news@ilakkiyainfo.com

பிரிவுகள்

அநுராதபுரத்தில் தேரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அரசாங்கத்தின் வழிநடத்தலில் முன்னெடுக்கப்பட்டது - மிஹிந்தலை விகாராதிபதி குற்றச்சாட்டு

15 Nov, 2026
அநுராதபுரத்தில் பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட தேரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அரசாங்கத்தின் வழிநடத்தலில், அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைய பொலிஸாரின் முழுமையான அனுசரணையுடன் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி வலவாஹாங்குனவெவே தம்மரத்ன தேரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மிஹிந்தலை கந்தகச் சைத்தியம் உள்ளிட்ட புனிதத் தலங்களுக்கு வழிபடுவதற்காக வருகை தரும் மக்களைத் தாக்குவதற்கு எவரேனும் முயற்சித்தால் அதற்கான முழுப்பொறுப்பையும் அரசாங்கமே ஏற்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மிஹிந்தலை ரஜமஹா விகாரை வளாகத்தில் நேற்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

அநுராதபுரத்தில் இடம்பெற்ற சம்பவத்தை யார் முன்னெடுத்தார்கள் என்பது முழு நாட்டுக்கும் தெரியும். அதனை மூடி மறைக்க எவரும் முயற்சித்தாலும் உண்மையை மாற்ற முடியாது. காலி முகத்திடல் போராட்டத்தின்போது அப்போதைய ஆட்சியாளர்களின் வழிநடத்தலில் ஆயுதமற்ற போராட்டக்காரர்கள் தாக்கப்பட்டதைப் போன்றே, பிரித் நூல் அணிந்து அமைதியான முறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட தேரர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸ் திணைக்களம், முப்படைகள் மற்றும் அரச புலனாய்வுப் பிரிவுகள் இருந்தும் இவ்வாறான மோதல்களைத் தடுக்க முடியாமல் போனது ஏன்? இந்தச் சம்பவம் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டதாகவே நாம் கருதுகின்றோம். இதற்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்க வேண்டும்.

அரசாங்கத்தின் ஆதரவுடன் செயற்படும் சில சமூக ஊடகச் செயற்பாட்டாளர்கள், அச்சுறுத்தும் கருத்துகளைப் பரப்புகின்றனர். அங்கு கூடாரங்கள் அமைக்கவோ உண்ணாவிரதம் இருக்கவோ நாம் தீர்மானித்தால் ஊடகங்கள் ஊடாக அறிவிப்போம். இல்லாத தகவல்களைப் பரப்பி மக்களை அச்சுறுத்த வேண்டாம்.

வழிபாடுகளை நடத்தி நாட்டுக்கு எதிராகச் செயற்படுபவர்களுக்கு எதிராகப் பிரார்த்தனை செய்தோம். அதற்குப் பின்னர் 24 மணித்தியாலங்களுக்குள் தடியடிகளுக்கு இலக்காகி, காயமடைந்து தையல் போட வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே, புனிதத் தலங்களுடன் விளையாட வேண்டாம்.

பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்டோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், ஆயுதமற்ற தேரர்கள் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் தொடர்பான காணொளி ஆதாரங்கள் இருந்தும் ஏன் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை? அவற்றைப் பொலிஸார் ஆராய்ந்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

அதிகாரம் நிரந்தரமானதல்ல. கடந்த கால ஆட்சியாளர்களும் பதவிகளை இழந்து சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளனர். எனவே, தற்போதைய அரசாங்கமும் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தாமல் சட்டத்தை அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

மேலும், எனக்கும் உலப்பனே தேரருக்கும் எதிராகத் தாக்குதல் நடத்த வேண்டும் எனச் சமூக ஊடகங்களில் அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றன. தொலைபேசி அழைப்புகள் மூலம் எமது உரையாடல்கள் பதிவுசெய்யப்பட்டு, அவை சமூக ஊடகங்களில் பரப்பப்படுகின்றன. இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களைக் கட்டுப்படுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜனாதிபதி என்பவர் வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என்ற வேறுபாடின்றி அனைத்து இன, மத மக்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியவர். மிஹிந்தலை புனித பூமி உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களுக்கு வருகை தரும் தேரர்கள், பிக்குணிகள் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தவோ தாக்கவோ எவருக்கும் இடமளிக்கக்கூடாது. அவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றால் அதற்கான முழுப்பொறுப்பையும் அரசாங்கமே ஏற்க வேண்டும் என்றார்.அரசுச் செய்திகள்

  

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!