நக்கிள்ஸ் மலைத்தொடரின் மேற்குச் சரிவில் அமைந்துள்ள உடுதும்பரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீமுரே - கனதகெட்டிய, தம்படே பகுதியில் கடந்த 05 மாதங்களுக்கு முன்னர் காணாமல் போனதாகப் புகாரளிக்கப்பட்ட 15 வயது சிறுமி, காட்டுப் பகுதியில் உள்ள குகை ஒன்றில் 02 மாதக் குழந்தையுடன் இருந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில், குழந்தையின் தந்தை எனக் கூறப்படும் 23 வயது இளைஞனும், அவருக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் 36 வயதான அவரது மாமாவும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கித்துல் தொழிலை பிரதானமாகக் கொண்ட இப்பகுதியில் வசித்து வந்த 15 வயது சிறுமி, கடந்த 05 மாதங்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்தார்.

இது குறித்து அவரது குடும்பத்தினர் உடுதும்பரை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
இதனையடுத்து, உடுதும்பரை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் துசித தொம்பகம்மன தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
விசாரணைகளின் போது, அப்பகுதியிலுள்ள கடை ஒன்றிலிருந்து தினமும் ஒருவருக்குத் தேவையான அளவை விட அதிகளவான அரிசியை வாங்கிச் செல்லும் இளைஞன் ஒருவர் குறித்து பொலிஸாருக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
அவரைத் தொடர்ந்து கண்காணித்த பொலிஸ் அதிகாரிகள், குடியிருப்புப் பகுதிகளிலிருந்து விலகி காட்டுப் பகுதியை நோக்கிச் சென்ற அவரைப் பின்தொடர்ந்து சென்றுள்ளனர்.
அங்கு மெழுகுத் துணியால் மூடப்பட்டிருந்த கல் குகை ஒன்றில், 02 மாதக் குழந்தையுடன் இருந்த இளம் தாயைப் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
அவர் 05 மாதங்களுக்கு முன்னர் காணாமல் போன 15 வயது சிறுமி என்பது விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இளைஞனிடமும் சிறுமியிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், அக்குழந்தை குகைக்குள்ளேயே பிறந்துள்ளமை தெரியவந்துள்ளது.
மேலும், காட்டில் கிடைத்த மூலிகை மருந்துகளைக் கொண்டே தாய்க்கும் குழந்தைக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும், கித்துல் பாணி தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பாத்திரத்தில் குழந்தையைக் குளிப்பாட்டியதாகவும் குறித்த இளைஞன் வாக்குமூலம் அளித்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் பாதுகாப்பில் எடுக்கப்பட்ட சிறுமியும் 02 மாதக் குழந்தையும் சுத்தப்படுத்தப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காகக் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் உடுதும்பரை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!