news@ilakkiyainfo.com

பிரிவுகள்

அபுதாபியிலிருந்து நாடுகடத்தப்பட்ட இரு முக்கிய குற்றவாளிகள் கட்டுநாயக்கவில் கைது!

03 Sep, 2026
போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோத ஆயுதப் பயன்பாடு மற்றும் திட்டமிடப்பட்ட குற்றச்செயல்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த முக்கிய சந்தேகநபர்கள் இருவர், அபுதாபியிலிருந்து நாடுகடத்தப்பட்டு இன்று வியாழக்கிழமை (03)  கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது ஈரான் நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குகளின் காணொளிகளைத் தமது கைத்தொலைபேசிகளில் சேமித்து வைத்திருந்த குற்றத்திற்காக அந்நாட்டின் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டிருந்த நிலையிலேயே, இவர்கள் இருவரும் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில்  அசோகபுர, துன்கன்னாவ பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய திஸாநாயக்க முதியன்சேலாகே பந்துல திஸாநாயக்க போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர் ஆவார்.

கொழும்பு, பொரளை பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய சியம்பலாடூவ பத்திரணலாகே ஹர்ஷ குமார 'பரேவி சுதா'வின் நெருங்கிய சகா என்பதுடன், பூஸ்ஸ சிறைச்சாலையில் கலவரத்தில் ஈடுபட்ட சம்பவத்துடனும் தொடர்புடையவராவார்.

நேற்று புதன்கிழமை காலை 10.15 மணியளவில் அபுதாபியிலிருந்து எட்டிஹாட் ஏர்வேஸ் (EY-392) விமானம் மூலம் இவர்கள் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விமான நிலையத்தில் வைத்துச் குற்றப் புலனாய்வுத் திணைக்கள  அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, மேலதிக விசாரணைகளுக்காகப் பந்துல திஸாநாயக்க கொழும்பு பயங்கரவாத புலனாய்வுப் பிரிவிடமும் , ஹர்ஷ குமார கொழும்பு தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவிடமும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 



கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!