இரண்டு கண்டங்களில் தப்பிய ராஜீவ்... சோனியா சொல்லும் ரகசியங்கள்!
544 பக்கங்கள்கொண்ட இந்தப் புத்தகம் ஹார்ப்பர்காலின்ஸ் (HarperCollins) பதிப்பகத்தால் தயாரிக்கப்பட்டு, நவம்பர் 10-ம் தேதி வெளியானது. இதில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மாநிலங்களவை எம்.பி-யுமான சோனியா காந்தி, தனது தனிப்பட்ட வாழ்க்கை, அரசியல் தொடர்பான விவகாரங்கள் எனப் பல நினைவுகளைப் பகிர்ந்திருக்கிறார்.
ராஜீவ் உயிர் தப்பிய தருணங்கள்!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் 1991-ம் ஆண்டு படுகொலைசெய்யப்பட்டார். அதற்கு முன்பு, அவரை இரண்டு முறை கொலை செய்ய முயற்சி நிகழ்ந்த சம்பவங்களை சோனியா காந்தி, தனது நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.
`1987-ம் ஆண்டு, அக்டோபர் 2-ம் தேதி, மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த ராஜீவ் உடன் சென்றிருந்தேன். அங்கு, திடீரென துப்பாக்கிச் சத்தம் கேட்டது. வாகனத்தின் சத்தம் என்று பாதுகாப்பு அதிகாரிகள் அலட்சியப்படுத்தினர்.
மீண்டும் துப்பாக்கிச்சூடு நடந்தது. ஒரு குண்டு எனக்கு மிக அருகில் பறந்து சென்றது. ஒரு பாதுகாப்பு அதிகாரியின் காதையும் குண்டு உரசிச் சென்றது. ராஜீவ் உடனடியாக என்னை காருக்கு அழைத்துச் செல்லுமாறு உத்தரவிட்டார். நான் அவரைவிட்டுச் செல்ல மறுத்தேன். ஆனால், வலுக்கட்டாயமாக காருக்கு அழைத்துச் செல்லப்பட்டேன்.
.அதே ஆண்டில் இன்னொரு கொலை முயற்சி... கொழும்பில் இந்தியா – இலங்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுவிட்டு, அணிவகுப்பு மரியாதையில் ராஜீவ் பங்கேற்றார்.
அப்போது, இலங்கை கடற்படை வீரர் ஒருவர் துப்பாக்கியின் பின்பகுதியால் ராஜீவ்வின் தலையில் ஓங்கி அடித்தார். ராஜீவ் சட்டென்று தலையைக் குனிந்ததால், அடி தோளில் பட்டது. அப்போது, அங்கு என்ன நடந்தது என்பது எனக்குச் சரியாகத் தெரியவில்லை.
நாங்கள் விமானத்தில் ஏறிய பிறகுதான், அங்கு என்ன நடந்தது என்பதை ராஜீவ் விளக்கினார். சட்டையைக் கழற்றியபோது, அவரது தோளில் பெரிய காயமும் வீக்கமும் இருந்தன. தாக்குதல் பலமாக இருந்தது. அதற்காக அவர் பல நாள்கள் வலி நிவாரணி மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டியிருந்தது. ஆனாலும், அந்தக் காயத்தின் வலி அவருடைய வாழ்வின் இறுதி வரையிலும் நீடித்தது.’
ராஜீவ்வுக்குச் செய்யும் துரோகம்?
காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 2004-ம் ஆண்டு உருவானது. அந்தக் கூட்டணியை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்ட அனுபவங்களை சோனியா காந்தி பகிர்ந்திருக்கிறார்.
`தி.மு.க-வைக் கூட்டணிக்குள் கொண்டுவருவது எனக்குப் பெரிய சவாலாக இருந்தது. ராஜீவ் படுகொலை தொடர்பான ஜெயின் கமிஷன் அறிக்கையில், தி.மு.க-மீது எழுந்த குற்றச்சாட்டுகளும், விடுதலைப் புலிகள் விவகாரத்தில் தி.மு.க-வின் நிலைப்பாடும் எனக்குள் கடும் தயக்கத்தை ஏற்படுத்தின.
தி.மு.க-வுடன் கைகோப்பது ராஜீவ்வுக்குச் செய்யும் துரோகமாகிவிடாதா… என்று நினைத்தேன். அதேநேரம், பா.ஜ.க-வை எதிர்கொள்ள வலுவான கூட்டணி அவசியம் என்பதால், ராஜீவ் இருந்திருந்தால் தி.மு.க-வுடன் கூட்டணிவைக்கும் முடிவை ஆதரித்திருப்பார் என்றும் சிந்தித்தேன்.
அதன் பிறகு, தயக்கத்துடன் தி.மு.க தலைவர் கருணாநிதியைத் தொலைபேசியில் தொடர்புகொண்டேன். அவரது அணுகுமுறை அன்பாக இருந்தது. காலப்போக்கில் அவரது கவிதை, எழுத்து, தமிழ்மொழி மீதான பற்றை அறிந்து அவரை மதிக்கத் தொடங்கினேன்.’
.சஞ்சய் காந்தியுடன் முரண்!
எமர்ஜென்சி காலகட்டத்தில் நடைபெற்ற முக்கியச் சம்பவங்களையும் சோனியா காந்தி தனது நூலில் விவரித்திருக்கிறார்.
`1975-ம் ஆண்டு இந்திரா காந்தியின் தேர்தல் வெற்றியை அலகாபாத் உயர் நீதிமன்றம் ரத்துசெய்ததால், ராஜினாமா செய்யலாமா என அவர் ஆலோசித்தார்.
அடுத்த தேர்தலுக்கு ஆறு மாதங்களே இருப்பதால் ராஜீவ் ராஜினாமா செய்ய அறிவுறுத்தினார். சஞ்சய் காந்தியோ ராஜினாமா செய்யக் கூடாது என்றார். அவருடைய கருத்துக்கு இந்திரா இணங்கினார். இதையடுத்து எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டது. சஞ்சய் காந்தி கொண்டுவந்த குடும்பக் கட்டுப்பாடு உள்ளிட்ட கடுமையான திட்டங்கள் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தின.’
போஃபர்ஸ் ஊழல்!
போஃபர்ஸ் ஊழல் விவகாரம் குறித்தும் சோனியா பதிவுசெய்திருக்கிறார். `1987-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் போஃபர்ஸ் பீரங்கிகள் வாங்கியதில் கமிஷன் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு, ராஜீவ் காந்தி அரசுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது.
ஊடகங்களும் எதிர்க்கட்சிகளும், அவரையும் குடும்பத்தினரையும் விமர்சித்தன. இதையடுத்து, நாடாளுமன்றத்தில் விளக்கமளித்த ராஜீவ், இந்தப் பரிவர்த்தனையில் தானோ, தனது குடும்பத்தினரோ எந்த ஆதாயமும் பெறவில்லை எனத் திட்டவட்டமாக மறுத்தார். இது நாடாளுமன்றத்தின் மீதான மதிப்பையும், ஜனநாயக நம்பிக்கையையும் நினைவூட்டுகிறது.’
இவ்வாறு தனது தனிப்பட்ட வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை குறித்துப் பல தகவல்களை சோனியா காந்தி பதிவுசெய்திருக்கும் நிலையில், ‘காங்கிரஸ் செய்த தவறுகள் இந்த நூலில் மறைக்கப்பட்டிருப்பதாக பா.ஜ.க குற்றம்சாட்டுகிறது. ‘இந்தப் புத்தகம், வரலாற்றை திரித்துக் காட்டும் முயற்சி’ என்றும் பா.ஜ.க விமர்சித்திருக்கிறது.
பா.ஜ.க-வால் வேறு என்ன சொல்ல முடியும்?

கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!