news@ilakkiyainfo.com

பிரிவுகள்

அன்பிலுக்கு அடுத்து வேலு... ரூ.5,000 கோடி ஊழல்... அடுத்த ரெய்டு ரெடி!

19 Nov, 2026
கோவை பெரியார் அறிவுலக நூலகத்தில், புத்தகக் கொள்முதலில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக வழக்கு பதிவுசெய்திருக்கிறது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை. இந்த விவகாரத்தில் சிக்கி, அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் தலைமை நூலகர் உட்பட பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஐந்து பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கின்றனர். 

அகல்விளக்கு பதிப்பகத்தின் உரிமையாளர் மோகன் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். புத்தகக் கொள்முதல் ஊழல் வெடித்து ரணகளத்தை உருவாக்கிவரும் வேளையில், ‘`நெடுஞ்சாலைகளில் பேட்ச் வொர்க் பார்ப்பதாகச் சொல்லி, ஓராண்டில் மட்டுமே 2,200 கோடி ரூபாய் முறைகேடு செய்திருக்கிறார்கள்’’ என்று தி.மு.க-மீது அடுத்த குண்டை எறிந்திருக்கிறார் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா.

“தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத்தருவதாக மோசடி செய்த வழக்கில், முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் இருக்கிறார். 

அடுத்ததாக, பேட்ச் வொர்க் பிரச்னையைக் கையிலெடுத்து முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு ஸ்கெட்ச் போடுகிறது த.வெ.க அரசாங்கம். ‘பொதுப்பணித்துறையின் பராமரிப்பில் இயங்கும் அரசுப்பள்ளிகளில், 80 சதவிகிதம் அளவுக்கு பராமரிப்புப் பணியில் ஊழல் நடந்திருக்கிறது’ என்று அமைச்சர் ஆதவ் சுமத்தும் குற்றச்சாட்டுகளெல்லாம் ஈஸியாகக் கடந்து செல்லக்கூடியதல்ல...’’ என்கிறார்கள் சில சீனியர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்.


`என்னதான் விவகாரம்... அன்பிலுக்கு அடுத்ததாக வேலுவுக்குக் குறிவைக்கிறதா த.வெ.க..?’ விவரமறிய விசாரித்தோம்.
.
பள்ளங்களை நிரப்பியதில் முறைகேடு... வெடிவைத்த ஆதவ்!

சமீபத்தில் நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறைகளின் கடந்த ஆறு மாதச் செயல்பாடுகளை செய்தியாளர்களிடம் பட்டியலிட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ‘`நெடுஞ்சாலைத்துறை, பொதுப் பணித்துறைகளிலுள்ள பணியாளர்களை இடமாற்றம் செய்யவும், அவர்களுக்குப் பதவி உயர்வு வழங்கவும் கடந்த ஆட்சியில் 50 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் வாங்கப்பட்டது.

ஆனால், நாங்கள் எந்த லஞ்சமும் வாங்காமல் செயல்பட்டிருக்கிறோம். திருவான்மியூர் - உத்தண்டி உயர்மட்ட சாலைத் திட்டத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்திருக்கிறது. 

விரிவான திட்ட அறிக்கை தயாரிக்காமலேயே அந்த சாலைத் திட்டத்துக்கு டெண்டர் விடப்பட்டிருக்கிறது. இதேபோல, தமிழகமெங்கும் திட்ட அறிக்கை தயாரிக்காமல், பல நூறு கோடி ரூபாய்களுக்குப் பணிகளை முடித்திருப்பதால், அவை பல்வேறு சிக்கல்களைச் சந்தித்திருக்கின்றன.

தமிழகமெங்கும் 5,626 அரசுப் பள்ளிகளின் பராமரிப்பு பொதுப் பணித்துறையின்கீழ் வருகிறது. அந்தப் பள்ளிகளை ஆய்வுசெய்ததில், 80 சதவிகிதம் அளவுக்குப் பராமரிப்புப் பணியில் ஊழல் நடந்திருப்பதைக் கண்டறிந்திருக்கிறோம். 


பள்ளிகளிலுள்ள 15,601 கழிப்பறைகள் உபயோகப்படுத்த முடியாத அளவுக்கு மோசமாக இருக்கின்றன. அதையெல்லாம் சரிசெய்ய வேண்டும். 2025-ம் ஆண்டு மட்டும், `நெடுஞ்சாலைகளிலுள்ள பள்ளங்களை நிரப்பும் பணி’ எனக் கூறி, 2,200 கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்திருக்கிறது.

அது தொடர்பாக, லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகாரளித்துள்ளோம். அந்த முறைகேட்டில் ஈடுபட்ட யாரும் தப்பிவிட முடியாது...” என்று வெடித்தார்.

ஆதவ்வின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்திருக்கும் முன்னாள் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, “இந்தத் துறையைக் குறை சொல்வதையே வேலையாக வைத்திருக்கிறார் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா. பேட்ச் வொர்க் பார்த்ததில் தவறு இருந்தால் கண்டுபிடிங்க. உங்களை யார் தடுத்தது... 

அரசுப்பள்ளி கழிப்பறைகளைப் பராமரிக்கவே இல்லை என்று சொல்கிறார் ஆதவ். பள்ளிக்கல்வித்துறையிலிருந்து நிதி விடுவிக்கப்பட்டால்தான், பொதுப் பணித்துறையால் பராமரிக்க முடியும். இதுகூட அமைச்சர் ஆதவ்வுக்குத் தெரியவில்லை.

 21-ம் நூற்றாண்டின் உத்தமர் காந்தியைப்போல பேசுகிறார் ஆதவ்...’’ என்று பொரிந்தார்.

ஆதவ்வுக்கு விளக்கம் சொல்வதுபோல, “கழிவறை பராமரிப்புக்கு, கடந்த ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை நிதி ஒதுக்கவில்லை...” என அப்போதைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸை ஏன் எ.வ.வேலு சிக்கலில் ஆழ்த்துகிறார் எனப் பலருக்கும் புரியவில்லை. 

இந்தப் பரபரப்புக்கிடையே, பேட்ச் வொர்க்கில் நடந்த முறைகேடு குறித்து, பூர்வாங்க விசாரணையைத் தொடங்கியிருக்கிறது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை.
.
எப்படி நடந்தது முறைகேடு?

நம்மிடம் பேசிய ஓய்வுபெற்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சிலர், “தமிழகம் முழுவதும் பரந்து விரிந்திருக்கும் சுமார் 70,000 கி.மீட்டர் நெடுஞ்சாலைகளைத் தமிழக அரசு பராமரிக்கிறது. அவற்றில் ஏற்படும் சிறு சிறு பள்ளங்கள், விரிசல்களைச் சரிசெய்ய, ‘அவசரத் தேவை’ அடிப்படையில் மாவட்டப் பொறியாளரே ஒப்பந்தங்களை அளிக்கலாம். 10 லட்சம் ரூபாய்க்குக் கீழான பேட்ச் வொர்க் ஒப்பந்தங்களை அவரே கையெழுத்திட்டு வழங்க முடியுமென்பதால், கடந்த ஐந்தாண்டுகளில் இஷ்டத்துக்கு அளித்திருக்கிறார்கள்.

பெரிய கோயில் திருவிழாக்கள் வரும் சமயங்களில், கோயிலைச் சுற்றியிருக்கும் சாலைகளில் ‘பேட்ச் வொர்க்’ செய்யப்படுவது வழக்கம். 20 கோடி ரூபாய்க்கு மேல் வரும் அந்த வேலைகளைச் சிறு சிறு பகுதிகளாக உடைத்து, மாவட்டப் பொறியாளர் கையெழுத்திட்டே பணி ஆணைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. ஆனால், எந்த வேலையும் செய்யாமல் பணி முடிந்ததாகக் கணக்கு காட்டி பணத்தை எடுத்திருக்கின்றனர்.

இந்த முறைகேட்டில் அதிகாரிகளுக்கும், அப்போதிருந்த ஆட்சியாளர்களுக்கும் பங்கு பிரிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, சாலை அமைக்கப் பயன்படும் தாரின் தரத்தையும் குறைத்து, அதிலும் முறைகேடு செய்துள்ளனர். பேட்ச் வொர்க் செய்ததாக ஒப்பந்தப் பணி வழங்கியதில் மட்டுமே, கடந்த ஐந்தாண்டுகளில் 5,000 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் என்கிறார்கள்.

மழை, வெயில், போக்குவரத்து காரணங்களால், சம்பந்தப்பட்ட சாலைகளில் ‘பேட்ச் வொர்க்’ செய்யப்பட்டதா, இல்லையா என்பதை குவாலிட்டி டெஸ்ட்டில் கண்டறிவது சுலபமல்ல. ‘2022-2023 காலகட்டத்தில் பேட்ச் வொர்க் செய்யப்பட்டதை இப்போது எப்படி ஆய்வுசெய்ய முடியும்...

நம்மை யாராலும் கண்டுபிடிக்க முடியாது...’ என்று சந்தோஷத்தில் இருக்கிறார்கள் சில அதிகாரிகள். ஆனால், அந்த பேட்ச் வொர்க் பணியை எடுத்துச் செய்த ஒப்பந்ததாரர்களிடம், பேட்ச் வொர்க்குக்கான மூலப்பொருள்கள் எங்கேயிருந்து வாங்கப்பட்டன என்பதையும், அவற்றுக்கான பில்களை தேதிவாரியாகச் சமர்ப்பிக்கவும் சொன்னாலே போதும், வண்டவாளம் தெரிந்துவிடும். வேலை செய்திருந்தால்தானே மூலக்கூறுகளுக்கான பில்களைச் சமர்ப்பிக்க முடியும்..?” என்கிறார்கள்.
.
ஒரே நபர்... இரண்டு பதிப்பகங்கள்... கோடிக்கணக்கில் கொள்முதல்!

“நெடுஞ்சாலைத்துறையில் ‘பேட்ச் வொர்க்’ செய்ததில் 5,000 கோடி ரூபாய் ஊழல்...” என்ற தகவலே நம்மை ஆட்டம் காண வைக்கிறது. இந்த பேட்ச் வொர்க் விவகாரம் சூட்டைக் கிளப்பியிருக்கும் நிலையில், புத்தகக் கொள்முதல் விவகாரமும் அனலை அதிகரித்திருக்கிறது. 

அந்த விவகாரத்தில் பூர்வாங்க விசாரணையை முடித்து எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்திருக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை, அகல்விளக்கு பதிப்பகத்தின் உரிமையாளர் மோகனைக் கைதுசெய்திருக்கிறது.

நம்மிடம் பேசிய லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சிலர், “கோவை பெரியார் அறிவுலக நூலகத்துக்குப் புத்தகங்களை சப்ளை செய்திருக்கும் அகல்விளக்கு பதிப்பகம், பீனிக்ஸ் பப்ளிகேஷன்ஸ் நிறுவனங்களுக்கு ஒரே உரிமையாளர் மோகன் என்பவர்தான். அவருடைய முகவரியில்தான் பதிப்பகங்களும் அச்சகங்களும் இயங்குவதாகக் கணக்கு காட்டப்பட்டிருக்கிறது. 

அவரிடமிருந்து 1,857 புத்தகங்களுக்கான கொள்முதல் ஆணை, கடந்த பிப்ரவரி 13-ம் தேதி அளிக்கப்பட்டிருக்கிறது. இப்படி, புத்தகங்களை சப்ளை செய்வதற்காக கோடிக்கணக்கான ரூபாய் தொகையை மார்ச் மாதத்தில் விடுவித்திருக்கிறார்கள்.

இதில் எந்த அளவுக்கு முறைகேடு நடந்திருக்கிறது என்றால், ‘Deepfakes: The coming Infocalypse’ என்ற புத்தகத்தை மனிஷா சரவணன் என்பவர் பெயரில் நூலகங்களுக்கு சப்ளை செய்திருக்கிறது அகல்விளக்கு பதிப்பகம். அதே புத்தகத்தை ஒரு வார்த்தைகூட மாற்றாமல், சாருலதா விவேக் என்பவர் பெயரில் அச்சிட்டு சப்ளை செய்திருக்கிறது பீனிக்ஸ் பப்ளிகேஷன்ஸ். 

ஆனால், இந்தப் புத்தகம் நினா ஷிக் என்பவர் எழுதி 2020-லேயே வேறொரு பதிப்பகத்தில் வெளிவந்துவிட்டது. அதை அப்படியே காப்பியடித்து புதியதுபோல அச்சிட்டு சப்ளை செய்திருக்கிறார்கள்.
.

போலி ஆசிரியர்கள்... ChatGPT மூலம் புத்தகங்களா?

அகல்விளக்கு பதிப்பகத்தில் தாமரை முரளி என்பவர் எழுதிய 48 புத்தகங்களுக்கும், பீனிக்ஸ் பப்ளிகேஷன்ஸில் லட்சுமி மோகன் என்பவர் எழுதிய 48 புத்தகங்களுக்கும் கடந்த பிப்ரவரி 5-ம் தேதி ISBN அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. அதே நாளில், அந்தப் புத்தகங்களை கொள்முதல் செய்ய ஒப்புதல் வழங்கியிருக்கிறது உயர்மட்ட புத்தகத் தேர்வுக்குழு. ஒரே நாளில் நாளில் இதெல்லாம் எப்படி நடந்தன என்பது புரியவில்லை.


மொத்தம் 26,000 புத்தகங்களைக் கொள்முதல் செய்யப் பரிந்துரைத்திருக்கிறது பரிந்துரைக்குழு. அதிலிருந்துதான் நூலகங்களுக்குத் தேவையான புத்தகங்களைத் தேர்வுசெய்ய வேண்டும். 


ஆனால், அந்தக் குழு பரிந்துரைக்காத பதிப்பகங்களின் புத்தகங்களையும் ஒருங்கிணைப்புக்குழுவினர் கூடுதலாகச் சேர்த்திருக்கின்றனர். 


கூடுதலாகச் சேர்க்கப்பட்ட புத்தகங்கள் குறித்த விவரங்கள் சம்பந்தப்பட்ட நோட் ஃபைலில் பதிவு செய்யப்படவில்லை. ChatGPT மூலமாகச் செயற்கை நுண்ணறிவு மூலம் எழுதப்பட்ட புத்தகங்கள், போலி ஆசிரியர்கள் மூலமாகத் தீட்டப்பட்ட குப்பைகளை நூலகங்களில் கொட்டி, கொள்ளையடித்திருக்கிறது ஒரு கும்பல்.


இந்த முறைகேட்டில் கைது செய்யப்பட்டிருக்கும் மோகனைக் காவலில் எடுத்து விசாரிக்கும்போது பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும். ஏற்கெனவே ஐந்து அலுவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கும் நிலையில், மேலும் சில அதிகாரிகளும் சிக்குவார்கள். 


தமிழகமெங்கும் நூலகங்களிலுள்ள 75,000 நூல்கள் போலியானவை என்பதை அரசு கண்டறிந்து அவற்றை அப்புறப்படுத்தி வருவதால், இந்த முறைகேட்டுக்குப் பின்னாலுள்ள முதலைகளும் விரைவிலேயே சிக்கும்” என்றனர்.
.
அன்பிலுக்கு அடுத்து வேலு... அடுத்த ரெய்டு ரெடி?

நூலக புத்தகக் கொள்முதல் முறைகேடு விஸ்வரூபமெடுத்திருப்பதால், முந்தைய தி.மு.க ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஸ் பொய்யாமொழி அரண்டுதான் போயிருக்கிறார். 


பள்ளிகளுக்கான அங்கீகார வழக்கிலேயே ஜாமீன் கிடைக்காமல் சிறை கொசுக்கடியில் தவிப்பவர், அடுத்த வழக்கை எப்படி எதிர்கொள்வதென விக்கித்துப் போயிருக்கிறார். ஆனால், “ஸ்கெட்ச் அவருக்கு மட்டுமல்ல. எ.வ.வேலுவுக்கும் சேர்த்துத்தான்...’’ என்கின்றன கோட்டை வட்டாரங்கள்.



நம்மிடம் பேசிய சீனியர் அமைச்சர்கள் சிலர், “கடந்த ஐந்தாண்டுக்கால ஆட்சியில், நெடுஞ்சாலைத்துறையில் நடந்த அத்தனை முறைகேடுகளையும் கொட்டத் தொடங்கிவிட்டார்கள் துறையிலுள்ள பொறியாளர்கள். அப்படிச் சிக்கியதுதான் ‘பேட்ச் வொர்க்’ முறைகேடு. அதற்கான ஆதாரங்கள் திரட்டப்பட்டு லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. 


அன்பிலுக்கு அடுத்ததாக வேலுவுக்குக் குறிவைத்துவிட்டார் முதல்வர் விஜய். விரைவிலேயே வேலுவின் இடங்களில் ரெய்டு அஸ்திரம் பாய்ச்சப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை” என்றனர்.


புத்தகக் கொள்முதல் முதல் பேட்ச் வொர்க் வரை மக்கள் வரிப்பணத்தில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகளின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கின்றன. `அன்பில் மகேஸைத் தொடர்ந்து எ.வ.வேலுவின் பெயரும் விசாரணை வளையத்துக்குள் வருமா?’ என்ற கேள்வி வலுக்கிறது.


 ஊழலின் கணக்கைத் தணிக்கை செய்யத் தொடங்கியிருக்கும் விஜய் அரசு, அந்தக் கணக்கில் யாரையெல்லாம் சேர்க்கப்போகிறது என்பதே பலரின் பி.பி-யையும் இப்போது எகிறவைத்திருக்கிறது. 

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!