news@ilakkiyainfo.com

பிரிவுகள்

Ramayana: Part 1 - ஒரு பெருங்கனவின் திரைவடிவம்!

13 Nov, 2026
`தலைமுறை தலைமுறையாகச் சொல்லப்பட்ட ஒரு கதையை, இதுவரை காணாத திரைமொழியில் சொல்ல முடியுமா?’ அந்தப் பெரும் கலைச் சவாலை ஏற்று உருவாகியிருக்கிறது ‘இராமாயணம் – பாகம் 1’. 

எட்டு ஆஸ்கர்களைப் பெற்ற நிறுவனமான DNEG<ன CEO நமித் மல்ஹோத்ராவின் பெருங்கனவுக்கு, ‘தங்கல்’ இயக்குநர் நிதேஷ் திவாரி திரை வடிவம் கொடுத்திருக்கிறார். 

இந்திய சினிமாவின் கற்பனை இன்னும் எவ்வளவு உயரம் பறக்க முடியும் என்ற ஆர்வத்தைத் தூண்டும் முயற்சியாக இது வெளிவந்திருக்கிறது.

1,000 கோடி ரூபாய் வசூலே மிகச் சில இந்தியப் படங்களுக்கு மட்டுமே சாத்தியமாகும் சூழலில், இரண்டு பாகங்களுக்கும் சேர்த்து 4,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான பட்ஜெட் என நமித் அறிவித்தபோது, வியப்புடன் சந்தேகமும் எழுந்தது. 

ஏற்கெனவே பலமுறை திரையில் சொல்லப்பட்ட ஒரு கதையை வைத்து, இவ்வளவு பெரிய முதலீட்டை எப்படித் திரும்ப எடுக்க முடியும்... ‘ஆதிபுருஷ்’ போன்ற சமீபத்திய இதிகாசத் தழுவல்கள் ஏற்படுத்திய ஏமாற்றமும் இந்த முயற்சியை எச்சரிக்கையுடன் அணுக வைத்தது.


நமித்தின் திட்டமோ இந்தியச் சந்தையைத் தாண்டியதாக இருந்தது. இந்தியர்களுக்கு நன்கு தெரிந்த இந்தக் கதையை, அதைப் பற்றி அறிந்திராத உலகப் பார்வையாளர்களிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே அவரது நோக்கம். பல நூற்றாண்டுகளாக, பல்வேறு மொழிகளிலும் கலை வடிவங்களிலும் வாழ்ந்து வரும் ஓர் இதிகாசத்துக்கு, சர்வதேச ரசிகர்களையும் ஈர்க்கும் திரை வடிவத்தைத் தர நினைத்தார்.

 இதே 2026-ல்தான் ஹோமரின் கிரேக்க இதிகாசமான ‘தி ஒடிசி’யை கிறிஸ்டோஃபர் நோலன் பிரமாண்டமாகத் திரைக்குக் கொண்டுவந்தார்.

கிட்டத்தட்ட அதே பொருட்செலவில் இதுவும் திரைக்கு வந்திருக்கிறது. இதற்காகவே, மேற்கத்தியச் சந்தைக்கான விளம்பரப் பணிகளும் கவனமாகத் திட்டமிடப்பட்டன. சான் டியாகோ காமிக் கானில் அறிமுகம், 

லாஸ் ஏஞ்சல்ஸின் அகாடமி மியூசியத்தில் சிறப்புத் திரையிடல், லண்டனில் நட்சத்திரங்கள் பங்கேற்ற விளம்பர நிகழ்ச்சி என ஒவ்வொரு கட்டத்திலும் அந்த நோக்கம் வெளிப்பட்டது.

இந்தப் பெருங்கனவின் முக்கிய பலம், அதற்காக ஒன்று திரட்டப்பட்டிருக்கும் படைப்புக் கூட்டணி. ‘ட்யூன்: பார்ட் 2’, ‘அலாதீன்’ (Aladdin) படங்களில் பணியாற்றிய ரவி பன்சால், ‘தி ரிங்ஸ் ஆஃப் பவர்’ தொடருக்காக Art Directors Guild விருது வென்ற ராம்சே ஏவரி ஆகியோர் கலை வடிவமைப்பில் இணைந்திருக்கிறார்கள். 

‘பத்மாவத்’, ‘ஹீராமண்டி’ படைப்புகளில் பாரம்பர்ய நெசவையும், நுணுக்கமான எம்பிராய்டரியையும் திரையில் செழுமையாகக் காட்டிய ரிம்பிள் –ஹர்ப்ரீத் நருலா கூட்டணி, ஆடை வடிவமைப்பை கவனித்திருக்கிறது.

‘பிளானெட் ஆஃப் தி ஏப்ஸ்’ படங்களில் பணியாற்றிய டெர்ரி நோட்டரி, ‘மேட் மேக்ஸ்: ஃப்யூரி ரோடு’ புகழ் கை நாரிஸ் ஆகியோரின் அனுபவம் சண்டைக் காட்சிகளுக்கு வலு சேர்த்திருக்கிறது. 

ஆஸ்கர் வென்ற ஹான்ஸ் ஸிம்மரும், ஏ.ஆர்.ரஹ்மானும் இசையில் கைகோத்திருக்கிறார்கள். இப்படிப் பார்த்துப் பார்த்துத் தேர்வு செய்யப்பட்ட கலைஞர்களின் உழைப்பு படத்தின் ஒவ்வொரு ஃபிரேமிலும் வெளிப்படுகிறது. 

இவ்வளவு பெரிய கூட்டணி எதிர்பார்ப்பை உருவாக்கிய போதும், ரன்பீர் கபூர், சாய் பல்லவியின் தேர்வு முதல் முன்னோட்டங்களின் VFX, இசை வரை பல விவாதங்களும் தொடர்ந்தன. 

அவற்றில் தேவையற்றதைப் புறம் தள்ளி, தேவையானவற்றுக்குச் செவி கொடுத்து படத்தை மெருகேற்றியே திரைக்குக் கொண்டுவந்திருக்கிறார்கள்.

இறுதியில் திரையரங்கில் திரை அனுபவமாகப் பார்க்கும்போது, காட்சிகளில் இடம்பெறும் கற்பனையும், அதைச் சாத்தியமாக்கியிருக்கும் உழைப்பும் பல இடங்களில் பிரமிக்க வைக்கின்றன. 

பெரும் நட்சத்திரப் பட்டாளம் இருந்தாலும், முதல் பாகத்தில் திரையை ஆக்கிரமிப்பது ‘யஷ்’ஷின் ராவணன்தான். அவரது உடல்வாகும், போர்க்கள மூர்க்கமும் அந்தக் கதாபாத்திரத்துக்குத் தேவையான அச்சுறுத்தலைக் கொண்டுவருகின்றன.

முதல் பாகத்தில் ராவணனின் பின்கதையை விரிவாகச் சொல்லியிருப்பதும், யஷ்ஷுக்குக் கிடைத்திருக்கும் இந்த முக்கியத்துவத்துக்குக் காரணம். ராமராக ரன்பீரின் முழுப் பாய்ச்சலை மதிப்பிட, இரண்டாம் பாகம் வரை காத்திருக்க வேண்டும்.

 அரண்மனைகள், அரக்கர்களின் தோற்றம், ஜடாயுவின் வடிவமைப்பு எனக் காட்சியமைப்பில் இந்திய சினிமா இதுவரை அதிகம் சென்றிராத இடங்களுக்கு அழைத்துச் செல்கிறார்கள். 

அதேநேரம், பிரமாண்டத்தை முன்னிறுத்தும் முனைப்பு சில இடங்களில் கதைசொல்லலைப் பின்னுக்குத் தள்ளுகிறது. காட்சிகளுக்குக் கொடுத்திருக்கும் கவனம், அவற்றை இணைக்கும் உணர்வுபூர்வமான தருணங்களிலும் இன்னும் கூடியிருக்கலாம். 

படத்தின் இறுதியில், புஷ்பக விமானத்தை மையமாகக்கொண்டு நிகழும் ராவணன்–ஜடாயு மோதல், இந்த முயற்சியின் உச்சம். கற்பனை, VFX, சண்டை வடிவமைப்பு ஆகியவை ஒன்று சேர்ந்து, காட்சிமொழியில் ஒரு புதிய உயரத்தைத் தொட்டிருக்கின்றன.


பல மொழிகளிலும் வசனங்களுக்கேற்ப கதாபாத்திரங்களின் உதட்டசைவை AI உதவியுடன் மாற்றியிருப்பது கவனிக்கவைக்கிறது. 


தமிழ் வசனங்களுடன் உதட்டசைவு பொருந்தும்போது, பல தருணங்களில் நேரடித் தமிழ்ப் படம் பார்க்கும் உணர்வு ஏற்படுகிறது. ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளிலும் இதே அனுபவத்தைச் சாத்தியமாக்கியிருக்கிறார்கள்.


வரும் காலங்களில் ஹாலிவுட் படங்களும் பின்பற்றத்தக்க முன்னோடி முயற்சி இது. மேற்கத்திய ரசிகர்களின் வரவேற்பு எப்படியிருக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 


ஆனால், ‘இராமாயணம் – பாகம் 1’ ‘இந்திய சினிமாவிலும் பெரும் கனவுகள் காண முடியும்’ என்ற நம்பிக்கையைப் பலருக்கும் விதைத்திருக்கிறது!

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!