Belonging: A Journey of Love’ - இத்தாலிப் பெண் இந்தியாவின் மகளான கதை!
இத்தாலியில், லூசியானா எனும் சிறுநகரத்தில் தொடங்குகிறது அவரது வாழ்க்கை. கண்டிப்பான தந்தை, தந்தைக்குக் கட்டுப்பட்ட தாய், அக்கா, தங்கை எனச் சிறிய குடும்பம். உள்ளூரில் பள்ளிக்கல்வியை முடித்துவிட்டு உயர்கல்விக்காக இங்கிலாந்துக்குச் செல்கிறவர்,
அங்கே ஓர் உணவகத்தில் ராஜீவ் காந்தியைச் சந்திக்கிறார். கண்டவுடன் காதல் மலர்கிறது. இருவரும் இசை, சினிமா, நாடகங்கள், புத்தகக்கடைகள் என்று நாள்களைக் கழிக்கிறார்கள்.
ராஜீவ், அவரின் தாய் இந்திரா காந்தியிடம் சோனியாவைப் பற்றிச் சொல்ல, இந்திராவுக்கு ஒரு தயக்கம். `இத்தாலியில் பிறந்து வளர்ந்த ஒரு பெண்ணால் இந்தியச் சூழலைப் புரிந்துகொண்டு தன் மகனுடன் வாழ முடியுமா?’ ஆனாலும் ராஜீவ்வுக்குப் பிடித்திருக்கிறது என்பதால் மறுப்பு சொல்லவில்லை. சம்மதிக்கிறார்.
.ஆனால், சோனியாவுக்குப் பெற்றோரிடம் அனுமதி பெறுவது சுலபமாக இருக்கவில்லை. காரணம், அப்போது அவருக்கு 19 வயதுதான். இத்தாலிய சட்டப்படி 21 வயதுக்கு மேல்தான் இளைஞர்கள் சுயமாக முடிவெடுக்க முடியும்.
இத்தாலியச் சமூகத்திலும் ஆண்கள் வைப்பதே சட்டம். சோனியாவின் பெற்றோர் கிராமத்திலிருந்து வந்தவர்கள் என்பதால் கூடுதல் கெடுபிடி. அந்நிய தேசத்து இளைஞனைத் தன் பெண் காதலிக்கிறார் என்பதை அவர்களால் ஏற்க முடியவில்லை. இருந்தாலும் ராஜீவ் காத்திருக்கிறார்.
கடிதங்கள் வழியாகத் தொடர்கிறது காதல்.
21 வயது நிறைவடைந்தவுடன், தந்தையின் அனுமதியுடன் இந்தியாவுக்கு வருகிறார் சோனியா. ஆறு மாத காலம் இங்கே இருந்து பார்த்து, பிறகு முடிவெடுக்கலாம் என்பது அவரது எண்ணம். ஆனால் வந்த சில நாள்களிலேயே நிச்சயதார்த்த ஏற்பாடுகள் தொடங்குகின்றன.
தன் கட்டுப்பாட்டில் எதுவும் நடக்கவில்லை என்பதைக் கடிதம் எழுதி, தந்தைக்கு விளக்குகிறார் சோனியா. ஆனாலும் தந்தைக்குக் கோபம் குறையவில்லை. கல்யாணத்துக்கு வராமல் மனைவியை மட்டும் அனுப்பிவைக்கிறார். சில வருடங்களுக்குப் பிறகே தந்தையின் கோபம் குறைகிறது.
அதன் பின்னரே இந்தியாவின் சூழலுக்குத் தன்னை மாற்றிக்கொள்ளும் முயற்சியில் இறங்குகிறார் சோனியா. இந்தியாவை, அதன் பண்பட்ட கலாசாரத்தைக் கற்றுக்கொள்ள இந்திரா அவருக்கு உதவுகிறார். தான் எங்கு சென்றாலும் மருமகளையும் அழைத்துச் செல்கிறார்.

இந்த நூலில், இந்திரா தனது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி சோனியாவிடம் பகிர்ந்து கொள்ளும் இடம் ஒன்று வருகிறது. இந்திரா, ஃபெரோஸ் காந்தியைக் காதலித்துத் திருமணம் செய்துகொள்கிறார்.
ஆனாலும் கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்துவிடுகிறார்கள். அந்த வருத்தம் கடைசிவரை அவருக்குள் இருக்கிறது. இது பற்றி சோனியாவிடம் சொல்கிறபோது, ‘குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயங்களில், கோபமாக இருக்கும்போதோ, மனதளவில் காயப்பட்டிருக்கும் போதோ எந்த ஒரு முக்கிய முடிவையும் எடுக்கக் கூடாது’ என்கிறார் இந்திரா.
தன் வீட்டில் பாதுகாத்துவைத்திருக்கும் தாத்தா மோதிலால் நேரு, தாய் கமலா நேரு, தந்தை ஜவஹர்லால் நேரு ஆகியோரது அஸ்திகளை கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் இடமாகக் கருதப்படும் திரிவேணி சங்கமத்தில் சோனியாவைக் கரைக்கச் சொல்கிறார் இந்திரா.
அதைக் கரைக்கும்போது, இத்தாலியில் ஒரு மூலையில் பிறந்த தான், இந்தியாவின் மகளாகவே மாறிவிட்டோம் என்பதை உணர்ந்ததாக நூலில் குறிப்பிடுகிறார் சோனியா.
இந்தியாவின் மிக சக்திவாய்ந்த குடும்பத்தின் மருமகளாக இருந்தாலும், சோனியாவின் வாழ்க்கை எந்நேரமும் பதற்றம் நிறைந்ததாகவே இருந்திருக்கிறது.
1969, ஜனவரி 18-ம் தேதி பிறந்த முதல் குழந்தை மறுநாளே இறந்துவிடுகிறது. உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் அது ஏற்படுத்திய துன்பத்திலிருந்து மீண்டுவருவதற்கே சோனியாவுக்குப் பல காலம் பிடித்திருக்கிறது.
.இந்திரா அறிமுகப்படுத்திய அவசரநிலைக்குப் பிறகான சூழல், சோனியாவின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பெரிய அளவில் பாதிக்கிறது. பாட்டியின் செயலுக்காக, பள்ளியில் படிக்கும் ராகுலும் பிரியங்காவும் பாதிக்கப்படுகிறார்கள்.
ராகுல் காந்தியின் ஏழாவது பிறந்தநாளை ஒட்டி நண்பர்களை அழைத்து சிறிய விருந்துக்கு ஏற்பாடு செய்கிறார் சோனியா. வீட்டிலேயே கேக்கும் பிற உணவுகளும் தயாராகின்றன. வீடு முழுவதும் அலங்காரம் செய்யப்படுகிறது.
எல்லா ஏற்பாடுகளும் தயாராக இருக்க, ராகுலின் நண்பர்கள் யாரும் வரவில்லை. ‘வருவதற்கு பயமாக இருக்கிறது’ என்கிறார்கள் நண்பர்கள். இதேபோல் எந்நேரமும் ஆயுதம் தாங்கிய போராட்டக்காரர்கள் வீட்டைச் சுற்றி நிற்கிறார்கள். அடையாளம் தெரியாத ஆள் ஒருவன் கத்தியுடன் உணவு மேஜைக்கு அடியில் பிடிபடுகிறான்.
ஒருகட்டத்தில், ராஜீவ்வும் சோனியாவும் இந்திராவின் வீட்டைவிட்டு வெளியேறி, தனியாக வாழலாம் என்று முடிவெடுக்கிறார்கள். ஆனால் இந்திரா அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.
சஞ்சய்யின் மரணம் ராஜீவ்வை அரசியலுக்கு அழைக்கிறது. ஆனால் சோனியாவுக்கு அதில் விருப்பமில்லை. ‘ஏற்கெனவே இருக்கும் சூழலில் ராஜீவ்வும் அரசியலுக்குச் சென்றால் குடும்பத்தில் இருக்கும் கொஞ்ச நிம்மதியும் போய்விடும்’ என மறுக்கிறார். ஆனால் மகனை இழந்து நிற்கிற தன் தாய்க்கு ஆறுதல் தேவை என்று கூறி அரசியலுக்கு வருகிறார் ராஜீவ்.

பிந்திரன்வாலே
ஒருநாள் தீபாவளிக் கொண்டாட்டத்தின்போது சமையலறைக்கு அருகில் கையெறி குண்டுகள் கிடைக்கின்றன. ‘கொலைசெய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட திட்டம் கடைசி நேரத்தில் கைவிடப்பட்டதால் உயிர் பிழைத்ததாக’ சொல்கிறார்
சோனியா. மற்றொரு நாள் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பாகச் சென்ற வாகனத்தின் மீது கார் ஒன்று மோதுகிறது. அடுத்த சில நாள்களில் இந்திரா காந்தி, அவரின் பாதுகாவலர்களால் கொல்லப்படுகிறார். ‘அந்த நாள்களின் பதற்றத்தைத் தன்னால் இன்னும் மறக்க முடியவில்லை’ என்கிறார் சோனியா.
ராஜீவ் பிரதமரான பிறகு மிஞ்சியிருந்த நண்பர்களும் விட்டுச் சென்றுவிட்டார்கள். ‘ஆட்சி மாறும்போது தாங்கள் குறிவைக்கப்படலாம்’ என்ற அச்சத்தில் நெருக்கமானவர்கள்கூட விலகுகின்றனர். இதைக் குறிப்பிட்டு, ‘அதிகாரம், கண்ணுக்குத் தெரியாத சுவர் ஒன்றை எழுப்புவதாகவும், உண்மையான நட்பையும் அன்பையும் இழக்கவைக்கிறது’ என்றும் குறிப்பிடுகிறார் சோனியா.
.ராஜீவ் மரணமடைந்த சூழல் பற்றி சோனியா பகிர்ந்துகொள்ளும் தகவல்கள் கலங்கவைக்கின்றன. ‘அப்பா இறந்துவிட்டார்’ என பிரியங்கா ஓடிவந்த அந்த இரவில் தான் தாங்க முடியாத துயரத்தில் வீழ்ந்ததாகவும், அதன் பிறகு தன்னால் பழைய மாதிரி இருக்க முடியவில்லை என்றும் பதிவுசெய்கிறார் சோனியா.
‘ராஜீவ் விரும்பியபடி அவரது கண்களைத் தானம் செய்ய வேண்டும்’ என்று மருத்துவர்களிடம் சொன்னபோது, ‘அவரது கண்களில் சிறு துண்டுகூட மிச்சம் இல்லை’ என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

ராஜீவ்வின் இறப்புக்குப் பிறகு இத்தாலிக்கு வரும்படி அவர் சகோதரி நடியா வற்புறுத்துகிறார். ஆனால் மறுத்துவிடுகிறார் சோனியா. `
சோனியாதான் கட்சியின் அடுத்த தலைவராக வேண்டும்’ என்று காங்கிரஸ் கமிட்டி வலியுறுத்துகிறது. ‘ஆனால் அந்தப் பொறுப்பை நான் ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. எல்லாவற்றையும் விட்டுவிட்டு குழந்தைகளுடன் நேரம் செலவழிக்கவே விரும்பினேன்’ என்கிறார் சோனியா.
‘வாழ்க்கை பல கடினமான விஷயங்களை எனக்குக் காட்டியிருக்கிறது. நான் விரும்பாத பல முடிவுகளை எடுக்க வைத்திருக்கிறது.
ஆனால் கஷ்டங்கள்தான் எனக்குள் இருந்த திறனையும் வெளிக்கொண்டு வந்திருக்கின்றன...’ என்கிற சோனியா, ‘ஒருநாள் ராஜீவ் என்னிடம் சொன்னார்... `வாழ்வில் அதிகம் திருப்தி தரும் விஷயம், பிற மனிதர்களின் வாழ்க்கையை முன்னேற்ற உதவுவதுதான். அதுபோல் ஒரு திருப்தி வேறு எதிலும் கிடைக்காது.’ அந்த திருப்தியுடன் என் பயணத்தைத் தொடர்கிறேன்.’
இப்படியாக நிறைவடைகிறது இந்தப் புத்தகம். 500-க்கும் மேற்பட்ட பக்கங்களில் மிகச் சரளமான மொழியில் எழுதப்பட்டிருக்கும் இந்தப் புத்தகம், இத்தாலியிலிருந்து வந்த இந்தியாவின் மகளை உணர்ந்து கொள்ளவும் புரிந்துகொள்ளவும் வைக்கிறது.
"
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!