தமிழகத்தில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் மக்களுக்காகக் கட்டப்பட்ட 148 புதிய வீடுகளை, தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் வியாழக்கிழமை (26) திறந்து வைத்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பாம்பாறு அணைப் பகுதியில் அமைந்துள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில், 8.52 கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளைச் சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி ஊடாக அவர் திறந்து வைத்தார். அத்துடன், 1.37 கோடி ரூபாய் செலவில் அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், முகாம்களில் வசிக்கும் 19,710 குடும்பங்களைச் சேர்ந்த 56,638 இலங்கைத் தமிழர்களுக்கான மாதாந்த நிதியுதவியையும் அவர் அதிகரித்துள்ளார்.
இதன்படி, குடும்பத் தலைவர்களுக்கான உதவித்தொகை 1,500 ரூபாயிலிருந்து 1,800 ரூபாயாகவும், 12 வயதுக்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கான உதவித்தொகை 1,000 ரூபாயிலிருந்து 1,200 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான உதவித்தொகை 500 ரூபாயிலிருந்து 600 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதற்காக தமிழக அரசுக்கு ஆண்டுதோறும் மேலதிகமாக 14.95 கோடி ரூபாய் செலவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில், புலம்பெயர் தமிழர் நலத்துறை அமைச்சர் கே. தன்னரசு உள்ளிட்ட அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதேவேளை, இந்தியாவுக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பிலிப் கிரீன் உள்ளிட்ட தூதரக அதிகாரிகளும், தக்ஷிணசித்ரா அருங்காட்சியகத்தின் நிர்வாகிகளும் தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜயைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!