news@ilakkiyainfo.com

பிரிவுகள்

அநுராதபுரத்தில் பௌத்த பிக்குகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பில் 'மக்கள் ஆணைக்கான பிரஜைகள்' அமைப்பின் இரண்டாவது அமைதிப் பேரணி!

19 Oct, 2026

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்துக்கு மக்கள் வழங்கிய ஆணையைப் பாதுகாக்கவேண்டும் என்றும், திருடர்கள், ஊழல்வாதிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தி, 'ஜனவரம புரவசியோ' (மக்கள் ஆணைக்கான பிரஜைகள்) அமைப்பின் ஏற்பாட்டில் பௌத்த பிக்குகள் தலைமையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்ற இரண்டாவது பாரிய அமைதிப் பேரணி இன்று திங்கட்கிழமை (19) அநுராதபுரத்தில் நடைபெற்றது.


பதாகைகளை ஏந்தியவாறு அநுராதபுரம் நகருக்குள் பேரணியாகச் சென்ற பௌத்த பிக்குகளும் பொதுமக்களும், ஜனாதிபதிக்கு மக்கள் வழங்கிய ஆணையின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவேண்டும் என்றும், வடக்கிலும் தெற்கிலும் இளைஞர்கள் ஆயுதப் போராட்டங்களில் ஈடுபட்டதற்கு நாட்டில் சட்டம் சீர்குலைந்திருந்தமையும் ஒரு காரணம் என்றும் எனவே நாட்டில் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.


இதன்போது தேரர் ஒருவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,


ஒரு நாடு முன்னேறுவதற்கு முதன்மையானது அந்த நாட்டின் சட்டக் கட்டமைப்பும் ஒழுக்கமும் ஆகும். 5,000 ஆண்டுகள் நிலைத்திருக்கவேண்டிய உன்னதமான பௌத்த சாசனத்தைப் பாதுகாப்பதற்கு வினயம் அவசியமாகும். 


அதேபோன்று, எந்தவொரு நாட்டிலும் முதலிடம் வகிக்கவேண்டியது சட்டக் கட்டமைப்பாகும்.


சட்டம் சீர்குலைந்திருந்த நாட்டை தற்போது இளைஞர்கள் ஓரளவுக்குச் சீரமைத்து முன்னோக்கிக் கொண்டுசெல்லும் நிலையில், அதனை மீண்டும் சீர்குலைப்பதற்குப் பல்வேறு தரப்பினர் பிரச்சினைகளையும் முரண்பாடுகளையும் தோற்றுவிக்கின்றனர். எனவே, இத்தகைய செயற்பாடுகளைக் கண்டு இளைஞர்கள் மனம் தளரவேண்டிய அவசியமில்லை.


கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டியுள்ளது. அவற்றைப் படிப்படியாகத் தீர்த்துக்கொண்டு முன்னோக்கிச் செல்லவேண்டும். மதம் எதுவாக இருந்தாலும், நாட்டின் சட்டக் கட்டமைப்பைச் சீரமைத்து நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்ல வேண்டும்.



ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட அரசாங்கத்தின் அனைத்துத் தரப்பினரிடமும் நாம் வலியுறுத்துவது என்னவென்றால், நாட்டில் சட்டம் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதாகும். 



ஜனாதிபதி கூறுவதைப் போன்று சட்டம் அனைவருக்கும் மேலானதாக இருக்கவேண்டும். எனக்கும், நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் சட்டமே முதன்மையானதாக இருக்கவேண்டும். இரண்டு சட்டங்கள் இருந்தால், அது இரண்டு நாடுகள் இருப்பதற்குச் சமமாகும்.



வடக்கில் இளைஞர், யுவதிகள் ஏன் ஆயுதப் போராட்டத்துக்குத் தள்ளப்பட்டார்கள்? தெற்கில் இளைஞர், யுவதிகள் ஏன் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்? இவ்வாறான நிலைமைகள் ஏற்படுவதற்கு நாட்டில் சட்டம் சீர்குலைந்திருந்தமையும் ஒரு காரணமாகும். 



எனவே, தற்போது நாடு ஓரளவுக்குச் சீரமைக்கப்பட்டு முன்னோக்கிச் செல்லும் இந்தச் சந்தர்ப்பத்தில், மீண்டும் நாட்டைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது. நாட்டின் சட்டக் கட்டமைப்பைச் சீரமைத்து அனைவருக்கும் ஒரே சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை ஜனாதிபதி உள்ளிட்ட ஆட்சியாளர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.


நீண்டகால அனுபவங்களின் அடிப்படையில் பல்வேறு விடயங்களை நாம் பார்த்திருக்கிறோம். நாட்டின் வளங்கள் மக்களைச் சென்றடையாத நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டின் உயர்மட்ட அரசியல் அதிகாரிகளும் உயர்மட்டத்தில் இருந்த சில பௌத்த மதகுருமார்களும் இணைந்து நாட்டை இந்த நிலைக்குக் கொண்டுவந்தனர்.


முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க பதவியிலிருந்து விலகிச் செல்லும்போது, நாட்டை ஒரு கேக் துண்டுடன் ஒப்பிட்டு, 'இது ஒரு கேக்; அனைவரும் இதைப் பகிர்ந்துகொள்ளுங்கள்' என்று கூறியிருந்தார். ஆனால், கடந்த காலங்களில் நாட்டின் வளங்களில் ஒரு பகுதியைக் கூட மக்களுக்குக் கிடைக்காத நிலை ஏற்பட்டது. இதன் விளைவாக நாடு பாரிய வீழ்ச்சியைச் சந்தித்தது.


தற்போது இளைஞர்கள் நாட்டின் ஆட்சிக் கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். அதலபாதாளத்துக்குச் சென்ற நாட்டை மீண்டும் முன்னேற்றப் பாதைக்குக் கொண்டுவரும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. 


எனவே, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட ஆட்சியாளர்கள் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும். அனைவருக்கும் சட்டம் சமமாக நடைமுறைப்படுத்தப்பட்டு, நாடு முன்னேற்றப் பாதையில் தொடர்ந்து பயணிக்கவேண்டும் என்பதே எமது கோரிக்கை என்றார்.








கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!