அரசுக்குச் சஜித் பிரேமதாச அவசர அழைப்பு!
இலங்கை தற்போது புதியதொரு பொருளாதார மரணப் பொறிக்குள் சிக்கிப் பெரும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதால், தற்போதைய திட்டம் முடிவடைவதற்கு முன்னரே சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) அடுத்த கட்டத் தொடர்ச்சித் திட்டத்திற்கான பேச்சுகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசிடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், தற்போதைய IMF திட்டம் 2027 மார்ச் மாதத்துடன் முடிவடையவுள்ள நிலையில், அதன் பின்னர் என்ன நடக்கும் என்பது குறித்து அரசிடம் எந்தவொரு தெளிவான திட்டமும் இல்லை எனச் சுட்டிக்காட்டினார்.
இத்திட்டம் முடிவடையும் போது எதிர்பார்க்கப்படும் உத்தியோகபூர்வ கையிருப்பு இலக்கு 14.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்றபோதிலும், தற்போது இலங்கையிடம் அதன் 50 வீதமான 7 பில்லியன் டொலர்கள் மட்டுமே கையிருப்பில் உள்ளது என்றும், எதிர்வரும் 12 மாதங்களில் மாதமொன்றிற்கு 600 மில்லியன் டொலர் வீதம் சேகரித்தால் மட்டுமே இந்த இலக்கை எட்ட முடியும் என்ற நிலையில் தற்போது மாதத்திற்கு 60 மில்லியன் டொலர் மட்டுமே கிடைத்து வருவதாகவும் அவர் விபரித்தார்.
மேலும், உலகச் சந்தையில் எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 110 டொலரைத் தாண்டியுள்ளதால் கையிருப்பு நிதியைப் பயன்படுத்த நேரிட்டு டொலர் தட்டுப்பாடு அதிகரிக்கும் என்றும், மத்திய கிழக்கு போர்ச் சூழலால் வளைகுடா நாடுகளிலிருந்து கிடைக்கும் வெளிநாட்டு அனுப்பீடுகள் பாதிக்கப்பட்டு, சுற்றுலா வருமானமும் 17 வீதத்தால் குறைந்துள்ளதாகவும் அவர் எச்சரித்தார்.
இவற்றுடன் என்.டி.பி. வங்கி மோசடி உள்ளிட்ட உள்நாட்டு நிதி முறைகேடுகளால் சர்வதேச தர மதிப்பீடுகளில் நாடு மேலும் கீழ் மட்டத்திற்குச் செல்லும் அபாயம் உள்ளதைச் சுட்டிக்காட்டிய சஜித் பிரேமதாச, நாட்டின் உண்மையான நிலையை மறைக்காமல் கூறி, மக்கள் மீண்டும் வரிசைகளில் நிற்பதைத் தவிர்க்க அரசு உடனடியாகப் புதிய இணக்கப்பாட்டுக்குச் செல்ல வேண்டும் என வலியுறுத்தினார்.

கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!