அமெரிக்கா முழுவதையும் மட்டுமன்றி, உலகையே கதிகலங்கச் செய்த ஒரு மாபெரும் தாக்குதல் நியூயோர்க் நகரில் நடத்தப்பட்டு, இன்றுடன் (செப். 11) 25 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கின்றன. 2001இல் இரட்டை கோபுர கட்டடங்கள் அல்கொய்தா தீவிரவாதிகளால் விமானங்களைக் கொண்டு தாக்கப்பட்டதில் கிட்டத்தட்ட 3000 பேர் உயிரிழந்தனர்.
2001 செப்டம்பர் 11ஆம் திகதி அல்கொய்தா தீவிரவாதிகள் 2 பயணிகள் விமானங்களை கடத்திச் சென்று குறித்த இரட்டை கோபுர கட்டடங்களின் மீது மோதினர்.
விமானங்கள் மோதியதில் கட்டடங்கள் இரண்டும் தீப்பிடித்து எரிந்து, இடிந்து வீழ்ந்து தரைமட்டமாயின.
இந்த கோரத் தாக்குதலின்போது 19 தீவிரவாதிகள், 300 தீயணைப்பு வீரர்கள் உட்பட 3000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
நடந்தது என்ன?அமெரிக்காவின் கிழக்கு பகுதியில் நான்கு விமானங்களை கடத்திச் சென்ற அல்கொய்தா தீவிரவாதிகள் அமைப்பினைச் சேர்ந்த தற்கொலை குண்டுதாரிகள், அந்த விமானங்களைக் கொண்டு பெரும் தாக்குதல்களை நடத்தினர்.
அந்த விமானங்கள் நியூயோர்க், வொஷிங்டன் நகரங்களில் பெரும் கட்டடங்களை தாக்கின.
தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட நான்கு விமானங்களில் 2 விமானங்கள் நியூயோர்க்கின் மாபெரும் வர்த்தக மையமாக விளங்கிய இரட்டை கோபுர கட்டடங்களை தகர்த்தன.
இந்த 2 விமானங்களில் முதல் விமானம் வடக்கு கோபுரத்தின் மீது உள்நாட்டு நேரப்படி, காலை 8.46 மணிக்கு மோதியது. அதனையடுத்து, காலை 9.03 மணிக்கு இரண்டாவது விமானம் தெற்கு கோபுரத்தின் மீது மோதியது.
விமானங்கள் மோதியதில் கோபுரத்தின் இரண்டு கட்டடங்களும் தீப்பற்றி எரிந்ததில் மிகப் பெரியளவில் தீச்சுவாலையும் கரும்புகையும் வெளிக்கிளம்பின.
தாக்குதல் நடத்தப்பட்டபோது கட்டடத்தின் மேல் தளத்தில் பலர் சிக்கியிருந்ததாக கூறப்படுகிறது.

தீப்பற்றத் தொடங்கிய இரண்டு மணிநேரத்தில் 110 தளங்களைக் கொண்ட முழு கட்டடமும் இடிந்து விழுந்து, கட்டடத்தை அண்டிய பகுதியில் பெரும் புகைமண்டலத்தை பரப்பியது.
மேலும், தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட மூன்றாவது விமானம் காலை 9.37 மணிக்கு வொஷிங்டன் நகரில் உள்ள அமெரிக்க இராணுவத் தலைமையகமான பென்டகனின் மேற்குப் பகுதியை தாக்கியது.
நான்காவது விமானம் பென்சில்வேனியாவில் உள்ள வயலினுள் விழுந்து நொறுங்கியது. நாடாளுமன்ற கட்டடத்தின் மீது மோத திட்டமிட்டு செலுத்தப்பட்ட இந்த விமானம், அவ்விமானத்துக்குள் இருந்த பயணிகள் ஏற்படுத்திய இடையூறினால் வயல்வெளியில் விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த மிகவும் இள வயது நபராக, 2 வயது குழந்தை பதிவாகியுள்ளது. தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட விமானங்களில் ஒன்றினுள் தனது பெற்றோருடன் கிறிஸ்சின் லீ ஹான்சன் என்ற இந்த குழந்தை பயணித்துக்கொண்டிருந்தபோதே உயிரிழந்ததாக குறிப்பிடப்படுகிறது.
அத்துடன் இந்தத் தாக்குதலில் உயிரிழந்த அதிக வயதுடைய நபர், 82 வயதான ரொபட் நார்டன் ஆவார். அவர் தனது மனைவி ஜாக்குலினுடன் திருமண நிகழ்வொன்றுக்காக சென்றுகொண்டிருந்தபோதே இந்த கோரத்தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
அமெரிக்காவையே உலுக்கிப் போட்ட இந்த பயங்கர தாக்குதல்களுக்கு ஒசாமா பின் லேடனின் அல்கொய்தா தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. அதன் பின்னர், பாகிஸ்தானில் பதுங்கியிருந்த ஒசாமா பின் லேடனை 2011 மே மாதம் 2ஆம் திகதி அமெரிக்க இராணுவம் சுட்டுக் கொன்றமையும் வரலாற்றின் முக்கிய நிகழ்வாக பதிவானது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!