ஹோர்முஸ் நீரிணையை திறந்து போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஈரானின் பரிந்துரையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிராகரித்த நிலையில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான மோதலை இராஜதந்திர முறையில் மாத்திரமே தீர்க்க முடியும் என்று ஈரான் வலியுறுத்தியுள்ளது.
‘எங்களது நிபந்தனைகள் தெளிவானவை. இந்த நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்,’ என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார். ‘இந்த முட்டுக்கட்டையிலிருந்து வெளியேறுவதற்கு பேச்சுவார்த்தை மூலம் எட்டப்படும் தீர்வே ஒரே வழியாகும்’ என்று அவர் குறிப்பிட்டார்.
ஈரான் கடந்த வாரம் நியூயோர்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் சமாதான முன்மொழிவு ஒன்றை வெளியிட்டது. இந்த முன்மொழிவு கட்டார் மத்தியஸ்தர்கள் மூலம் அமெரிக்காவிடம் அனுப்பப்பட்டதாக ஈரான் தெரிவித்தது.
கடந்த சனிக்கிழமையன்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அந்தத் திட்டத்தை நிராகரித்ததாகக் கூறினார். மேலும், முக்கியமான இந்த நீர்வழிப் பாதையான ஹோர்முஸ் நீரிணை தொடர்பாக உடன்பாட்டை எட்டுவதற்கு ஈரான் அவசரமாக முயற்சிப்பதற்கு அதன் நெருக்கடியான நிலைமையே காரணம் என்றும் அவர் கூறினார்.
‘அவர்கள் ஹோர்முஸ் நீரிணையை உடனடியாகத் திறப்பதற்கான ஓர் ஒப்பந்தத்தைச் செய்துகொள்ள விரும்புகிறார்கள். ஏனெனில் அவர்கள் மிகவும் மோசமாகப் பின்னடைந்து வருகின்றனர்,’ என்று டிரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
டிரம்ப் பகிரங்கமாக வெளியிட்ட கருத்துகளுக்கு மாறாக, அமெரிக்காவுடன் ஈரான் நடத்தும் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியஸ்தர்களாகச் செயல்பட்டு வரும் தரப்புகள், இந்த முன்மொழிவை அமெரிக்கா நிராகரித்துள்ளதாக இதுவரை அதிகாரபூர்வமாகத் தமக்குத் தெரிவிக்கவில்லை என்று அராக்சி தெரிவித்தார்.மத்தியஸ்தர்கள் எங்களுக்கு இறுதியான நிலைப்பாட்டைத் தெரிவிப்பதற்காக நாங்கள் காத்திருக்கிறோம். அவர்கள் தெரிவிக்கும் தகவல்களின் அடிப்படையில் நாங்கள் முடிவெடுப்போம்’ என்று அராக்சி பதிவிட்டுள்ளார்.
ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீது ஈரான் நடத்தும் தாக்குதல்களை நிறுத்துமாறு அந்த நாட்டுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக, அமெரிக்கா ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இதன் விளைவாக, அந்தப் பகுதி வழியாக நடைபெறும் கப்பல் போக்குவரத்து பெருமளவில் குறைந்துள்ளது. அதேவேளை, அந்த நீர்வழிப் பாதை அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருப்பதாக டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
ஈரானின் முன்மொழிவை டிரம்ப் நிராகரித்ததாக ‘வோல் ஸ்ட்ரீட் ஜர்னல்’ பத்திரிகை முதலில் செய்தி வெளியிட்டது. பெயர் குறிப்பிடப்படாத அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டியே அந்தச் செய்தி வெளியிடப்பட்டது.
டிரம்ப், ஈரான் தனது கோரிக்கைகளை நிறைவேற்றும் என்பதில் தனிப்பட்ட முறையில் சந்தேகம் கொண்டிருப்பதாகவும், நவம்பர் மாத அமெரிக்க இடைக்காலத் தேர்தல்களுக்குப் பின்னர் மீண்டும் குண்டுவீச்சு நடவடிக்கையை மேற்கொள்வதற்கு சாத்தியமுள்ளதாகத் தனது பணியாளர்களிடம் தெரிவித்திருப்பதாகவும் அந்தச் செய்தி கூறியது.இதேவேளை, மத்தியஸ்தர்கள் மூலம் ஈரானுடன் நடத்தப்பட்டுவரும் பேச்சுவார்த்தைகள் ‘நேர்மறையாகவும் ஆக்கபூர்வமாகவும்’ இருப்பதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் முன்னதாகத் தெரிவித்திருந்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை ஐக்கிய நாடுகள் சபையில் செய்தியாளர்களிடம் பேசிய அராக்சி, முன்மொழியப்பட்டுள்ள ஒப்பந்தம், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கும் பிராந்தியத்தில் நடைபெறும் மோதல்களை இடைநிறுத்துவதற்கும் ஏழு நாள் காலக்கெடுவை ஆரம்பிப்பதற்கு வழிவகுக்கும் என்று தெரிவித்தார். ‘ஓர் உடன்பாட்டை எட்டுவதற்கும் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கும் அமெரிக்கத் தரப்பில் உண்மையான ஆர்வம் இருந்தால், அதற்கான அனைத்தும் இப்போது தயாராக உள்ளன,’ என்று அராக்சி கூறினார்.
அமெரிக்கா இதற்கு ஒப்புக்கொண்டால், மோதலில் ஈடுபட்டுள்ள தரப்புகள் ‘இருதரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் விடயங்கள் குறித்து’ விரிவான பேச்சுவார்த்தைகளைத் ஆரம்பிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட இராஜதந்திர முயற்சிகள், கடந்த பெப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுடன் ஆரம்பித்த போருக்கு முடிவுகாணத் தவறிவிட்டன.
அதன் பின்னர், போர் அவ்வப்போது இடைநிறுத்தப்பட்டும் மீண்டும் தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து வருகிறது. இதில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!