இலங்கை அரசியல் வரலாற்றில் பௌத்த மகா சங்கத்தின் அழுத்தங்களுக்கும் கோரிக்கைகளுக்கும் அரச தலைவர்கள் அஞ்சி, சிரம் தாழ்த்தி, நாட்டின் சட்டத்தையும் நீதியையும் மதப் போர்வையின் கீழ் அடகு வைப்பது பல தசாப்த கால வழக்கமாக இருந்துவந்துள்ளது.
அரசாங்கங்களை உருவாக்குவதிலும் கவிழ்ப்பதிலும் அஸ்கிரிய, மல்வத்து உள்ளிட்ட பிரதான நிக்காயாக்களின் மகாநாயக்க தேரர்கள் வகித்த செல்வாக்கு, நாட்டின் அரசியலமைப்பு மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கு அப்பாற்பட்ட ‘மத மேலாதிக்க’ அதிகாரத்தை அவர்களுக்குத் தாராளமாக வழங்கியிருந்தது.
இருப்பினும், இஸ்லாமிய மதத்தையும் அதன் புனித விழுமியங்களையும் அவமதிக்கும் வகையில் கருத்தை வெளியிட்ட குற்றத்திற்காகக் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், கைதிகளுக்கான சாதாரண சீருடையில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சம்பவம், நாட்டின் சட்ட நிர்வாகத்திலும் அரசியல் பண்பாட்டிலும் புதிய விவாதத்தையும் திருப்புமுனையையும் தோற்றுவித்துள்ளது.
தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், இந்த உணர்வுபூர்வமான விவகாரத்தைக் கையாண்ட விதம், இலங்கையின் பாரம்பரிய மத-அரசியல் சமநிலையை மீள்பரிசீலனைக்கு உட்படுத்தியுள்ளது. ஆனால் அது மிகவும் உணர்வு ரீதியானது.

ஞான சார தேரர்
அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் ஊடகங்களுக்குத் தெளிவுபடுத்தியது போல, கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட எந்தவொரு நபருக்கும் 1877 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்டுள்ள சட்ட நடைமுறைகளே பின்பற்றப்படுகின்றன.
இதில் ஞானசார தேரருக்கு எந்தவித விசேட சலுகையோ அல்லது பாரபட்சமோ காட்டப்படவில்லை. குறித்த கட்டளைச் சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்டுள்ள விதிமுறைகளின்படி, குறிப்பாக 216 ஆவது விதிமுறைப் பிரிவில் மாத்திரமே தேரர்கள் பற்றிய குறிப்பிட்ட குறிப்புகள் உள்ளன.
அதேநேரம், நீதிமன்றத்தால் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்படும் ஒருவர், சிறைச்சாலைகளால் அங்கீகரிக்கப்பட்ட கைதிகளுக்கான சீருடையையே அணிய வேண்டும் என்பது சட்டப்பூர்வமான விதியாகும்.
ஏற்கெனவே வெவ்வேறு குற்றச்சாட்டுகளுக்காகக் கடூழிய மற்றும் சாதாரண சிறைத்தண்டனைகளை அனுபவித்து வரும் 63 பௌத்த தேரர்களுக்கு என்ன சட்ட நடைமுறை பின்பற்றப்படுகிறதோ, அதே சட்டமே ஞானசார தேரருக்கும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. சிறைச்சாலைச் சட்ட விதிகள் மற்றும் நிலையான கட்டளைகளுக்கு அமைவாகவே அவர் கைதி உடையில் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
ஞானசார தேரரின் காவி உடை களையப்பட்டு, சிறை உடையில் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டமை பௌத்த மக்களுக்கு அதிர்ச்சியளிப்பதாகக்கூறி, சிறைச்சாலை ஆணையாளருக்கு மகாநாயக்க தேரர்கள் கடிதம் எழுதியதுடன், ஜனாதிபதியையும் நேரில் சந்தித்துக் கலந்துரையாடினர்.
வரலாற்று ரீதியாக, இத்தகைய சந்தர்ப்பங்களில் அரச தலைவர்கள் மகா சங்கத்தின் கொந்தளிப்பிற்கு பயந்து, சட்டத்தை வளைப்பதோ அல்லது தன்னிச்சையான நிறைவேற்று அதிகார உத்தரவுகள் மூலம் சலுகைகள் வழங்குவதோ தான் வழக்கமாக இருந்துள்ளது.ஆனால், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்த அழுத்தத்திற்கு அடிபணியாது, ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தும் வகையில் முதிர்ச்சியுடனும் நிதானத்துடனும் நடந்து கொண்டமை வரவேற்கத்தக்க விடயமாகவே பார்க்கப்பட வேண்டும்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, மகா சங்கத்தினருடனான சந்திப்பின் போது, ‘சட்டம் என்பது ஆட்சியாளரின் தனிப்பட்ட விருப்பமாக மாறக்கூடாது’ என்ற மிக முக்கிய அரசியல் தத்துவத்தைச் சுட்டிக்காட்டினார்.
சட்டத்தில் இடைவெளிகளோ அல்லது தற்காலத்திற்குப் பொருந்தாத தன்மையோ இருந்தால், அதை உரிய பாராளுமன்ற நடைமுறைகள் மூலம் சட்டத் திருத்தமாக மேற்கொள்வதே உகந்ததே தவிர, ஜனாதிபதியின் தன்னிச்சையான விருப்பத்திற்கு ஏற்ப சட்டத்தை மீறி உத்தரவுகளைப் பிறப்பிக்க முடியாது’ என்று அவர் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.
இடதுசாரி சித்தாந்தப் பின்னணியைக் கொண்ட ஒரு தலைவராக, மதச் சலுகைகளுக்கு அப்பால் சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர்கள் என்ற கோட்பாட்டை அவர் நிலைநிறுத்த முற்பட்டுள்ளார் என்பது வெட்ட வெளிச்சமாகவே தெரிகிறது.
உலக வரலாற்றில் இடதுசாரி அல்லது முற்போக்கு அரசாங்கங்கள் சமய நிறுவனங்களுடனும் மதத் தலைவர்களுடனும் கையாண்ட விதம் மிகவும் கவனத்திற்குரியது.
பிரெஞ்சுப் புரட்சிக்குப் பிந்தைய கட்டமைப்பு மற்றும் சோவியத் யூனியன், கியூபா போன்ற இடதுசாரி ஆட்சிகளில், அரச அதிகாரத்திலிருந்து மதம் முற்றாகப் பிரிக்கப்பட்டு ‘மதச்சார்பின்மை’ கோட்பாடு அழுத்தமாக பின்பற்றப்பட்டு அமுல்படுத்தப்பட்டது.
மத குருமார்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்ற பிம்பம் உடைக்கப்பட்டு, சாமானிய குடிமக்களுக்குரிய குற்றவியல் சட்டங்களின் கீழேயே அவர்கள் விசாரிக்கப்பட்டனர்.
அதேபோல, அயர்லாந்து குடியரசில் பல தசாப்தங்களாக ஆட்சி அதிகாரத்திலும் சமூக மட்டத்திலும் கோலோச்சிய கத்தோலிக்கத் திருச்சபையின் இரும்புப்பிடி, சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் நிதி முறைகேடுகளுக்கு எதிரான கடுமையான சட்ட நடவடிக்கைகளின் மூலம் தளர்க்கப்பட்டு, அரச அதிகாரமும் சட்டத்தின் ஆட்சியும் நிலைநிறுத்தப்பட்ட வரலாறு இதற்குச் சிறந்த உலகளாவிய உதாரணங்களாகும்.
இலத்தீன் அமெரிக்க நாடுகளில் இடதுசாரி ஆட்சிகள் மலர்ந்த போது, ஆன்மீகத்தையும் மத விழுமியங்களையும் மதித்த அதேவேளை, குற்றவியல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட மதத் தலைவர்களுக்கு எவ்வித சட்ட விலக்குகளும் அளிக்கப்படவில்லை.
அதேபோன்று, இலங்கையிலும் மதக் கலாசாரத்தை மதிக்கும் அதேநேரம், சட்ட மீறல்களின் போது மதத் தலைவர்களுக்கு சிறப்பு விலக்கு அளிக்க முடியாது என்பதில் அநுர அரசாங்கம் காட்டிய உறுதிப்பாடு, ‘முற்போக்கு அரசுக்கான’ அடையாளமாகும்.

அதேநேரம், ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது, மகாநாயக்கத் தேரர்கள் காட்டிய நிதானமும் அமைதியும் கவனிக்கத்தக்கது. பௌத்த கடும்போக்காளர்களும், அதனை மையப்படுத்தி அரசியல் சக்திகளும் இதனை மதப்பேரினவாதமாக மாற்ற முயன்ற போதிலும், மகா சங்கத்தினர் மற்றும் ஜனாதிபதி அநுரவுக்கு இடையிலான பேச்சுவார்த்தை ஆரோக்கியமாக அமைந்திருந்தது.
இதன் விளைவாக, 1877 ஆம் ஆண்டின் சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் விதிகள் மற்றும் நிலையான கட்டளைகளை மீளாய்வு செய்து புதுப்பிப்பதற்காகப் புத்தசாசன, நீதி மற்றும் பொது நிர்வாக அமைச்சுகளின் செயலாளர்கள், பௌத்த அலுவல்கள் ஆணையாளர் நாயகம் மற்றும் சிறைச்சாலை ஆணையாளர் அடங்கிய விசேட குழுவொன்றை நியமிக்க ஜனாதிபதி உடன்பட்டுள்ளார்.
இருப்பினும், இந்த இடத்தில் பாரதூரமான எச்சரிக்கையும் கேள்வியும் எழுகிறது. சிறைச்சாலைச் சட்டத் திருத்தங்கள் என்ற பெயரில், பௌத்த தேரர்களுக்கோ அல்லது ஏனைய மதத் தலைவர்களுக்கோ குற்றவியல் சட்ட நடவடிக்கைகளிலிருந்தும் சிறைச்சாலை விதிமுறைகளிலிருந்தும் விசேட விலக்குகளோ அல்லது முன்னுரிமைகளோ வழங்க அரசாங்கம் ஒருபோதும் முனையக் கூடாது.
இதுவரை காலமும் இலங்கையில் சிறுபான்மை மதத் தலைவர்களான உலமாக்களோ, கத்தோலிக்க அருட்தந்தையர்களோ அல்லது இந்து குருமார்களோ சட்டத்தின் முன் நிறுத்தப்பட்ட போது பின்பற்றப்படாத விசேட விலக்கு, பௌத்த பிக்குமார்களுக்கு மட்டும் சட்டபூர்வமாக உருவாக்கப்படுமாயின், அது அரசியலமைப்பின் 12(1) பிரிவான ‘சட்டத்தின் முன் அனைவரும் சமம்’ என்ற அடிப்படை உரிமையை முற்றிலும் தகர்த்துவிடும்.
குற்றச்செயல்களில் ஈடுபடும் மதத் தலைவர்கள், தங்களது ஆன்மீக ஆடைகளுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு தண்டனைகளிலிருந்து தப்பிக்க முற்படுவது, மதத்தின் புனிதத்தன்மைக்கே இழுக்காகும். 1877 ஆம் ஆண்டின் சிறைச்சாலைச் சட்டத்தைப் புதுப்பிப்பது சிறைவாசிகளின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் நிர்வாகச் செயற்திறனை அதிகரிப்பதற்குமாக மட்டுமே இருக்க வேண்டுமே தவிர, குறிப்பிட்ட ஒரு பிரிவினரைச் சட்டத்திற்கு மேல் உயர்த்தும் முயற்சியாக மாறக்கூடாது.
மத மேலாதிக்க அழுத்தங்களுக்கு அடிபணியாமல், சட்டத்தின் ஆட்சியை முதன்மைப்படுத்திய அநுரவின் அரசாங்கம், வரவிருக்கும் சட்டத்திருத்தங்களிலும் அதே நடுநிலைமையையும் ஜனநாயகப் பண்பையும்பேண வேண்டும் என்பதே ஒட்டுமொத்த சமூகத்தினதும் எதிர்பார்ப்பாகும்.
ஆர்.ராம்
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!