news@ilakkiyainfo.com

பிரிவுகள்

N95 முகக்கவசம் அணியுங்கள்… இல்லையேல்…

18 Nov, 2026
இலங்கைக்கு வெளியிலிருந்து வீசும் காற்று நீரோட்டங்கள் காரணமாக கொழும்பு, யாழ்ப்பாணம், அனுராதபுரம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் வளிமண்டலத்தில் உள்ள தீங்கு விளைவிக்கும் நுண்துகள்களின் அளவு (PM10 மற்றும் PM2.5) குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை அறிவித்துள்ளது. எதிர்வரும் சில நாட்களிலும் இந்த நிலைமை நீடிக்கக்கூடும் என்பதால், உணர்திறன் கொண்டவர்கள் 

(பாதிப்புக்குள்ளாகக்கூடியவர்கள்) ‘N95’ ரக முகக்கவசங்களை அணியுமாறு சுகாதாரப் பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர்.

தேசிய சுற்றாடல் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய, மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் முன்னெடுக்கப்படும் காற்றின் தரக் கண்காணிப்புத் தரவுகளின் அடிப்படையில் இந்த நிலைமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, நாட்டின் வடமாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களிலும் கொழும்பு, அனுராதபுரம், புத்தளம், திருகோணமலை மற்றும் கல்முனை ஆகிய பகுதிகளிலும் வளிமண்டலத்தில் மிதக்கும் நுண்துகள்களின் மட்டம் வேகமாக அதிகரித்துள்ளது.

காற்றின் தரச் சுட்டெண்ணுக்கு அமைய, இந்தக் காற்று மாசுபாட்டு மட்டத்தினால் ஆஸ்துமா, பீனிசம் உள்ளிட்ட சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், சிறுவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் முதியவர்கள் போன்ற உணர்திறன் மிக்க தரப்பினருக்கு நேரடியான சுகாதாரப் பாதிப்புகள் ஏற்படுவதற்கான கடும் அபாயம் நிலவுகின்றது.

இவ்வாறான காற்று மாசுபாட்டுச் சந்தர்ப்பங்களில் பின்பற்ற வேண்டிய பரிந்துரைக்கப்பட்ட சுகாதார ஆலோசனைத் தொகுப்பொன்றைச் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளதுடன், அந்த ஆலோசனைகளைத் தேசிய காற்றின் தர இணையத்தளமான aq.cea.lk ஊடாகப் பொதுமக்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

தற்போது நிலவும் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, உணர்திறன் கொண்டவர்கள் அநாவசியமாக வெளியில் நடமாடுவதைக் கட்டுப்படுத்த வேண்டும் எனவும், வெளியில் செல்வதாயின் ‘N95’ முகக்கவசங்களைப் பயன்படுத்துவது மிகவும் உகந்தது எனவும் மத்திய சுற்றாடல் அதிகாரசபை வலியுறுத்தியுள்ளது.

 

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!