என்ன அழகான திட்டம்! இஸ்ரேல் ராணுவம், வர்த்தகம், பொருளாதாரம் ஆகிய அம்சங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கும் ஒரு நிழல் சக்தியாக அமெரிக்கா ஆகிப்போனது.(நிலமெல்லாம் ரத்தம் - 68)
20 Nov, 2026
கஜினிப் பகுதி தொடங்கி சட்காவ் வரையிலும், காஷ்மீர் தொடங்கி கர்நாடகம் வரையிலும் இந்தியத் துணைக்கண்டம் அவருடைய உத்தரவுகளுக்குக் கட்டுப்பட்டு நடந்தது.
ஔரங்கசீபின் காலகட்டத்தில்தான் இஸ்லாம் இந்தியாவில் வேகமாகப் பரவியது. முன் எப்போதும் இருந்திராத அளவுக்கு மிகப் பிரமாண்டமாக இருந்த இந்தச் சாம்ராஜ்ஜியம் ஒற்றை அரசியல் தலைமை கொண்டதாக இருந்தது.
குறு நில மன்னர்கள் மூலமாக ஆளப்படாமல் சுல்தானால்,நேரடியாக நியமிக்கப்பட்டவர்களால் ஆளப்பட்டது. அசோகர், சமுத்திர குப்தர், ஹர்ஷ வர்தனர் என அனைவருடைய சாம்ராஜ்யங்களை விடவும் ஔரங்கசீபின் சம்ராஜ்ஜியம் மிகவும் பரந்து விரிந்ததாக இருந்தது.
பிரிட்டிஷார் வருவதற்கு முன்பு மிகப் பெரிய இந்திய சாம்ராஜ்ஜியமாக உச்சத்தில் இருந்த இந்த மொகலாய சாம்ராஜ்ஜியத்தின் வீழ்ச்சியும், அவற்றின் குழப்பங்களின் தடயங்களும் ஔரங்கசீபின் காலத்திலேயே தெளிவாகத் தெரிய ஆரம்பித்திருந்தன.
ராஜ பரம்பரையின் செல்வாக்கு இழந்த நிழலாகப் பாரசீக நாதிர்ஷா, ஆஃப்கானிஸ்தானின் அஹ்மது ஷா போன்றோர் மொகலாய அரசர்களை வீழ்த்துவதற்கு முன்பே, டெல்லியின் மாபெரும் ஆதிக்கம் வெறும் கடந்த கால நினைவாக மாறுவதற்கு முன்பே, மராட்டியப் படைகள் தேசத்தில் செல்வாக்கை நிலை நிறுத்தும் முன்பே, ஔரங்கசீப் கண்ணை மூடுவதற்கு முன்பே மொகலாயச் சாம்ராஜ்ஜியம் நிதியிலும் செல்வாக்கிலும் வீழ்ச்சி அடைந்திருந்தது. அதன் நிர்வாகம் சிதைந்துவிட்டிருந்தது. மாபெரும் சாம்ராஜ்ஜியத்தின் ஒழுங்கை நிலைநிறுத்தும் வலிமையை இழந்துவிட்டிருந்தது.
ஔரங்கசீபின் ஆட்சியின்போதுதான், வீழ்ச்சியுற்றிருந்த மராட்டியத் தேசிய உணர்வு வீறுகொண்டு எழுந்தது.
மொகலாய ஆட்சிக்கு எதிராக சீக்கியப் பிரிவில் ஆயுதம் தாங்கியப் போர் வீரர்கள் முளைத்து வந்தனர். இப்படியாக, 18, 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பக் காலகட்டத்தில் இந்திய வரலாற்றில் நடந்த விஷயங்களுக்கு ஔரங்கசீபின் ஆட்சியும் கொள்கைகளும் மிக முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றன.
மொகலாயப் பிறை நிலா முழுவடிவை அடைந்த அதே ஆட்சியில்தான் அது விரைவாகத் தேயவும் ஆரம்பித்தது.
நமது அரசியல் வானில் புதிய அரசியல் சக்திகளின் விடிவெள்ளி முளைக்க ஆரம்பித்ததை நன்கு பார்க்கவும் முடிந்தது. நமது தேசத்தின் தலையெழுத்தைத் தீர்மானிக்கவிருந்த வருங்கால ஆதிக்கச் சக்திகள் (பிரிட்டிஷ் சக்திகள்) நம் மண்ணில் அழுத்தமாக, ஆழமாக கால் ஊன்றின.
மதராஸ் 1653லும், பம்பாய் 1687லும் கிழக்கிந்தியக் கம்பெனியின் மாகாணங்களாக ஆகின. 1690இல் கல்கத்தா மாகாணம் நிறுவப்பட்டது. பிரிட்டிஷாரால் கைப்பற்றப்பட்ட பகுதிகள் இப்படியாக ராஜ்ஜியத்துக்குள் ராஜ்ஜியமாக மாறின.
பதினேழாம் நூற்றாண்டின் இறுதிவாக்கில், மொகலாயப் பேரரசு மையத்தில் வலு இழந்ததாக ஆகிவிட்டிருந்தது. கஜானா காலியாகியிருந்தது. மொகலாயப் படைகள் தோற்கடிக்கப்பட்டிருந்தன. எதிரிகளின் பகுதிகளில் இருந்து பின் வாங்கி இருந்தன. பிராந்திய அரசுகள் எல்லாம் வெற்றிகரமாகத் தமது ஆதிக்கத்தை மீட்டெடுத்திருந்தன. சாம்ராஜ்ஜியம் சிதைந்துபோகக் காத்திருந்தது.
பொருளாதார, நிர்வாகப் பலவீனங்களுக்கு எல்லாம் மேலாக மொகலாய சாம்ராஜ்ஜியமானது தார்மிகப் பலத்தை இழந்துவிட்டிருந்தது.
மக்களிடையே அந்த அரசுக்கு எந்தவொரு மதிப்பும் மரியாதையும் இருந்திருக்கவில்லை. அரசின் பணியாளர்கள் நேர்மையற்றும் திறனற்றும் போயிருந்தனர். அமைச்சர்கள், இளவரசர்கள் எல்லாம் ராஜாங்க நுணுக்கமும் திறமையும் அற்றுப் போயிருந்தனர். ஆதிக்கத்தை நிலைநாட்டும் வலிமையை ராணுவம் இழந்துவிட்டது.
ஏன் இப்படி ஆனது?
மன்னரிடம் சோம்பல், மூடத்தனம், தீய ஒழுக்கம் இவற்றில் எதுவும் இருக்கவில்லை. அவர் அபாரமான அறிவுக் கூர்மை மிகுந்தவராக இருந்தார்.
ஆதிக்கத்தைத் துய்க்கும் பெரு விருப்பம் கொண்ட ஆண்களைப் போலவே ஆட்சி நிர்வாகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார்.
பொது மக்களின் நலன் சார்ந்த விஷயங்களில் அவர் அளவுக்கு அக்கறை கொண்ட பணியாளர் யாரும் இருக்கமுடியாது. ஒழுக்கம், ஒழுங்கு ஆகியவற்றில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர். அதுபோலவே பொறுமைசாலி. விடாமுயற்சி கொண்டவர். அவருடைய சொந்த வாழ்க்கையை எடுத்துக்கொண்டால் போகங்களை மிதமாகத் துய்த்தார். ஒரு துறவியைப் போன்ற வாழ்க்கை வாழ்ந்தார்.
படையெடுப்புக் கால நெருக்கடிகள், பின்வாங்குதல் போன்றவற்றையெல்லாம் எந்தவொரு புகாரும் இன்றி, தேர்ந்த படைத் தலைவரைப்போல் ஏற்றுக்கொண்டார்.
எந்தவொரு பயங்கரவாதச் செயலும் அவருடைய மனதை மாற்றமுடியாது. எந்தவொரு கருணை எண்ணமோ, பரிவோ அவரைப் பாதித்ததில்லை. அவருடைய மதம் சார்ந்த பழங்கால மரபான ஞானங்கள், புனித நூலில் இடம்பெற்றவை ஆகியவற்றில் தேர்ந்த நிபுணராக இருந்தார். தனது தந்தையின் ஆட்சிக் காலத்தில் நீண்ட காலப் போர் பயிற்சியும், ராஜ தந்திர பாடங்களும் பெற்றிருந்தார்.
இருந்தும் ஔரங்கசீபின் ஐம்பது ஆண்டுக் கால ஆட்சியின் விளைவாகத் தோல்வியும் குழப்பமே மிஞ்சியது. இந்த அரசியல் புதிரானது இந்திய வரலாற்றை ஆராய்பவருக்கு மட்டுமல்ல, பொதுவான அரசியல் வரலாறு பற்றி ஆய்வு செய்பவர்களுக்குமே அவருடைய ஆட்சி காலத்தை மிகவும் ஆர்வத்துக்கு உரியதாக ஆக்கியிருக்கிறது.
2. ஔரங்கசீப் வாழ்க்கையின் துயர நாடகம் அரங்கேறிய விதம்
ஔரங்கசீபின் வாழ்க்கை நீண்ட நெடியத் துயரக் கதை. கண்ணுக்குத் தெரியாத, அதே நேரம் தவிர்க்க முடியாத விதியை எதிர்த்துப் போராடித் தோற்றவரின் கதை;
மிகவும் வலிமையான மனித முயற்சிகள் எல்லாம் காலத்தின் போக்கில் எப்படியெல்லாம் குழம்பிப்போயின என்பதன் எடுத்துக்காட்டாக அந்த வாழ்க்கை அமைந்தது.
மிகுந்த ஆற்றலுடன் வெளிப்பட்ட ஐம்பது ஆண்டுக் கால ஆட்சியானது மிக மிக மோசமான தோல்வியில் சென்று முடிந்தது.
இருந்தும் அறிவுக்கூர்மை, ஒழுக்கம், செயல் ஊக்கம் ஆகியவற்றில் அவர் ஆசியாவின் பேரரசர்களில் ஒருவர். வரலாற்றின் இந்தத் துயர நாடகம் உரிய வரிசைக்கிரமமான காட்சிகளுடன் மெள்ள மெள்ள உச்சத்தை எட்டியது.
ஔரங்கசீபின் முதல் நாற்பது ஆண்டுகள், மாபெரும் சாம்ராஜ்ஜியத்தின் அதி உயர் பதவிக்கான நிதானமான, கடினமான சுயப் பயிற்சியால் நிரம்பியதாக இருந்தது. இது முதல் காலகட்டம்.
இந்த விதைநிலைப் பருவத்துக்குப் பின்னர் அரியணை ஏறுவது தொடர்பாக நடந்த ஒரு வருடக் கால மோதல் வந்தது. அது அவருடைய வலிமை முழுவதையும் தீவிரப் பரிசோதனைக்கு உட்படுத்தியது. அவருடைய வலிமைக்குப் பரிசு கிடைத்தது. டெல்லியின் அரியணை அவருக்குக் கிடைத்தது. இது இரண்டாம் காலகட்டம்.
வட இந்தியாவின் மாபெரும் நகரங்களில் அமைதியும் வெற்றியும் நிறைந்த ஔரங்கசீபின் 23 ஆண்டுக்கால ஆட்சி அதன் பின் நடந்தது. அவருடைய வழியில் குறுக்கிட்ட எதிரிகள் அனைவரும் அப்புறப்படுத்தப்பட்டனர்.
ஒட்டு மொத்த இந்தியாவும் அவருடைய ஆணைக்குக் கீழ்ப்படிந்தது. அவருடைய கண்டிப்பும் கண்காணிப்பும் மிகுந்த ஆட்சியினால் அமைதியும், அதனால் நாட்டில் செல்வமும் கலாசாரமும் செழித்தன. மனித முயற்சிகளின் பெரு மகிழ்ச்சியையும் பெருமிதங்களையும் ஔரங்கசீப் எட்டியதுபோன்ற தோற்றம் உருவானது. இது அவருடைய வாழ்வின் மூன்றாம் காலகட்டம்.
அதன் பின்னர் வீழ்ச்சி ஆரம்பித்தது. கிரேக்கக் காவியங்களைப் போன்ற இரக்கமற்ற செயல்களின் பின் விளைவுகள் அவரைச் சூழ்ந்தன.
குடும்பத்துக்குள்ளிருந்தே அவருடைய எதிரிகள் முளைத்திருந்தார். ஷாஜஹானின் கலக மைந்தரான ஔரங்கசீபினால், தான் பெற்ற வெற்றியை நீண்ட காலம் அனுபவிக்க முடிந்திருக்கவில்லை. ஏனென்றால் அவருடைய மகன் முஹம்மது அக்பர் (1681) தந்தைக்கு எதிராகக் கலகம் செய்தார்.
விரட்டியடிக்கப்பட்ட மகன், மராட்டிய மன்னருடைய நட்பில் தென்னிந்தியாவில் அடைக்கலம் புகுந்ததால் ஔரங்கசீப் படையுடன் தென்னிந்தியாவுக்கு வர நேர்ந்தது.
தன் வாழ்நாளின் கடைசி 26 வருடங்களைப் போர் முகாம்களில் கழிக்க நேர்ந்தது. முடிவற்ற, வெற்றி கிடைக்காத போரில் ஈடுபட்டு சாம்ராஜ்ஜியத்தின் படை, செல்வம், நிர்வாகம் அனைத்தையும் நலிவடையவிட்டார்.
அவருடைய உடல் நிலையும் மிகவும் மோசமானது. விதியானது இந்த வீழ்ச்சியை அவரால் புரிந்துகொள்ளமுடியாதபடி அவருடைய கண்களை மறைத்தது. அவருடைய சம காலத்தவரின் கண்களையும் மறைத்துவிட்டது.
அவருடைய வாழ்வின் இந்த நான்காம் பகுதியில், அவர் விரும்பியதுபோல் எல்லாம் நடந்தாகத் தோற்றமளிக்கின்றன.
பீஜப்பூரும் கோல்கொண்டாவும் ஔரங்கசீபின் சாம்ராஜ்ஜியத்துடன் இணைக்கப்பட்டன. பேரார் சாகர் பகுதியின் தலைவரும் தோற்கடிக்கப்பட்டார்.
பிரச்னைக்குரிய மராட்டிய மன்னர் சிறைப்பிடிக்கப்பட்டார். அவருடைய தலைநகரும் குடும்பத்தினரும் கைப்பற்றப்பட்டனர் (1689). ஔரங்கசீபின் வெற்றி இப்படியாக முழுமை பெற்றதுபோலவே தோன்றுகிறது.
எனினும் இங்கும் அங்குமாக வீழ்ச்சியின் சிற்சில தடயங்கள் எழ ஆரம்பித்திருந்தன. கூர்ந்து கவனிக்கும் திறன் கொண்டவர்களுக்கு மட்டும் அது தெரியும்படியாக இருந்தது. எனினும், பிறர் சாம்ராஜ்ஜியத்தின் மாபெரும் வெற்றிகளின் மிதப்பில் எதிர்காலத்தில் வரவிருந்த அழிவைக் காணமுடியாதவர்களாகவே இருந்தனர்.
ஔரங்கசீபின் வாழ்க்கையின் மூன்றாம் காலகட்டத்தில் விதைக்கப்பட்ட அதிருப்தியின் விதைகள் யாருக்கும் தெரியாமல் மெல்ல முளைவிட்டு நான்காம் காலகட்டத்துக்குள் கிளை விரிக்க ஆரம்பித்தன. அவருடைய வாழ்வின் ஐந்தாம் கட்டத்திலும் இறுதிக் கட்டத்திலும் அந்த மரங்களின் துயரம் நிறைந்த கனிகளை அவர் சுவைத்தாக வேண்டியிருந்தது.
அப்படியாக ஔரங்கசீபுடைய வாழ்வின் துயரம் என்பது கடைசி 18 வருடங்களில் (1689-1707) மிகுதியாக வெளிப்பட்டன.
இந்தக் காலகட்டத்தில் வீழ்ச்சி மிகவும் தெளிவாகப் புலனாக ஆரம்பித்தது. படைகள் எல்லாம் அவருக்கு எதிராகத் திரும்பியிருந்ததென்பது அவருக்குப் புரியவந்தது.
யதர்த்த உண்மை என்ன என்பது தெரியவந்தது. எனினும் அவர் தன் போராட்டத்தைக் கைவிடவில்லை. நிராதரவான நிலையில் இருந்த பின்னரும், விடா முயற்சியைக் கைவிடவில்லை.
புதிய தீர்வுகளை முயன்று பார்த்தார். அரசியல் சூழ்நிலைகளில் ஏற்பட்ட மாற்றங்கள், எதிரிகளின் பரவல் ஆகியவற்றுக்கு ஏற்ப தனது வியூகங்களை மாற்றிப் பார்த்தார். முதலில் முழு பொறுப்பையும் வழிகாட்டுதலையும் தன் வசம் வைத்துக்கொண்டு தன் படைத்தளபதிகளைப் போருக்கு அனுப்பினார். தளபதிகளால் வெற்றி பெற முடியாமல் போனதும் 82 வயதான ஔரங்கசீபே கடைசி ஆறு ஆண்டுக்காலப் போரைப் (1669-1705) போர்க்களத்துக்குச் சென்று தலைமை தாங்கி நடத்த வேண்டியிருந்தது.
முதல் மரண அழைப்பு வந்த பின்னரே அஹமது நகருக்குத் திரும்பினார். அப்போதுதான், அந்த அந்திமத் தருணத்தில்தான், அஹமது நகரில்தான் அவருடைய பயணம் முடிவுக்கு வரப்போகிறது (கதம்-உஸ்-சஃபர்) என்பதை மிகுந்த வேதனையுடன் புரிந்துகொண்டார்.
3. ஒளரங்கசீபின் வாழ்க்கை வரலாறுக்கான ஆதாரங்கள்
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!