இலங்கையைச் சேர்ந்த பௌத்த தேரர் ஒருவர், அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் உள்ள வழிபாட்டுத்தலமொன்றில் ஆறு சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 13 ஆண்டுகள் மற்றும் 2 மாதங்கள் சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
நவோதுன்னே விஜித என்ற 71 வயதான தேரர், மெல்பேர்ணின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்திருந்த தம்ம சரண என்ற பௌத்த வழிபாட்டுத் தலத்தின் பிரதம தேரராக பணியாற்றியவர் என அவுஸ்திரேலியாவின் ஏ.பி.சி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலியாவின் விக்டோரியா கவுண்டி நீதிமன்றம் வியாழக்கிழமை (8) அவருக்கு இந்தத் தண்டனையை விதித்துள்ளது.
நீதிபதி, குறித்த குற்றங்கள் நம்பிக்கைக்கு எதிரான மிகக் கடுமையான துரோகமாகும் எனக் குறிப்பிட்டதுடன், இலங்கை பௌத்த சமூகத்தில் பிக்கு பெற்றிருந்த மதிப்புமிக்க நிலையை அவர் தவறாகப் பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.
2025 ஆம் ஆண்டு நடைபெற்ற விசாரணையில் குறித்த தேரர் 17 குற்றங்களில் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டார். அவற்றில் சிறுமியை பாலியல் ரீதியாக சேஷ்டை புரிந்த 9 குற்றச்சாட்டுகளும், சிறுமியுடன் அநாகரிகமான செயலில் ஈடுபட்ட 8 குற்றச்சாட்டுகளும் அடங்குகின்றன.
1994 முதல் 2002 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் மெல்பேர்ணின் Springvale மற்றும் Keysborough பகுதிகளில் இயங்கி வந்த பௌத்த வழிபாட்டுத்தலங்களில் இந்தக் குற்றங்கள் இடம்பெற்றதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
வழிபாட்டுத்தலத்திற்கு மத நடவடிக்கைகளில் பங்கேற்பதற்காக பெற்றோருடன் சென்ற சிறுமிகளை, குறித்த தேரர் தனது தங்குமிடத்துக்கு பலமுறை அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. சில சந்தர்ப்பங்களில் சிறுமிகளின் பெற்றோர் அருகிலுள்ள அறைகளில் இருந்தபோதும் இந்தச் சம்பவங்கள் இடம்பெற்றதாக கூறப்பட்டது.
பெற்றோர் தமது பிள்ளைகள் வழிபாட்டுத் தலத்தில் பாதுகாப்பாக இருப்பார்கள் என நம்பியிருந்த நிலையில், அந்த நம்பிக்கையை குறித்த தேரர் துஷ்பிரயோகம் செய்ததாக நீதிபதி தெரிவித்தார்.
இந்தச் சம்பவங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீண்டகால உளவியல் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதாகவும், அவர்களில் சிலர் இன்றும் பௌத்த மத நடைமுறைகளுடன் தொடர்புடைய மன உளைச்சலை எதிர்கொள்வதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
பல ஆண்டுகளுக்குப் பின்னர் பாதிக்கப்பட்ட பெண்கள் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து, 2023 ஆம் ஆண்டு குறித்த தேரர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
விசாரணையின்போது தேரர் குற்றச்சாட்டுகளை மறுத்ததுடன், சம்பவங்கள் இடம்பெறவில்லை என அவரது சட்டத்தரணிகள் வாதிட்டனர். சில முறைப்பாட்டாளர்களை நினைவில் வைத்திருக்க முடியவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
தேரர் குறைந்தபட்சம் 9 ஆண்டுகள் மற்றும் 4 மாதங்கள் சிறைத்தண்டனையை அனுபவித்த பின்னரே பிணையில் விடுதலை பெறுவதற்கான பரிசீலனைக்கு தகுதி பெறுவார்.
தண்டனை அறிவிக்கப்பட்ட பின்னர், தேதர் நீதிமன்றத்தில் தனது ஆதரவாளர்களை நோக்கி புன்னகைத்து கையசைத்தமை சில பாதிக்கப்பட்டவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியதாகவும் ஏ.பி.சி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறித்த தேரர் இலங்கையில் பிறந்தவர் என்பதுடன், தனது 15 ஆவது வயதில் பௌத்த துறவறத்தில் இணைந்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சுவீடனுக்குச் சென்று அந்நாட்டு குடியுரிமையைப் பெற்ற அவர், 1994 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்குச் சென்று தம்ம சரண என்ற பௌத்த வழிபாட்டுத்தலத்தின் பிரதம தேரராக பொறுப்பேற்றுள்ளார்.
சிறைத்தண்டனை நிறைவடைந்த பின்னர் அவர் நாடுகடத்தப்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அவர் சுவீடனுக்குத் திரும்பிச் செல்லத் தயாராக இருப்பதாக அவரது சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, தேரரின் உடல்நிலை, குறிப்பாக அவருக்கு டிமென்ஷியா பாதிப்பு இருப்பதாக முன்வைக்கப்பட்டிருந்த வாதங்களும் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தன.
இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான காலத்திற்கு முன்னர் இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றங்கள் தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகள் தற்போது தண்டனை விதிக்கப்பட்டதன் மூலம் நிறைவடைந்துள்ளன.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!