காசாவில் 5 வயது சிறுமி ஹிந்த் ரஜப் மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, இஸ்ரேலிய இராணுவம் முதன்முறையாக பொறுப்பை ஏற்றுக்கொண்டு குற்றவியல் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
காசாவில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களில் இருந்து தப்பிச் செல்லும் போது, 2024 ஜனவரி 29ஆம் திகதி ஹிந்த் ரஜப் மற்றும் அவரது குடும்பத்தினர் பயணித்த கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
துப்பாக்கிச் சூட்டில் காரில் பயணித்த குடும்ப உறுப்பினர்கள் கொல்லப்பட்ட நிலையில், ஐந்து வயதான ஹிந்த் ரஜப் காயங்களுடன் காருக்குள் சிக்கியிருந்தார். பின்னர் அவர் பாலஸ்தீன செம்பிறைச் சங்கத்தை தொலைபேசியில் தொடர்புகொண்டு உதவி கோரினார்.
ஹிந்த் ரஜப் மீட்புப் பணியாளர்களுடன் தொலைபேசியில் பேசிய உரையாடல் பதிவு பின்னர் வெளியாகி சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஹிந்த் ரஜப் உள்ளிட்ட அவரை மீட்கச் சென்ற இரண்டு அவசர மருத்துவப் பணியாளர்களும் பின்னர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், அந்த வாகனம் மீது நூற்றுக்கணக்கான தோட்டாக்கள் செலுத்தப்பட்டதாகவும், வாகனத்துக்குள் குழந்தைகள் உட்பட பொதுமக்கள் இருந்தமை தொடர்பில் கேள்விகள் எழுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பாக இஸ்ரேலிய இராணுவம் தற்போது முதன்முறையாக வெளிப்படையாக கருத்து வெளியிட்டுள்ளது. இராணுவத்தின் புதிய அறிக்கையில், இராணுவ எச்சரிக்கைகளை மீறி குறித்த வாகனம் பயணித்ததாகவும், அதனடிப்படையில் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, சம்பவம் தொடர்பாக இராணுவ காவல் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணையை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹிந்த் ரஜப் கொல்லப்பட்ட சம்பவம் மட்டுமன்றி, காசாவில் பாலஸ்தீனியர்கள் உயிரிழந்த மேலும் சில சம்பவங்களும் இந்த விசாரணையின் கீழ் கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், 2025 மார்ச் மாதம் தெற்கு காசாவின் ரஃபா பகுதியில் ஆம்புலன்ஸ்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதலும் உள்ளடங்குகிறது. அந்தச் சம்பவத்தில் மருத்துவப் பணியாளர்கள் மற்றும் ஐ.நா. பணியாளர் உள்ளிட்ட 15 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய மனித உரிமை அமைப்பான யெஷ் தின் நிர்வாக பணிப்பாளர் ஜிவ் ஸ்டால், இராணுவத்தினருக்கு எதிரான முறைப்பாடுகளில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான சம்பவங்களிலேயே விசாரணைகள் நடத்தப்படுவதாகவும், குற்றம் நிரூபிக்கப்பட்டாலும் வழங்கப்படும் தண்டனைகள் குறைவாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஹிந்த் ரஜப்பின் இறுதி நேர தொலைபேசி உரையாடல் பின்னர் சர்வதேச கவனத்தை ஈர்த்ததுடன், அவரது கதையை அடிப்படையாகக் கொண்ட ‘The Voice of Hind Rajab’ திரைப்படமும் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
இந்த நிலையில், நீண்டகாலமாக சர்வதேச விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்த இந்த சம்பவம் தொடர்பில் இஸ்ரேல் இராணுவம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளமை முக்கியமான முன்னேற்றமாக கருதப்படுகிறது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!