உதயநிதி முதல் அன்பில் மகேஷ் வரை.. திமுக மீது மட்டுமே குறி? அந்த 3 ஃபைல்களை திறந்தாரா CM விஜய்?
28 Oct, 2026
ஆண் வேடத்தில் செல்லும் பெண் - சிசிடிவி காட்சி
அருகருகே மாமியார்-மருமகள் வசித்ததால் இருவருக்குமிடையே அவ்வப்போது கருத்து வேறுபாடு இருந்துவந்திருக்கிறது.
அதனால் ஆத்திரத்திலிருந்த மகாலட்சுமி, ஒருகட்டத்தில் தன்னுடைய மாமியாரைத் தீர்த்துக் கட்டினால் மட்டுமே நிம்மதியாக வாழ முடியும் என நினைத்திருக்கிறார். அதற்கான சரியான சந்தர்ப்பத்துக்காக அவர் காத்துக்கொண்டிருந்திருக்கிறார்.
அண்மையில் வீட்டிலுள்ளவர்கள் அனைவரும் வெளியே சென்றுவிட்ட நிலையில், மாமியார் சீதாராமலெட்சுமி மட்டும் வீட்டில் படுத்திருப்பதைப் பார்த்த மருமகள் மகாலட்சுமி, தனக்கான சந்தர்ப்பம் கிடைத்ததாக நினைத்திருக்கிறார். அதனால் அந்தச் சமயத்தைப் பயன்படுத்தி மாமியாரை தீர்த்துக்கட்ட முடிவெடுத்திருக்கிறார்.
ஆனால், தான் கொலைசெய்தது தெரிந்துவிடக் கூடாது என நினைத்த அவர், கணவனின் பேன்ட் சட்டையை அணிந்திருக்கிறார்.
அத்துடன், இரு சக்கர வாகனத்தின் ஹெல்மெட்டை எடுத்து தலையில் அணிந்துகொண்டதுடன், கையில் இரும்புக்கம்பியுடன் மாமியார் படுத்திருந்த அறைக்குள் நுழைந்திருக்கிறார். ஆண் உடையுடன் நுழைந்த அவர், தூங்கிக்கொண்டிருந்த சீதாராமலெட்சுமியை சரமாரியாகத் தாக்கியிருக்கிறார்.
இரும்புக்கம்பியால் விழுந்த அடிகளைத் தாங்க முடியாமல் மாமியார் கதறியதையும் பொருட்படுத்தாமல் கல்மனதுடன், தொடர்ந்து அடித்திருக்கிறார்.
அதில் மயங்கிய மாமியார் இறந்துவிட்டதாக மகாலட்சுமி நினைத்து, அங்கிருந்து சென்றிருக்கிறார். அந்தக் கொலையை மர்மநபர்கள் செய்ததுபோல ஜோடிக்க வேண்டும் என்பதற்காக, மாமியாரின் கழுத்தில் கிடந்த ஐந்தரை சவரன் நகையை அறுத்து எடுத்துச் சென்றிருக்கிறார்.
அதனால் நகைக்காக யாரோ மர்மநபர் கொலை செய்துவிட்டார் எனக் கூறினால், குடும்பத்தினர் நம்பிவிடுவார்கள் என அவர் எதிர்பார்த்திருக்கிறார்.
ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்த சீதாராமலட்சுமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டார்.
நகைக்காக இந்தக் கொலை நடந்திருக்கக் கூடும் என்கிற சந்தேகத்துடன் போலீஸார் விசாரணையைத் தொடங்கினார்கள். அப்போது வீட்டின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது பேன்ட், சட்டை, ஹெல்மெட் அணிந்த நபர், கையில் இரும்புக்கம்பியுடன் வீட்டுக்குள் நுழையும் காட்சி பதிவாகியிருந்தது.
அறைக்குள் கம்பியால் சரமாரியாகத் தாக்கும் சத்தமும் சீதாராமலட்சுமியின் மரண அலறல் சத்தமும் அதில் கேட்டதால் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.
அந்தக் கிராமத்தில் இருந்த மேலும் பல சிசிடிவி பதிவுகளையும் ஆய்வுசெய்தனர். அப்போது, வெளியிலிருந்து பைக்கிலோ, நடந்தோ புதிய ஆட்கள் யாரும் ஊருக்குள் வரவில்லை என்பது தெரியவந்தது.
அதனால் சீதாராமலட்சுமி வீட்டிலிருந்த வீடியோவை நன்றாக ஆய்வு செய்தபோது அதில் இருந்த உருவம், மகாலட்சுமியைப்போல இருந்தது. அதனால் அவரிடம் தீவிர விசாரணை செய்தபோது, மாமியாரை அடித்துக் கொலைசெய்ததை ஒப்புக்கொண்டார்.
இது தொடர்பாக சீதபற்பநல்லூர் போலீஸ் ஆய்வாளர் ராதா வழக்கு பதிவுசெய்து, மகாலட்சுமியைக் கைதுசெய்து சிறையில் அடைத்தார்.
மகாலட்சுமி சிறையில் அடைக்கப்பட்டதால் அவரின் பாதுகாப்பிலிருந்த பத்து மாத கைக்குழந்தை அவருடைய தாயாரின் பராமரிப்பில் ஒப்படைக்கப்பட்டது.
மூத்த மகனை ராமசாமி தனது பாதுகாப்பில் வைத்திருக்கிறார். பெண்ணின் தவறான முடிவால் நடந்த கொலைச் சம்பவத்தால், அந்தக் குடும்பமே சிதைந்து போனதை நினைத்து வடுகன்பட்டி கிராம மக்கள் சோகமடைந்திருக்கின்றனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!