செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சி காரணமாக உலகம் மிகப்பெரிய பேரழிவு ஒன்றை எதிர்கொள்ளும் அபாயம் இருப்பதாக Open AI, Anthropic போன்ற முன்னணி நிறுவனங்களின் தலைவர்கள் கணித்துள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவின் பிரபல செய்தி நிறுவனமான Axios வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரையில் இத் தகவல்கள் விரிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
மக்களை AI தொழில்நுட்பத்திற்கு முற்றிலும் எதிராகத் திருப்பும் அளவிலான மிகப்பெரிய விபரீதங்கள் நிகழக்கூடும் என்றும், அதை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் AI நிறுவனங்கள் ரகசியமாக ஈடுபட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்படக்கூடிய பேரழிவுகள் மற்றும் சவால்கள்: செயற்கை நுண்ணறிவின் கட்டுப்பாடற்ற செயல்பாடுகளால் பின்வரும் கடுமையான விளைவுகள் ஏற்படக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்:
-நிதிச் சேவைகள் முற்றாகத் துண்டிக்கப்படுதல், இணையப் பயன்பாடு முடங்குதல், குடிநீர் மற்றும் மின்சார விநியோகம் செயலிழத்தல் போன்ற பாரிய அச்சுறுத்தல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
- தென்கொரிய நிதி நிறுவனங்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட சைபர் தாக்குதல்கள் மற்றும் சீனாவைச் சேர்ந்த ஹேக்கர் ஒருவர் DeepSeek மற்றும் Claude போன்ற AI மாடல்களைப் பயன்படுத்தி ஆயிரக்கணக்கான வங்கி வாடிக்கையாளர்களின் தகவல்களைத் திருடிய சம்பவங்கள் AI துஷ்பிரயோகத்தின் கொடூரத்தை வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளன.
-AI சாட்பாட்டுகளைக் கட்டுப்படுத்த முடியாத சூழல் மக்கள் மத்தியில் அச்சத்தையும் எதிர்ப்பையும் கிளப்பியுள்ளது. இதனைத் தடுக்கத் தவறியதாக ஓபன் AI தலைமை செயல் அதிகாரி சாம் அல்ட்மேன் (Sam Altman) மற்றும் ஆந்த்ரோபிக் தலைமை செயல் அதிகாரி டேரியோ அமேடேய் (Dario Amodei) ஆகியோருக்கு எதிராகப் உலகளவில் எதிர்ப்புக் குரல்கள் வலுத்து வருகின்றன.
இது குறித்து ஓபன் AI தரப்பிடம் கேட்கப்பட்டபோது, "எங்கள் கட்டுப்பாட்டை மீறிச் செல்லும் சூழலில் என்ன நடக்கக்கூடும் என்பது பற்றியும், அதை எதிர்கொள்வது குறித்தும் ஆலோசித்தோம். ஆனால் இந்த பேரழிவு தவிர்க்க முடியாதது என எடுத்துக்கொள்ளக் கூடாது.
எந்தவொரு அவசர நிலையையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கவே இந்த நடவடிக்கைகள்" என மழுப்பலான பதிலை அளித்துள்ளனர். அதேவேளை, ஆந்த்ரோபிக் நிறுவனம் இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.
தொழில்நுட்ப வல்லுநர்களின் கணிப்பின்படி, இத்தகைய பாரிய ஏஐ பேரழிவு அடுத்த 6 முதல் 12 மாதங்களுக்குள் நிகழக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகமாக இருப்பதாக அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!