15 வயதுடைய சிறுமியொருவர், தனது பத்தாவது வயது முதல் பல சந்தர்ப்பங்களில் மூன்று நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக, 17ஆம் திகதி பொலிஸில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
கொவிந்துபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பகஹபிட்டிய பிரதேசத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சிறுமியின் தாயார், வேறொரு நபருடன் தனியாக வசித்து வரும் நிலையில், சிறுமியின் 5 மற்றும் 11 வயதுடைய இரண்டு சகோதரர்களும் துறவறம் பூண்டுள்ளனர். சிறுமியின் தந்தை கூலித் தொழில் செய்து வாழ்க்கை நடத்தி வருவதுடன், வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே வீட்டிற்கு வருவது வழக்கம்.
இதன் காரணமாக, இச்சிறுமி தனது பாட்டியின் பராமரிப்பில் அவர்களது வீட்டில் வசித்து வந்துள்ளார். இவ்வாறு வசித்து வந்த காலப்பகுதியில், சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்னர் சிறுமியின் தாய்மாமன் ஒருவர் அவரைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.
அதே காலகட்டத்தில், தாயாரின் கள்ளக்காதலனும் சிறுமியைத் துஷ்பிரயோகம் செய்துள்ளதுடன், பின்னர் தனது சகோதரர்கள் துறவறம் பூண்டுள்ள விகாரைக்குச் சென்றிருந்த சந்தர்ப்பத்தில், அங்கு அறிமுகமான இளைஞன் ஒருவனாலும் சிறுமி பாரதூரமான பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
கிராமத்தில் பாதுகாப்பற்ற நிலையில் வசித்து வந்த இச்சிறுமி குறித்து, கிராமிய சிறுவர் குழுவினர் கண்டறிந்து கொவிந்துபுர பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர். இதனையடுத்து, பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் போதே, சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டமை அம்பலமாகியுள்ளது.
தனது மகளுக்கு உரிய பாதுகாப்பை வழங்காது அவரைக் கொடுமைப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ், சிறுமியின் தாயார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது மருத்துவப் பரிசோதனைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகளைப் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். கொவிந்துபுர பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எம்.கே. அலஹகோன் தலைமையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!