news@ilakkiyainfo.com

பிரிவுகள்

“அனைத்து வெடிகுண்டுகளின் தந்தை” - ஈரானின் மிகப் பெரிய ஆயுதம் தயாராகிறது! ; அமெரிக்காவுக்கு கடும் மிரட்டல்

23 Oct, 2026


அமெரிக்காவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் ஈரான் “அனைத்து வெடிகுண்டுகளின் தந்தை”  (father of all bombs) என வர்ணிக்கப்படும் ஒரு புதிய ஆயுதத்தை வெளியிடத் தயாராகி வருவதாக அதன் இஸ்லாமியப் புரட்சிகர காவல்படையின் (IRGC) ஊடகப் பேச்சாளர் ஹொசெய்ன் மொஹேபி தெரிவித்துள்ளார். 

“நாங்கள் ‘அனைத்து வெடிகுண்டுகளின் தந்தை’ என்ற ஆயுதத் தயாரிப்பு பணிகளை நிறைவு செய்யும் கட்டத்தில் இருக்கிறோம். இது எதிரிக்கு முற்றிலும் புதியது” என்று ஈரானின் யங் ஜர்னலிஸ்ட்ஸ் க்ளப் செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அண்மையில் ஈரானின் அணுசக்தி நிலையங்களை குறிவைக்க GBU-43/B பெரிய வெடிமருந்து காற்று வெடிப்பு வெடிகுண்டு (Massive Ordinance Air Blast Bomb - MOAB)  எனப்படும் “அனைத்து வெடிகுண்டுகளின் தாய்” எனப் பெயரிடப்பட்ட ஆயுதம் பயன்படுத்தப்படலாம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

தோராயமாக 9,800 கிலோகிராம் (21,600 பவுண்டுகள்) எடையுள்ள GBU-43/B, அமெரிக்க ஆயுதக் களஞ்சியத்தில் உள்ள மிகப் பெரிய வழக்கமான அணுசக்தியற்ற குண்டுகளில் ஒன்றாகும்.

இது முதன்முதலில் டிரம்பின் முதல் ஜனாதிபதி பதவிக்காலத்தில், ஏப்ரல் 2017இல், ஆப்கானிஸ்தானில் உள்ள ஐஎஸ்ஐஎஸ்  பயங்கரவாத அமைப்பின் சுரங்கப்பாதை வளாகத்துக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டது.


கடந்த ஜூன் மாதம் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நடைபெற்ற 12 நாள் போருக்குப் பிறகு, ஈரானின் ஏவுகணை கையிருப்பு 1.5 மடங்காக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

“ஏவுகணைகளின் தரம் கணிசமாக மேம்பட்டுள்ளது. மேலும் அவற்றின் வரம்பு, அழிவு சக்தி மற்றும் இலக்குகளைத் தாக்கும் துல்லியம் ஆகியவை அதிகரித்துள்ளன” என்றும் அவர் மேலும் கூறினார்.

இந்நிலையில், நிரந்தர மற்றும் முழுமையான தடுப்புமுறையை நோக்கி ஈரான் தனது பாதுகாப்புக் கொள்கையை மாற்றி வருவதாக IRGC ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

“முன்னதாக, ஈரானின் பாதுகாப்புக் கொள்கை முற்றிலும் தற்காப்பு சார்ந்ததாக இருந்தது. ஒரு நாடு நம்மைத் தாக்கினால் நாங்களும் பதிலடி கொடுப்போம் என்று நாங்கள் கூறி வந்தோம். ஆனால், இப்போது, ஒரு நாடு நம்மைத் தாக்கினால், நாங்கள் பதிலடி கொடுப்பதுடன் ஒரு தாக்குதலையும் தொடுப்போம் என்று கூறுகிறோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.

ஈரான் எந்தவொரு தாக்குதலுக்கும் அதேபோன்ற நடவடிக்கைகளுடன் பதிலளிக்கும் என்றும், நாட்டின் இராணுவக் கொள்கையானது சமச்சீரற்ற போரை அதிகளவில் நம்பியிருக்கும் என்றும் அவர்  குறிப்பிட்டார். 

“எங்களது கொள்கை இனி வெறுமனே தாக்குதல் சார்ந்ததாக இருக்காது; அது சமச்சீரற்றதாக இருக்கும். எதிரி எங்களது பதிலடியின் தீவிரத்தை உணரும் வகையில் நாங்கள் தாக்குதல் நடத்துவோம்” என்றார் அவர்.

இஸ்ரேலும் அமெரிக்காவும் கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி ஈரான் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கின. அதேவேளை ஈரான் இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீதான தாக்குதல்களுடன் பதிலளித்தது.

அமெரிக்காவும் ஈரானும் ஜூன் மாதத்தில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன, பின்னர் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கின. எனினும், ஹோர்முஸ் நீரிணையில் எரிசக்தி மற்றும் பொருட்கள் விநியோகத்திற்கான முக்கிய பாதை - சுதந்திரமான பயணம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான கருத்து வேறுபாடுகள் காரணமாக அந்தப் பேச்சுவார்த்தைகள் பின்னர் முறிவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!