அமெரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் இடைத்தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மூவர் வெற்றி பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ள இந்திய வம்சாவளியான சுஹாஸ் சுப்ரமணியம், அமெரிக்காவில் வெறுப்பு மிகுந்த செயற்பாடுகளும் பாகுபாடுகளும் அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டி, இந்திய அமெரிக்கர்களும் இடைக்கால தேர்தல்களில் பங்குபற்றவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இந்த இடைக்காலத் தேர்தலில் 63.16 சதவீதத்துடன் 1,73,106 வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டிய சுப்ரமணியம், விர்ஜீனியா மாகாணத்தின் 10வது நாடாளுமன்றத் தொகுதியை (செனட்) பிரதிநிதித்துவப்படுத்தும் முதல் இந்திய - அமெரிக்கர் என்கிற தகுதியைப் பெறுகிறார்.
அத்துடன் ஜனநாயகக் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்ட பியா தாண்டியா, அருணா மில்லர் ஆகிய மேலும் இரு இந்திய வம்சாவளிகள் வெற்றி பெற்றுள்ளனர்.
பியா தாண்டியா என்பவர் புளோரிடாவின் 22வது நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு, குடியரசுக் கட்சி வேட்பாளரான கேசி அஸ்கரை தோற்கடித்து, 51.9 சதவீத வாக்குகளைப் பெற்று வென்றுள்ளார். அந்த வகையில் இவர் புளோரிடாவிலிருந்து அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய - அமெரிக்கர் ஆவார்.
மேரிலாந்து துணை ஆளுநரான அருணா மில்லரும் இத்தேர்தலில் வெற்றி பெற்று, தனது துணை ஆளுநர் பதவியை தக்கவைத்துக்கொண்டுள்ளார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!