இலங்கையில் ஜே.வி.பி. கட்சி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. இந்த இரண்டாண்டு நிறைவைக் கொண்டாட ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க புதிய பொய்களுடன் நாடு முழுவதும் சுற்றி வருகிறார்.
அரசியலமைப்பு ரீதியாக அரசாங்கம் பலமாக இருக்கிறது. ஜே.வி.பி. கட்சியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருக்கிறார். அவரது தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு (159 உறுப்பினர்கள்) பெரும்பான்மை இருக்கிறது.
அரசாங்கம் நினைத்தால் இந்த அசுர பலத்தை வைத்துக்கொண்டு பல விடயங்களை நிறைவேற்றி இருக்கலாம். அதாவது, அவர்கள் தேர்தல் நேரத்தில் அடிக்கடி கூறி வந்தது போல, ‘அமைப்பு மாற்றம்’ (System Change) செய்திருக்கலாம். அது முடியாவிட்டால், குறைந்தபட்சம் தேர்தல் நேரத்தில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளில் சிலவற்றையாவது நிறைவேற்றி இருக்கலாம். ஆனால், அவர்கள் இவற்றில் எதையும் செய்யவில்லை.
பின்வரும் வாக்குறுதிகள் உட்பட ஏராளமானவற்றை தேசிய மக்கள் சக்தி நாட்டு மக்களுக்கு வழங்கியது:
விலைவாசியைக் கட்டுப்படுத்துவது.
வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிப்பது.
புதிய அரசியல் அமைப்பொன்றை நிறைவேற்றுவது.
மாகாண சபைத் தேர்தல்களை விரைந்து நடத்துவது.
பயங்கரவாதச் சட்டத்தை நீக்குவது.
தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம், காணி மற்றும் வீட்டுப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பது.
இலங்கையின் வெளியுறவுக் கொள்கையின் அச்சாணியாக அணிசேராக் கொள்கையை உறுதியுடன் தொடர்வது.இப்படி இன்னும் பல வாக்குறுதிகள் தேர்தல் காலத்தில் மக்களுக்கு தேசிய மக்கள் சக்தியால் வழங்கப்பட்டது. அவை எல்லாவற்றையும் நிறைவேற்ற முடியாவிட்டாலும், மேலே குறிப்பிட்ட முக்கியமான விடயங்களையாவது அரசாங்கம் நிறைவேற்ற முயன்றதா என்றால் அதுவும் இல்லை.
மேலே குறிப்பிட்ட விடயங்களில் அரசாங்கத்தின் அணுகுமுறை எவ்வாறு இருந்ததென்பதை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
விலைவாசியைக் குறைப்பதற்குப் பதிலாக அரசாங்கம் எதிர்மறையாகவே செயல்பட்டு வருகிறது. சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனைப்படி அரசாங்கம் செயல்படுவதால், விலைவாசி கட்டுக்கடங்காமல் எகிறிச் செல்வதுடன், மக்களுக்கு வரிக்கு மேல் வரி விதிக்கும் நிலைமையும் அதிகரித்துச் செல்கிறது. இதனால் மக்கள் தமது அன்றாட வாழ்க்கையைக் கொண்டு நடத்த முடியாமல் பெரும் அவதிப்படுகிறார்கள்.
வேலையில்லாத் திண்டாட்டத்தைப் பொறுத்தவரை, இந்த அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் எந்தவிதமான புதிய வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படவில்லை. அதற்குக் காரணம், அரசாங்கம் புதிய அபிவிருத்தி முயற்சிகள் எதையும் தொடங்காததுடன், முன்னைய அரசாங்கங்களினால் தொடங்கப்பட்ட திட்டங்களையும் நிறுத்தி வைத்துள்ளது.
புதிய அரசியல் அமைப்பொன்றை உருவாக்கி நாட்டு மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பது என்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் கால வாக்குறுதி காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது.
1970இல் பதவிக்கு வந்த திருமதி சிறீமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான அரசாங்கம், இரண்டு வருடங்களில், அதாவது 1972இல் புதிய குடியரசு அரசியல் அமைப்பை நிறைவேற்றியது. அதேபோல, 1977இல் பதவிக்கு வந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான அரசாங்கம், ஒரு வருடத்தில், அதாவது 1978இல் புதிய அரசியல் அமைப்பொன்றை நிறைவேற்றியது. ஆனால், தற்போதைய அரசாங்கம் பதவி ஏற்று இரண்டு வருடங்கள் ஆகியும் புதிய அரசியல் அமைப்புக்கான ஆரம்ப முயற்சிகளைக் கூடத் தொடங்கவில்லை.
மாகாண சபைத் தேர்தல்களை விரைந்து நடத்துவது என்ற வாக்குறுதியும் கேள்விக்கு உள்ளாகியுள்ளது. அரசாங்கம் மாகாண சபைத் தேர்தல்களை நடத்தாது இழுத்தடிப்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, தென்னிலங்கையில் அண்மையில் நடைபெற்ற கூட்டுறவுச் சங்கத் தேர்தல்கள் அனைத்திலும் அரசாங்கம் பாரதூரமான தோல்வியைத் தழுவியதால், மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் அதிலும் மண்கவ்வ வேண்டி வரும் என அரசாங்கம் பயப்பிடுகிறது. இரண்டாவது காரணம், மாகாண சபைகள் ஓரளவு சிறுபான்மையின மக்களுக்கு அதிகாரப் பகிர்வை வழங்குவதால், அதிகாரப் பகிர்வை எப்பொழுதும் எதிர்த்து வரும் ஜே.வி.பி.க்கு அதை நடத்துவதில் விருப்பம் இல்லை.
அடுத்ததாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை எடுத்துப் பார்ப்போம். இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்த அரசாங்கமும் சரி, அதன் பின்னர் பதவிக்கு வந்த அரசாங்கங்களும் சரி, அந்தச் சட்டத்தை சாதாரண மக்களுக்கு எதிராகவே, குறிப்பாக, சிறுபான்மை இனங்களுக்கு எதிராகவே பயன்படுத்தி வந்துள்ளன. இந்தச் சட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களில் ஜே.வி.பி. இயக்கமும் அடங்கும்.
அதனால்தான் தாம் ஆட்சிக்கு வந்தால் பயங்கரவாதச் சட்டத்தை உடனடியாக நீக்குவதாக ஜே.வி.பி. கூறி வந்தது. இதோ அவர்கள் ஆட்சிக்கு வந்து விட்டார்கள். அந்தச் சட்டத்தை நீக்கினார்களா? இல்லவே இல்லை. அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? தற்போதுள்ள சட்டத்தை நீக்கிவிட்டு, இதைவிட மிகவும் மோசமான ஒரு சட்டத்தைக் கொண்டுவரப் போகிறார்கள். அப்படியான ஒரு சட்டம் கொண்டு வருவதற்கான காரணமாக, ‘பயங்கரவாதிகளிடமிருந்து அரசைப் பாதுகாக்கவே சட்டம்’ எனக் காரணம் கூறுகிறார்கள்.
அப்படிப் பார்த்தால், கடந்த காலங்களில் இவர்களும் அரசுகளைக் கவிழ்க்க பலாத்கார முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்கள். அதன்படி, இவர்களுக்கு (பயங்கரவாதிகளுக்கு) எதிராக முன்னைய அரசுகள் பயங்கரவாதச் சட்டத்தை நடைமுறையில் வைத்திருந்தது சரி என்று ஆகிறது அல்லவா?
தமிழ் பேசும் மக்களின் (முஸ்லிம் மக்கள் உட்பட) தேசிய இனப் பிரச்சினையைப் பொறுத்தவரை, ஜே.வி.பி. இயக்கம் அது உருவான 1965 முதல் சிங்களப் பேரினவாத சிந்தனை அடிப்படையிலேயே செயல்பட்டு வந்துள்ளது. அவர்களது இந்தக் கொள்கையை 1987இல் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாக மாகாண சபைகள் அமைப்பு கொண்டுவரப்பட்ட போது அவர்கள் எதிர்த்ததின் மூலமும், 2000ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி சந்திரிக கொண்டுவந்த தீர்வுத் திட்டத்தை எதிர்த்ததின் மூலமும் வெளிப்படுத்தினார்கள்.
தேசிய இனப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காண்பதை ஜே.வி.பி. எதிர்ப்பது ஒரு புறமிருக்க, அவர்கள் ஆட்சிக்கு வந்ததின் பின்னரும் நீடித்து வரும் சிறுபான்மை இனங்கள் எதிர்நோக்கும் உடனடிப் பிரச்சினைகளான மாகாண சபைத் தேர்தல்களை நடத்தாது இழுத்தடித்தல், தமிழ் மக்களின் காணிகளை விடுவிக்காமல் இருப்பது, சிறைகளில் நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் கைதிகளின் விசாரணைகளை நடத்தாமல் இருப்பது, தமிழ் பகுதிகளில் சிங்கள இன விரிவாக்கத்தை தொடர்ந்து முன்னெடுப்பது, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் மக்கள் பிரச்சினைக்குத் தீர்வுகாணாமல் இருப்பது, கிழக்கு மாகாணத்தில் அபகரிக்கப்பட்ட முஸ்லிம் மக்களின் காணிகளுக்குத் தீர்வு காணாமல் இருப்பது, வடக்கில் இருந்து புலிகளால் இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்ட முஸ்லிம் மக்களின் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு காணாமல் இருப்பது போன்ற அந்த மக்கள் எதிர்நோக்கும் உடனடிப் பிரச்சினைகளுக்கும் தற்போதைய அரசாங்கத்தால் எந்தவிதமான தீர்வுகளும் காணப்படவில்லை.
கடந்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களின் போது, மலையகத் தோட்டத் தொழிலாள மக்களின் கணிசமான வாக்குகளும் தேசிய மக்கள் சக்திக்கே அளிக்கப்பட்டன. ‘மலையக மக்களைச் சொர்க்கத்தில் வாழ வைப்போம்’ என தேர்தல் காலத்தில் சொன்ன தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், நீண்ட இழுபறிக்குப் பின்னர் ஒரு சிறு கண்துடைப்பு சம்பள உயர்வை மட்டும் பெற்றுக் கொடுத்தது. அதுவும் தோட்ட முதலாளிமாரை நிர்ந்பந்தித்து அந்தச் சம்பள உயர்வைப் பெற்றுக் கொடுக்காது, அவர்களுக்கு நோகாமல் அரசாங்க கஜானாவைப் பயன்படுத்தியே அந்தச் சிறு சம்பளவுயர்வு வழங்கப்பட்டது.
அதே நேரத்தில், தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்குவதாக பல்வேறு அரசாங்கங்களால் வாக்குறுதி அளிக்கப்பட்டு வந்த சிறுதுண்டு சொந்த நிலம் மற்றும் வீடமைப்புத் திட்டங்கள் இந்த அரசாங்க காலத்திலும் நிறைவேற்றப்படாமலே உள்ளன. அது மாத்திரமின்றி, தற்போதைய அரசாங்க காலத்தில் ஏற்பட்ட ‘டித்வா’ சூறாவளியால் ஏற்பட்ட சேதங்களையே அரசாங்கம் இன்னமும் நிவர்த்தி செய்யவில்லை. அதற்காக பல வெளிநாடுகளாலும் நிறுவனங்களாலும் வழங்கப்பட்ட பல கோடி ரூபா பணத்திற்கும் என்ன நடந்தது என்று தெரியவில்லை.
இவையெல்லாம் ஒருபுறமிருக்க, தற்போதைய அரசாங்கம் இலங்கை நீண்ட காலமாகப் பின்பற்றி வந்த அணிசேரா வெளியுறவுக் கொள்கையை படிப்படியாகவும் இரகசியமாகவும் ஏகாதிபத்திய சார்புக் கொள்கையாக மாற்றி வருகின்றது. 2022 இல் நடத்தப்பட்ட ‘அரகலய’ என்ற கிளர்ச்சியின் மூலமே அமெரிக்காவும் இந்தியாவும் அப்போதைய அரசாங்கத்தைத் தூக்கி எறிந்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தைப் பதவிக்கு கொண்டு வந்தன.
அந்த நன்றிக் கடனைத் தீர்ப்பதற்காக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், இரகசிய ஒப்பந்தங்கள் மூலம் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இலங்கையில் பல இராணுவ வசதிகளைச் செய்து கொடுத்துள்ளது. அது மட்டுமின்றி, தற்போதைய அரசாங்கம் ஏகாதிபத்திய நேட்டோ இராணுவக் கூட்டணியுடன் உறவுகளை வைக்க முயல்வதுடன், அமெரிக்கா தலைமையிலான குவாட் இராணுவ அமைப்புடன் இணைவதற்கும் அக்கறை கொண்டுள்ளது.
இந்த இரண்டு இராணுவ அமைப்புகளும் ஆக்கிரமிப்பு நோக்கங்களுடன் உருவாக்கப்பட்டவை என்பதும், இலங்கையின் பாரம்பரிய நட்பு நாடுகளான ரஸ்யாவுக்கும் சீனாவுக்கும் எதிரானவை என்பதும் சிறுபிள்ளைக்கும் தெரியும்.
இவ்வாறு தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், முற்போக்கு முகமூடியுடனும், மக்களுக்குப் பல வாக்குறுதிகளை வழங்கியும் ஆட்சிக்கு வந்துவிட்டு, இப்பொழுது முற்றுமுழுதாக மக்களுக்கு எதிராகவும், நாட்டுக்கு எதிராகவும் செயல்பட்டு வருகின்றது.
ஆனால், மக்கள் அரசாங்கத்தின் எதேச்சாதிகார நடவடிக்கைகளை பார்த்துக்கொண்டு, வாளாவிருக்கத் தயாரில்லை என்பதை தமது நடவடிக்கைகள் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர்.
(அதன் ஒரு வெளிப்பாடுதான் அண்மையில் அனுராதபுரத்தில் சிறீலங்கா பொதுஜன பெரமுன அரசுக்கு எதிராக நடத்திய கூட்டத்தில் திரண்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் திரள்) அவர்களின் எதிர்ப்பைக் கண்டு அஞ்சும் அரசாங்கம், பொலிஸ், நீதித்துறை, சிறைச்சாலைக் கட்டமைப்பு, நிர்வாக நடைமுறைகள் என்பனவற்றின் மூலம் மக்களின் எதிர்ப்பை முளையிலேயே கிள்ளியெறியும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
ஆனால், அரசாங்கம் என்னதான் அடக்குமுறை நடவடிக்கைகளை எடுத்தாலும், இந்த அரசாங்கம் மக்கள் கிளர்ச்சி ஒன்றின் மூலம் வெகுவிரைவில் தூக்கியெறியப்படும் என்பது மட்டும் நிச்சயம்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!