்தும் உள்நாட்டு கச்சா எண்ணெய் விலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். பெட்ரோல், டீசல் போன்ற பொருட்களின் விலை உயரும். பொருளாதாரத்தின் பெரும்பகுதி எண்ணெய் ஏற்றுமதியைச் சார்ந்துள்ள வளைகுடா நாடுகளின் வணிகத்திலும் சிக்கல்கள் ஏற்படும்."
இருப்பினும், செளதி அரேபியா செங்கடல் வழியாகவும், ஐக்கிய அரபு அமீரகம் புஜைரா மூலமாகவும், இந்தியப் பெருங்கடல் வழியாக ஓமனும் கடற்கரையுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளன, எனவே இந்த நாடுகள் தங்களின் ஏற்றுமதிக்கு இந்த மாற்றுவழிகளைத் தேர்வு செய்யலாம்.
ஆனால் குவைத், பஹ்ரைன் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளுக்கு ஹோர்முஸ் ஜலசந்தியைத் தவிர ஏற்றுமதிக்கு வேறு வழி இல்லை. அதேபோல இரான் மற்றும் இராக் நாடுகளின் ஏற்றுமதிக்கு நேரடியான, சுலபமான பாதை வேறெதுவும் இல்லை.
செளதி அரேபியாவிற்கான இந்திய தூதராக பணியாற்றியவர் தல்மீஸ் அகமது. 2004-06 க்கு இடையில் இந்தியாவின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தில் சர்வதேச ஒத்துழைப்புக்கான கூடுதல் செயலாளராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.
ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டால், அது இந்தியா மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தாத வகையில், இந்தியாவின் எண்ணெய் இறக்குமதியில் போதுமான பன்முகத்தன்மை உருவாக்கப்பட்டுள்ளதா என்று அவரிடம் பிபிசி கேட்டது.
இந்தக் கேள்விக்குப் பதிலளித்த தல்மிஸ் அகமது, "இந்தியா எண்ணெய்க்காக தற்போதும் வளைகுடா நாடுகளையே சார்ந்துள்ளது,
எதிர்காலத்திலும் தொடர்ந்து அவற்றையே சார்ந்திருக்கும். வளைகுடா நாடுகள் நமக்கு நெருக்கமானவை என்பதால், போக்குவரத்துச் செலவு குறைவாக இருக்கிறது.
அத்துடன், இந்தியாவின் சுத்திகரிப்பு நிலையங்கள் வளைகுடா நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெயை சுத்திகரிப்பு செய்வதற்குப் பழகிவிட்டன. மேலும் இந்த நாடுகளுடன் நமக்கு நீண்டகால விநியோக ஒப்பந்தங்கள் உள்ளன" என்று கூறுகிறார்.
"பல்வகைப்படுத்தலைப் பொறுத்தவரை, வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் நைஜீரியா, ரஷ்யா போன்ற நாடுகளிலிருந்து நாம் எண்ணெய் இறக்குமதி செய்துள்ளோம். ஆனால் பெரும்பாலான இறக்குமதிகள் நீண்ட கால ஒப்பந்தங்களின் கீழ் உள்ளது."
இருப்பினும், கடந்த ஆண்டுகளில் வளைகுடா நாடுகளுடனான நீண்டகால ஒப்பந்தங்கள் குறைக்கப்பட்டுள்ளன என்பதையும் அவர் அடிக்கோடிட்டுக் காட்டுகிறார்.
"முன்பு, இந்தியா நீண்டகால ஒப்பந்தங்களை 80 முதல் 90 சதவீதம் பயன்படுத்தியது போல அல்லாமல், தற்போது அதனை 60-70 சதவீதமாக குறைத்துவிட்டோம்.
ஆனால் வேறுபிற நாடுகளிலிருந்து எரிசக்தி பொருட்களை வாங்குவது 30 சதவீதம் மட்டுமே" என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று அவர் கூறினார்.
இரான் எண்ணெய் ஏற்றுமதி செய்ய ஹோர்முஸ் ஜலசந்தியை பயன்படுத்துகிறது
இந்தியாவின் முன் இருக்கும் வாய்ப்புகள் யாவை?
இந்திய அரசாங்கம் தனது எண்ணெய் இறக்குமதியை பன்முகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. எனவே, கடந்த சில ஆண்டுகளில் வளைகுடாவைத் தவிர ரஷ்யா, நைஜீரியா, குயானா, அமெரிக்கா போன்ற நாடுகளிடம் இருந்து இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்கிறது.
ரிலையன்ஸ் நிறுவனம் வெனிசுலாவிலிருந்தும் எண்ணெய் இறக்குமதி செய்கிறது. இப்படி பல நாடுகளில் இருந்தும் எண்ணெய் இறக்குமதி செய்தாலும், தொலைவு காரணமாக போக்குவரத்து செலவு கணிசமாக அதிகரிக்கிறது.
ஹோர்முஸ் ஜலசந்தியைத் தவிர, இந்தியா அதிகமாகப் பயன்படுத்தும் கடல் வழித்தடங்களில் செங்கடல், சூயஸ் கால்வாய் மற்றும் இந்தியப் பெருங்கடல் ஆகியவை அடங்கும்.
இரான் உண்மையிலேயே ஹோர்முஸ் ஜலசந்தியை மூடிவிடுமா?
நாம் ஆரம்பத்தில் கூறியது போல, இரான் ஹோர்முஸ் ஜலசந்தியை மூடுவதாகப் பல சந்தர்ப்பங்களில் அச்சுறுத்தியும் எச்சரித்தும் வந்துள்ளது. ஆனால் ஒருபோதும் அவ்வாறு செய்யவில்லை.
தற்போது, ஹோர்முஸ் ஜலசந்தியை மூடுவதாக அறிவித்த இரானின் எச்சரிக்கை குறித்து தல்மிஸ் அகமதிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
ஹோர்முஸ் ஜலசந்தியை மூடுவது தற்போதைக்கு சாத்தியமில்லை என்று தல்மிஸ் அகமது கருதுகிறார்.
அவரைப் பொறுத்தவரை, ஹோர்முஸ் ஜலசந்தி பகுதியில் அமெரிக்காவின் சக்திவாய்ந்த கடற்படை மற்றும் அமெரிக்க விமானப்படை குறிப்பிடத்தக்க அளவில் தங்கள் இருப்பை தக்கவைத்துள்ளது. ஹோர்முஸை மூட அமெரிக்கா அனுமதிக்காது.
"இரண்டாவதாக, ஹோர்முஸ் ஜலசந்தியை மூடுவதால் இரானுக்கு எந்தவித பலனும் கிடைக்காது. ஏற்கனவே அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகளிடமிருந்து இரான் கடுமையான பொருளாதார தடைகளை எதிர்கொண்டிருக்கிறது."
"எண்ணெய் ஏற்றுமதி செய்ய ஹோர்முஸ் ஜலசந்தியை இரான் பயன்படுத்துகிறது. இரானுடன் நல்ல உறவுகளைக் கொண்ட பல வளைகுடா நாடுகளும் இந்தப் பாதையைப் பயன்படுத்துகின்றன. இந்தச் சூழ்நிலையில், தனது நட்பு நாடுகளை கோபப்படுத்தும் பேராபத்தை இரானால் முன்னெடுக்க முடியாது."
- இது, பிபிசி நியூஸ்-
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!