அமெரிக்கா: நாய்களுக்கான கூண்டுக்குள் புதைக்கப்பட்ட குழந்தை 24 மணி நேரத்திற்குப் பிறகு உயிருடன் மீட்பு!
அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாநிலத்தில், காணாமல் போன 11 மாதக் குழந்தையைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த மீட்புக் குழுவினர், காட்டுப் பகுதியில் நிலத்தடியில் இருந்து குழந்தையின் அழுகுரலைக் கேட்டு அதிர்ச்சியடைந்தனர்.
சுமார் 100 மீட்புப் பணியாளர்கள் இணைந்து நடத்திய தேடுதல் நடவடிக்கையின் முடிவில், செவ்வாய்க்கிழமை பிற்பகல் உள்ளூர் நேரப்படி, தரைக்கு அருகில் புதைக்கப்பட்டிருந்த நாய்களுக்கான போக்குவரத்துக் கூண்டுக்குள் குழந்தை உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தத் தகவலை லெக்சிங்டன் மாவட்ட ஷெரிப் ஜே கோன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
சிவப்பு நிற முடியுடன், வாயில் பாசிஃபையர் (குழந்தைகள் உறிஞ்சும் ரப்பர்) வைத்திருந்த அந்தச் சிறுவன் உயிருடன் போராடி வெற்றி பெற்றதாக ஷெரிப் தெரிவித்தார்.
அந்தக் குழந்தை சுமார் 24 மணி நேரம் மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருந்ததாகக் கருதப்படுகிறது. கூண்டு ஒரு துண்டால் சுற்றப்பட்டிருந்ததாகவும், இதனால் உள்ளே காற்று தங்குவதற்கான சிறிய இடைவெளி (காற்றுப் பை) உருவாகி குழந்தை உயிர் பிழைத்திருக்கலாம் என்றும் ஷெரிப் கூறினார்.
குழந்தை மீட்கப்பட்டபோது, அது மிகுந்த சத்தத்துடன் அழுததாகவும், “ஒரு குழந்தை அழுவதில் இதுவரை கேட்டிராத மிக மகிழ்ச்சியான அழுகுரலாக அது இருந்திருக்கலாம்” என்றும் ஷெரிப் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
விசாரணை
அதிகாரிகளின் தகவலின்படி, திங்கள்கிழமை காலை அந்தக் குழந்தை தனது பாட்டியின் வீட்டில் இருந்துள்ளது.
குழந்தையின் தந்தை அங்கு வந்தபோது, பாட்டி சிறிது நேரம் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அதே நேரத்தில், குழந்தையைப் பார்த்துக்கொள்ள நியமிக்கப்பட்டிருந்த மற்றொரு நபரும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.
அந்த நபர் வீட்டிற்கு வந்தபோது, தந்தையும் குழந்தையும் காணாமல் போயிருந்தனர்.
திங்கள்கிழமை இரவு குழந்தையின் தந்தை கைது செய்யப்பட்டார். ஆனால், அப்போது குழந்தை எங்கு இருக்கிறது என்பது குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
இந்தச் சம்பவம் தொடர்பாக உள்ளூர் அரசு வழக்கறிஞர் அலுவலகத்துடன் இணைந்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மீட்கப்பட்ட சிறுவன் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக ஷெரிப் ஜே கோன் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில்:
“அந்தச் சிறுவன் வளர்ந்த பிறகு இந்தச் சம்பவம் குறித்த அதிகமான நினைவுகள் அவனுக்கு இருக்காது என்று நம்புகிறோம். ஆனால், அவனுக்கு வாழ்க்கையில் நடந்த ஒரு வியப்பூட்டும், நம்பிக்கையூட்டும் கதையாக இது இருக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!