ஜப்பானின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஹிரோசாகி கோட்டையை, சுமர் 1,800 தன்னார்வலர்கள் கயிறுகளால் பிடித்து இழுத்து 2.22 மீட்டர் தூரம் நகர்த்தி உலக மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளனர்.
360 தொன் எடை கொண்ட இந்த ஹிரோசாகி கோட்டையை கயிறு கட்டி ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்துக்கு நகர்த்தும் செயலானது தற்போது சமூக ஊடகங்களிலும் பேசுபொருளாகியிருக்கிறது.
2011இல் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கோட்டையின் அடிப்பகுதியில் இருந்த பிரம்மாண்ட கல் சுவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
2015இல் இந்த கோட்டையை இடிக்காமல், சுவர்களைப் பலப்படுத்துவதற்காக 'ஹிக்கியா' முறையில் 78 மீட்டர் தூரத்திற்கு அப்படியே நகர்த்தி வைக்கப்பட்டிருந்தது.
தற்போது கல் சுவர்கள் சீரமைக்கப்பட்டுள்ளதால், கோட்டையை மீண்டும் அதன் பழைய அமைப்பிற்கு கொண்டுசெல்லும் பணிகள் தொடங்கியுள்ளன.

கட்டடங்களை உடைக்காமல் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்ற ஜப்பான் பயன்படுத்தும் தொன்மையான முறை 'ஹிக்கியா' ஆகும். இதற்காகக் கோட்டையின் அடிப்பகுதியில் நவீன தண்டவாளங்கள் மற்றும் உருளைகள் பொருத்தப்பட்டு, மனித சக்தியும் இயந்திரங்களும் இணைந்து கட்டடத்தை நகர்த்தும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
வார இறுதியில் நடைபெற்ற இந்த முயற்சியில் உள்ளூர் மக்களும் சுற்றுலாப் பயணிகளும் பெருமளவில் கலந்துகொண்டனர். 1,800 தன்னார்வலர்கள் 80 பேர் கொண்ட குழுக்களாக பிரிந்து கோட்டையை நகர்த்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
30 மீட்டர் நீளமுள்ள கயிறுகளைப் பிடித்து, "சோ-ரே, சோ-ரே" என்ற உத்வேகக் குரல்களுடன் அவர்கள் கயிற்றை இழுக்கும் காட்சிகள் வீடியோவாக பதிவாகியிருக்கின்றன.
முதல் நாளில் 1.13 மீட்டரும், இரண்டாம் நாளில் 1.09 மீட்டரும் என மொத்தம் 2.22 மீட்டர் நகர்த்தப்பட்டது.
ஆகஸ்ட் மாத இறுதிக்குள் 4,100 மக்களின் உதவியோடு மேலும் 5 மீட்டர் தூரத்துக்கு கோட்டையை நகர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
மீதமுள்ள 73 மீட்டர் தொலைவை நவீன இயந்திரங்களின் மூலம் நகர்த்தி, இந்த ஆண்டின் இறுதிக்குள் கோட்டையை அதன் பழமையான அசல் இடத்தில் முழுமையாக நிறுத்துவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!