news@ilakkiyainfo.com

பிரிவுகள்

அமெரிக்காவின் போர்களும் அதன் உலகளாவிய செலவும்

08 Sep, 2026
2001 செப்டம்பர் 11 தாக்குதல்களுக்குப் பின்னர் அமெரிக்கா தொடங்கிய பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போர் இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக உலக அரசியலை ஆழமாக மாற்றியமைத்துள்ளது. 

ஆப்கானிஸ்தான், ஈராக், பாகிஸ்தான், சிரியா, யெமன், சோமாலியா, லிபியா, ஈரான் உள்ளிட்ட பல நாடுகளில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகள் நேரடியாகவோ அல்லது கூட்டணி நாடுகள் மற்றும் உள்ளூர் ஆயுதக் குழுக்களுக்கு ஆதரவாகவோ நடைபெற்றுள்ளன. 

இந்தப் போர்களின் உண்மையான செலவைக் கணக்கிடுவது எளிதானதல்ல. அண்மைய ஆய்வுத் திட்டத்தின் சமீபத்திய மதிப்பீடுகள், 2001க்குப் பின்னரான அமெரிக்கப் போர்களுக்கான மொத்தச் செலவு சுமார் 8 டிரில்லியன் அமெரிக்க டொலர் எனக் குறிப்பிடுகின்றன. 

அதே ஆய்வுகள், நேரடி மற்றும் மறைமுக விளைவுகளைச் சேர்த்து குறைந்தது 4.5–4.7 மில்லியன் மக்கள் உயிரிழந்திருக்கலாம் என மதிப்பிடுகின்றன. இவை துல்லியமான எண்ணிக்கைகள் அல்ல. போர்ப் பகுதிகளில் மரணங்களை முழுமையாகப் பதிவு செய்வது மிகவும் கடினம் என்பதால், உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கக்கூடும்.

செப் 11 பின் தொடங்கிய போர்:


2001 செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்கா முதலில் ஆப்கானிஸ்தானில் தலையிட்டது. அல்- காயிதா மற்றும் அதனை பாதுகாத்த தாலிபான் ஆட்சியை அகற்றுவது அதன் முக்கிய நோக்கமாக இருந்தது. 

ஆனால் இந்தப் போர் சில ஆண்டுகளில் முடிவடையாமல் இருபது ஆண்டுகளுக்கு நீண்டது. 

2003ஆம் ஆண்டு ஈராக் மீது அமெரிக்கா தலைமையிலான படையெடுப்பு நடைபெற்றது. பின்னர் பேரழிவு ஆயுதங்கள் தொடர்பான அமெரிக்காவின் முக்கிய வாதங்கள் பெரும் சர்ச்சைக்குள்ளானது. 

ஈராக் போர் நாட்டின் அரசியல் அமைப்பை மட்டுமல்லாமல், அதன் சமூக மற்றும் மத அடிப்படையிலான அதிகாரச் சமநிலையையும் கடுமையாக பாதித்தது. அதன் பின்னர் சிரியா, யெமன் நாடுகளிலும் அமெரிக்காவின் வான்வழித் தாக்குதல்கள், ட்ரோன் நடவடிக்கைகள், சிறப்புப் படை நடவடிக்கைகள் மற்றும் உள்ளூர் கூட்டணிகளுக்கான ஆதரவு போன்றவை விரிவடைந்தன. 

பிறவுண் பல்கலைக் கழக (Brown University) ஆய்வுகளின்படி, 2021–2023 காலகட்டத்திலேயே அமெரிக்க அரசு 78 நாடுகளில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தது. 

போரின் பொருளாதாரச் செலவு வெறும் குண்டுகள், விமானங்கள், தாங்கிகள் மற்றும் இராணுவ வீரர்களின் சம்பளம் ஆகியவற்றுடன் முடிவடைவதில்லை. 

இந்த பல்கலைக் கழக மதிப்பீட்டின்படி, 2001 முதல் 2022 வரையிலான காலத்தில் 9/11க்குப் பின்னரான போர்களுக்காக அமெரிக்கா சுமார் 8 டிரில்லியன் டொலர் செலவிட்டுள்ளது. 

இதில் நேரடி இராணுவச் செலவுகள் மட்டுமல்லாமல், உள்நாட்டு பாதுகாப்பு, போர்க் கடன்களுக்கான வட்டி மற்றும் முன்னாள் இராணுவ வீரர்களுக்கான நீண்டகால மருத்துவ மற்றும் பிற நலச் செலவுகளும் அடங்குகின்றன. 

இந்த அளவிலான பணத்தை மாற்றுப் பயன்பாட்டில் செலவிட்டிருந்தால், அமெரிக்காவின் சுகாதாரம், கல்வி, வீடமைப்பு, போக்குவரத்து, பாலங்கள், நீர்வழங்கல் மற்றும் பிற உட்கட்டமைப்புகளில் மிகப்பெரிய முதலீடுகளைச் செய்ய முடிந்திருக்கும் என்ற கேள்வி எழுகிறது. அதாவது, போரின் பொருளாதாரச் செலவு வெளிநாடுகளில் மட்டுமல்ல; அமெரிக்க சமூகத்திற்குள்ளும் அதன் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

போரின் இன்னொரு முகம் அமெரிக்க இராணுவ வீரர்களின் வாழ்க்கையில் காணப்படுகிறது. ஆயிரக்கணக்கான அமெரிக்க இராணுவத்தினர் போரில் உயிரிழந்துள்ளனர்.

 அதைவிடப் பலர் உடற் காயங்கள், மூளை அதிர்ச்சி, மன அழுத்தம், (PTSD) நீண்டகால பிரச்சினைகளுடன் நாடு திரும்பியுள்ளனர். அத்துடன் 9/11 போர்களில் பணியாற்றிய முன்னாள் இராணுவத்தினரிடையே தற்கொலை மரணங்கள் மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பதை சுட்டிக்காட்டுகின்றன. 

அந்தத் திட்டத்தின் மதிப்பீட்டின்படி, போரில் உயிரிழந்தவர்களை விடக் குறைந்தது நான்கு மடங்கு பேர் தற்கொலையால் உயிரிழந்துள்ளனர். 

மேலும், இந்தப் போர்களின் முன்னாள் வீரர்களுக்கான எதிர்கால பராமரிப்புச் செலவு 2050ஆம் ஆண்டுக்குள் 2.2–2.5 டிரில்லியன் டொலர் வரை செல்லலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. 


இதனால் போர் முடிந்துவிட்டது என்பது உண்மையில் முழுமையான கூற்று அல்ல. வீரர் வீட்டிற்குத் திரும்பிய பின்னரும் போரின் தாக்கம் தொடர்கிறது. 

அத்துடன் 4.5 மில்லியனுக்கும் அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. போரின் மிகக் கொடூரமான விளைவு உயிரிழப்புகளாகும். தற்போதைய ஆய்வுத்தரவின்படி, 2001–2023 காலகட்டத்தில் ஈராக், ஆப்கானிஸ்தான், சிரியா, யெமன் மற்றும் பாகிஸ்தான் போன்ற முக்கிய போர்களில் 940,000க்கும் மேற்பட்டோர் நேரடி போர் வன்முறையால் உயிரிழந்துள்ளனர். 

இதில் 432,000க்கும் அதிகமானோர் பொதுமக்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இவை குண்டுவீச்சு, துப்பாக்கிச் சூடு, விமானத் தாக்குதல் போன்ற நேரடிக் காரணங்களால் ஏற்பட்ட மரணங்கள் மட்டுமே.

போர் அழித்த மருத்துவமனைகள், குடிநீர் அமைப்புகள், கழிவுநீர்க் கட்டமைப்புகள், உணவு விநியோகம் மற்றும் வேலைவாய்ப்புகள் காரணமாக ஏற்படும் நோய், ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் சிகிச்சையின்மை ஆகியவற்றின் விளைவாக மேலும் 3.6–3.8 மில்லியன் மறைமுக மரணங்கள் ஏற்பட்டிருக்கலாம் என ஆய்வுகள் மதிப்பிடுகின்றன. 

இதனால் மொத்த மரண எண்ணிக்கை குறைந்தது 4.5–4.7 மில்லியன் என மதிப்பிடப்படுகிறது. இங்கு மிக முக்கியமான உண்மை என்னவென்றால், போரில் குண்டு தாக்கி இறப்பவர்கள் மட்டுமே போரின் பலிகள் அல்ல. 

ஒரு குழந்தை மருத்துவமனை இல்லாததால் சிகிச்சையின்றி இறந்தாலும், குடிநீர் மாசுபாட்டால் நோயுற்று இறந்தாலும், போர் அந்த மரணத்தின் பின்னணியில் ஒரு முக்கிய காரணியாக இருக்கலாம். 


38 மில்லியன் மக்கள் வீட்டை இழந்தனர்: போர் என்பது உயிரிழப்பை மட்டும் ஏற்படுத்துவதில்லை. மக்களை அவர்களின் சொந்த மண்ணிலிருந்து வெளியேற்றுகிறது.
 

2001க்குப் பின்னரான அமெரிக்கப் போர்களுடன் தொடர்புடைய மோதல்களால் ஆப்கானிஸ்தான், ஈராக், பாகிஸ்தான், சிரியா, யெமன், சோமாலியா, லிபியா மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் 38 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். 

இவர்கள் அனைவரும் வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள் அல்ல. பலர் தங்கள் சொந்த நாட்டுக்குள்ளேயே இடம்பெயர்ந்துள்ளனர். வீடு, வேலை, கல்வி, குடும்ப உறவுகள் மற்றும் சமூக பாதுகாப்பு ஆகிய அனைத்தும் சிதைந்த நிலையில் அவர்கள் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது. 

போர் மருத்துவமனைகளை அழிக்கிறது; மருத்துவர்களை நாட்டை விட்டு வெளியேறச் செய்கிறது; மருந்து விநியோகத்தைத் தடை செய்கிறது; குடிநீர் மற்றும் கழிவுநீர் அமைப்புகளை சேதப்படுத்துகிறது. 

இதனால் போர் முடிந்த பிறகும் தொற்றுநோய்கள், ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் குழந்தை மரணங்கள் அதிகரிக்கக்கூடும். போர் அழித்த பொருளாதாரம், பொதுச் சேவைகள், சுகாதார அமைப்புகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றின் தாக்கம் குண்டுவீச்சு முடிந்த பின்னரும் நீண்ட காலம் தொடர்கிறது என்று வலியுறுத்துகின்றன.

 மக்கள் சுதந்திரத்தின் மீதான தாக்கம் 9/11க்குப் பின்னர் ஏற்பட்ட மாற்றங்கள் வெளிநாடுகளுக்குள் மட்டுமல்ல; அமெரிக்காவிற்குள்ளும் நிகழ்ந்தன. தேசப்பற்று (Patriot Act) போன்ற சட்டங்கள் அரசின் கண்காணிப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு அதிகாரங்களை விரிவுபடுத்தின. தேசிய பாதுகாப்புக்கும் தனிநபர் தனியுரிமைக்கும் இடையிலான சமநிலை குறித்து அமெரிக்காவில் நீண்டகால விவாதம் உருவானது.

போர்களுடன் குடிமக்கள் சுதந்திரங்கள் மற்றும் மனித உரிமைகள் தொடர்புபடுவதாகக் குறிப்பிடப்படுகின்றது. போர் முடிந்த பின்னரும் அதன் சுற்றுச்சூழல் தடங்கள் தொடர்கின்றன. வெடிகுண்டுகள், ஏவுகணைகள், கனரக உலோகங்கள், எரிபொருள் எரிப்பு மற்றும் இராணுவக் கழிவுகள் மண், நீர் மற்றும் காற்றை பாதிக்கலாம். சில பகுதிகளில் குண்டுவீச்சுக்குப் பின்னர் மக்கள் தங்கள் பழைய வீடுகளுக்குத் திரும்பும்போது கனரக உலோகங்களின் வெளிப்பாட்டால் உடல்நல அபாயங்கள் ஏற்படக்கூடும் என ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

ஐங்கரன் விக்கினேஸ்வரா

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!