பிரித்தானிய வரலாற்றிலேயே முதல்முறையாக, தன் வரி விவரங்களைப் பகிரங்கமாக மன்னர் சார்ள்ஸ் வெளியிட்டுள்ளார். மன்னர் சார்ள்ஸ் 2024-2025 ஆம் நிதியாண்டிற்காக மொத்தம் 12.9 மில்லியன் யூரோ வரி செலுத்தியுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்த வரித் தொகையின் மூலம், பிரித்தானியாவில் அதிக வரி செலுத்தும் முதல் 100 நபர்களின் பட்டியலில் மன்னர் சார்ள்ஸ் இடம்பிடித்துள்ளார்.
அரச குடும்பத்தின் வருடாந்திர கணக்கு அறிக்கையின்படி, வேல்ஸ் இளவரசரான வில்லியம் இதே காலகட்டத்தில் 7.76 மில்லியன் யூரோ வரியாகச் செலுத்தியுள்ளார். மன்னர் சார்ள்ஸ் 2022-ல் அரியணை ஏறியது முதல், அவரும் அவரது மகன் இளவரசர் வில்லியமும் இணைந்து பிரிட்டன் அரசுக்குச் செலுத்தியுள்ள மொத்த வரித் தொகை 50 மில்லியன் யூரோவைக் கடந்துள்ளது.
இந்த வரி விவரங்களை வெளியிடுவது தங்களின் தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் எடுக்கப்பட்ட தீர்மானம் என மன்னர் சார்ள்ஸ் குறிப்பிட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.
இது குறித்து அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரச குடும்பத்தின் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை மக்கள் மத்தியில் விரிவாகக் கொண்டு சேர்ப்பதே இதனுடைய நோக்கம்" என குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இந்த வரித் தொகைகள் எவ்வாறு கணக்கிடப்பட்டன என்பதன் விரிவான விவரங்கள் வெளியிடப்படவில்லை.
மன்னர் சார்ள்ஸின் உத்தியோகபூர்வ மற்றும் தனிப்பட்ட செலவுகளுக்காக 'டச்சி ஆஃப் லான்காஸ்டர்' என்ற எஸ்டேட் உள்ளது. இதன் மூலம் 2025-26 இல் அவருக்குக் கிடைத்த வருமானம் 25.2 மில்லியன் யூரோ ஆகும். இது தவிர அவரது தனிப்பட்ட சேமிப்புகள், பால்மோரல் மற்றும் சாண்ட்ரிங்ஹாம் ஆகிய தனியார் எஸ்டேட்கள் மூலமும் அவருக்கு வருமானம் கிடைக்கிறது.
மறுபுறம், இளவரசர் வில்லியமிற்கு லண்டனின் புகழ்பெற்ற ஓவல் கிரிக்கெட் மைதானம் உள்ளிட்ட 130,000 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட 'டச்சி ஆஃப் கார்ன்வால்' எஸ்டேட் மூலம் வருமானம் கிடைக்கிறது. இதிலிருந்து கிடைக்கும் வருமானத்தில், உத்தியோகபூர்வ செலவுகள் போக மீதமுள்ள தொகைக்கு இளவரசர் வில்லியம் உச்சகட்ட வரி விகிதத்தில் வருமான வரி மற்றும் மூலதன ஆதாய வரி செலுத்துகிறார்.
மன்னர் சார்ள்ஸும், ராணி கமிலாவும் தங்களின் தற்போதைய இல்லமான 'கிளாரன்ஸ் ஹவுஸிலேயே' தொடர்ந்து வசிப்பார்கள் என்றும், பக்கிங்ஹாம் அரண்மனைக்குக் குடியேறப் போவதில்லை என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
அரச குடும்பத்தின் பராமரிப்பு மற்றும் உத்தியோகபூர்வ பணிகளுக்காக பிரித்தானிய அரசாங்கம் வழங்கும் பொது நிதியான 'சவரின் கிராண்ட்' , 2027-28 ஆம் ஆண்டிற்காக 100 மில்லியன் யூரோவுக்கு நெருக்கமாக அதிகரிக்கப்படவுள்ளது.
தற்போது 2025-2026 ஆம் ஆண்டிற்கான வரி விவரங்கள் தணிக்கை செய்யப்பட்டு வருவதால், அவை அடுத்த ஆண்டு பொதுமக்களுக்கு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!