தீவிரமாகும் எரிபொருள் நெருக்கடி
19 Oct, 2026
இப்பொழுது 20ஆவது திருத்தத்தை பொறுத்தவரையிலும் அரசாங்கத்தின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு என்னவெனில் குடியாட்சி வழிமுறைகளுக்கு ஊடாக ஒரு முடியாட்சியை அவர்கள் ஏற்படுத்தப் பார்க்கிறார்கள் என்பதுதான். அதாவது ராஜபக்சக்கள் மன்னர்களாக மாறப் பார்க்கிறார்கள் என்பதுதான். ஆனால் ராஜபக்சக்கள் ஏன் மன்னர்களாக மாறப் பார்க்கிறார்கள் என்ற கேள்விக்கு விடைகள் முக்கியம்.
விடை ஒன்று- அவர்கள் வம்ச ஆட்சியை உருவாக்க விழைகிறார்கள். உலகில் அதிகம் தலைவர்களைக் கொண்ட ஒரு குடும்பங்களில் அதுவும் ஒன்று என்று மு. திருநாவுக்கரசு கூறுவார். தலைமைப் பதவியை தங்களுக்கிடையே ஒற்றுமையாகக் கை மாற்றும் பக்குவமும் முதிர்ச்சியும் அவர்களுக்குண்டு. யுத்த வெற்றியை முதலீடாக வைத்து ராஜபக்ச வம்சம் பல தலைமுறைகளுக்கு நாட்டை ஆளத் திட்டமிடுகிறது. அதற்கு ஒரு மன்னருக்குரிய அதிகாரங்கள் அவர்களுக்குத் தேவை.
விடை இரண்டு- ராஜபக்சக்கள் போர்க் குற்றச்சாட்டுக்களில் இருந்து தங்களையும் படைத் தரப்பையும் பாதுகாத்துக் கொள்வதற்கு அவ்வாறான அதிகாரங்கள் தேவை என்று கருதுகிறார்கள். ஏனெனில் உலகில் யுத்த வெற்றி வாதமும் ஜனநாயகமும் ஒன்றாக இருந்தது கிடையாது.
யுத்த வெற்றி வாதம் ஜனநாயகத்துக்கு இடம் விடாது. அப்படி இடம் விட்டால் யுத்த வெற்றிக்கு எதிராக தோற்கடிக்கப்பட்ட தரப்புக்கள் கிளர்ச்சி செய்வார்கள். யுத்தக் குற்றங்களுக்கு எதிராக நீதி கேட்பார்கள். உலக சமூகம் நிலைமாறுகால நீதி என்று சொல்லிக் கொண்டு நாட்டுக்குள் தலையிடும்.
எனவே போர்க் குற்றச்சாட்டுக்கு இலக்கானவர்களைப் பாதுகாப்பது என்று சொன்னால் அதற்கு ஒரே வழி நிறைவேற்று அதிகாரத்தை ஆகக் கூடிய பட்சம் தங்கள் கைகளுக்குள் குவித்துக் கொள்வது தான். இப்படி பார்த்தால் ராஜபக்ஷக்களுக்கு அதிகரித்த நிறைவேற்று அதிகாரம் தேவை. அதன் மூலம்தான் அவர்கள் தங்களையும் படைத் தரப்பையும் பாதுகாத்துக் கொள்ளலாம்.
மேலும், உலகில் பெரும்பாலான யுத்த வெற்றி வாதங்களுக்கு இல்லாத ஒரு தனித்துவமான அம்சம் இலங்கைத் தீவுக்கு உண்டு. அது என்னவெனில் இங்கே வம்ச ஆட்சியும் யுத்த வெற்றி வாதமும் ஒன்றாக காணப்படுவது. இவ்விரண்டு காரணங்களின் நிமித்தம் ராஜபக்ஷக்களுக்கு ஓர் அரசனுக்குரிய அதிகாரங்கள் தேவை. அதைத்தான் அவர்கள் 20 ஆவது திருத்தத்தின் மூலம் பெற்றுக் கொள்ளப் பார்க்கிறார்கள்.
எனவே இங்கு எதிர்க்கப்பட வேண்டியது 20ஆவது திருத்தம் என்பதற்கும் அப்பால் யுத்த வெற்றி வாதம் தான். யுத்த வெற்றி வாதம் எனப்படுவது யுத்த வெற்றியை முதலீடாக கொண்ட ஓர் அரசாட்சி. அது இலங்கைத் தீவைப் பொறுத்தவரை இனவாதத்தின் 2009 ஆம் ஆண்டுக்குப் பிந்தைய வளர்ச்சி
ஆகும். எனவே ராஜபக்சக்கள் தோற்கடிக்கப்பட்ட தரப்புக்கு வெற்றி என்று கருதத்தக்க ஒரு தீர்வைக் கொடுக்க மாட்டார்கள். அவ்வாறான ஒரு தீர்வை கொடுக்கும் விதத்தில் யாப்பைத் திருத்தவும் மாட்டார்கள்; மாற்றவும் மாட்டார்கள்.யுத்த வெற்றி வாதம் எப்பொழுதும் உட்சுருங்குவது வெளிவிரிவது அல்ல.
எனவே பல்லினத் தன்மை மிக்க பல்சமய தன்மை மிக்க ஒரு யாப்பைக் கட்டியெழுழுப்புவதற்கு யுத்த வெற்றி வாதத்தில் இடமில்லை. மாறாக யுத்த வெற்றி வாதத்தை பலப்படுத்துவதற்கு ஓர் அரசனுக்குரிய அதிகாரத்தைப் பெறும் யாப்புத் திருத்தமே தேவை.
மேலும் ஒரு புதிய யாப்பைக் கொண்டு வருவது என்றால் அதற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை மட்டும் போதாது. அதோடு சர்வஜன வாக்கெடுப்புக்கும் போக வேண்டும். அப்படிப்பட்ட சவால்களை எதிர்கொள்ள ராஜபக்சக்கள் தயாரா?
எனவே 20ஆவது திருத்தத்துக்கு எதிராக சட்டபூர்வமான சவால்களை ஏற்படுத்துவதை விடவும் அதைவிட ஆழமான பொருளில் ஒரு புதிய யாப்புக்கான கோரிக்கையை முன் வைப்பதே தமிழ் முஸ்லிம் மக்களைப் பொறுத்தவரை பொருத்தமானதாக இருக்கும். இலங்கைத் தீவின் யாப்பு ஒரு புனித நூல் அல்ல.
இலங்கைத் தீவின் யாப்புப் பாரம்பரியம் எனப்படுவது யாப்பை மீறும் ஒரு பாரம்பரியத்தையும் தன்னுள் கொண்டிருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக 13 ஆவது திருத்தத்தில் இருக்கும் காணி பொலிஸ் அதிகாரங்களை எந்த ஒரு ஜனாதிபதியும் மாகாண சபைகளுக்கு வழங்கவில்லை.
இது ஒரு அப்பட்டமான யாப்பு மீறல் அதுபோலவே இப்போது நடைமுறையில் உள்ள 19 ஆவது திருத்தத்தின் படி ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சை தனது பொறுப்பில் வைத்திருக்க முடியாது. ஆனால் இப்பொழுது பாதுகாப்பு அமைச்சர் இல்லை. தனக்கு விசுவாசியான ஒர் ஓய்வு பெற்ற படைப் பிரதானியை அந்த அமைச்சின் செயலாளராக நியமித்து விட்டு கோட்டாபய மறைமுகமாக அந்த அமைச்சைக் கட்டுப்படுத்துகிறார். இதுவும் ஒரு யாப்பு மீறலே. தமிழ் சட்டநிபுணர்கள் இந்த யாப்பு மீறல்களுக்கு எதிராக ஏன் வழக்காடவில்லை?
இவ்வாறாக இலங்கைத் தீவின் அரசியல் நாகரீகம் எனப்படுவது யாப்பை மீறும் சீரழிந்த பாரம்பரியத்தைக் கொண்டிருகிறது. இப்படி பார்த்தால் தமிழ் முஸ்லிம் மக்களும் சிங்கள முற்போக்கு சக்திகளும் இதுவிடயத்தில் ஒன்று திரண்டு ஒரு புதிய யாப்பை உருவாக்க கோரி நாட்டுக்கு உள்ளேயும் நாட்டுக்கு வெளியையும் போராடுவதுதான் பொருத்தமாயிருக்கும்.
ஆனால் கோவிட்-19 இரண்டாவது தொற்று அலையைக் காரணங் காட்டி அரசாங்கம் பொது மக்கள் ஒன்று கூடுவதை வரும் முப்பத்தி ஓராம் திகதி வரை தடுத்திருகிறது. அதாவது எதிர்கட்சிகள் இருபதாவது திருத்தத்துக்கு எதிராக வெகுசனப் போராட்டங்களை ஒழுங்குபடுத்த முடியாது.
இந்நிலையில், ராஜபக்ச என்ற இரும்பு மனிதருக்கு தனிச் சிங்கள வாக்குகளால் வெற்றிகளைக் கொடுத்தோம் ஆனால் 20 ஆவது திருத்தத்தை கொண்டு வருவதற்காக அல்ல என்று கூறும் அகமுரண்பாடு சிங்கள அரசியலில் எப்பொழுதும் உண்டு. யுத்த வெற்றி வாதத்துக்கு வாக்களித்து விட்டு ஜனநாயகம் வேண்டும் என்று கேட்பது ஒருவர் தான் நஞ்சை குடித்துவிட்டு மற்றவர்களைச் சாகுமாறு கேட்பதற்குபதற்கு ஒப்பானது.16:05 10.10.2020
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!