இந்திய விமானப்படையின், எயார்பஸ் C295W விமானம் கொழும்பு வான்பரப்பில் பறந்த காட்சியை கடந்த 5ஆம் திகதி மலின் ஜயசூரிய என்பவர் படமாக்கியிருந்தார்.பயண வழிகாட்டி
அவரது படங்களில் இந்திய விமானப்படை என்ற ஆங்கில எழுத்துகளும், CA-7110 என்ற பதிவிலக்கமும் தெளிவாக தெரிகின்றன.
அது, 480 மணிக்கு கி.மீ வேகத்தில், 9.25 தொன் எடையுள்ள பொருட்களுடன் பயணிக்கக் கூடிய இந்திய விமானப்படையின் தந்திரோபாய போக்குவரத்து விமானமாகும்.
அந்த விமானம் எங்கிருந்து வந்தது, ஏன் வந்தது, எங்கு சென்றது, எங்கு தரையிறங்கியது, என்பன போன்ற எந்த விபரங்களும் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.
அந்தமானில் இடம்பெற்ற பிம்ஸ்டெக் கடல்சார் பயிற்சிக்கு, எஸ்.எல்.என்.எஸ். போர்க்கப்பலில் சென்றிருந்த போது மரணமான கடற்படை அதிகாரி கொமாண்டர் சமரகோனின் உடல், அதற்கு இரண்டு நாள்கள் முன்னதாக, நவம்பர் 3ஆம் திகதி, இந்திய விமானப்படையில் சி -130 விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு எடுத்து வரப்பட்டிருந்தது.
அப்படியானால், இந்திய விமானப்படையின், எயர்பஸ் C295W விமானம் ஏன் வந்தது என்ற கேள்விக்கு இன்னமும் பதில் இல்லை.

இதற்கு இரண்டு நாட்கள் கழித்து, இலங்கை வான் தரப்பிற்குள் அமெரிக்க விமானம் ஒன்று நுழைந்தது.
அமெரிக்கக் கடற்படையின் போயிங் MV-22B ஒஸ்பிரே (Boeing MV-22B Osprey) இரகத்தைச் சேர்ந்த அந்த விமானம், முதல்முறையாக இலங்கையில் தரையிறங்கியது.
நவம்பர் 7ஆம் திகதி மதியம் 12.05 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய அந்த விமானம், 35 நிமிடங்களில், புறப்பட்டுச் சென்றது.
இலங்கைக்கு தெற்காக, 50 கடல்மைல் தொலைவில் நிறுத்தப்பட்டிருந்த, அமெரிக்க போர்க்கப்பல் ஒன்றில் இருந்தே அந்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்ததாக கூறப்பட்டது.
ஹெலிகொப்டர் போலவும், விமானத்தைப் போலவும் தனது இறக்கைகளையும், காற்றாடிகளையும் மாற்றிக் கொண்டு பறக்கக் கூடிய அந்த விமானத்தின் வருகைக்கான காரணம் இன்னமும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை.
அந்த விமானத்தில் யாரேனும் வந்தார்களா அல்லது ஏதேனும் பொருட்கள் கொண்டு வரப்பட்டனவா அல்லது அந்த விமானத்தில் யாரேனும் ஏறிச் சென்றார்களா, பொருட்கள் ஏற்றிச் செல்லப்பட்டனவா என்ற விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
மிகக் குறுகிய நேரத்திலேயே அந்த விமானம் புறப்பட்டு சென்ற நிலையில், பல்வேறு ஊகங்கள் தான் வெளியாகி வருகின்றன.
அமெரிக்க விமானம், கட்டுநாயக்கவில் தரையிறங்கிய மறுநாள், 8ஆம் திகதி, கொழும்பு துறைமுக நகரத்தில், சீனாவின் ஈஹங் நிறுவனத்தின் பயணிகள் ட்ரோனை பரீட்சார்த்தமாக சோதனை செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.பயண வழிகாட்டி
கொழும்பு துறைமுக நகரத்திற்கும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கும் இடையே ட்ரோன் சேவையை நடத்தும், திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த சோதனையோட்டம் நடத்தப்பட்டது. ஒரு பக்கம் வெளிநாட்டுப் போர்க்கப்பல்கள் மாறி மாறி வருகின்றன, இன்னொரு பக்கம் வெளிநாட்டு விமானப்படை விமானங்களும் வந்து செல்கின்றன.
இது இலங்கைத் தீவை சுற்றி அதிகரித்து வரும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறதா அல்லது பதற்றத்தை வெளிப்படுத்துகிறதா என்ற கேள்வியை உருவாகியிருக்கிறது.
அமெரிக்க கடற்படையின் ஒஸ்பிரே விமானத்தின் வருகைக்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வ வெளியிடப்படவில்லை என்றாலும், அமெரிக்க--இலங்கை பாதுகாப்பு உறவுகளின் ஒரு பகுதியாக, வழக்கமான விநியோகப் பராமரிப்பு அல்லது எரிபொருள் நிரப்புதல் போன்ற செயற்பாட்டுத் தேவைகளுக்காகவே இந்த குறுகிய கால பயணம் அமைந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
பரபரப்பான கடல் வணிகப் பாதைகளைக் கொண்ட இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில், அமெரிக்கா தனது கடல்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், பிராந்திய நிலைத்தன்மையைப் பேணவும் இலங்கையை ஒரு முக்கிய மூலோபாய பங்காளியாகப் பார்க்கிறது.
அதன் ஓர் அங்கமாகவே, அமெரிக்க போர்க் கப்பல்கள் மற்றும் விமானங்களின் வருகைகள் அமைகின்றன.
இந்த விமானம் 50 கடல் மைல்களுக்கு அப்பாலுள்ள அமெரிக்க போர்க்கப்பலில் இருந்து வந்திருப்பதாக கூறப்பட்டாலும், அது எந்தக் கப்பல் என்ற விபரம் வெளியிடப்படவில்லை.
இத்தகைய விமானங்கள், பொதுவாக அமெரிக்காவின் ஈரூடகத் தாக்குதல் கப்பல்கள் (Amphibious Assault Ships - L-Class Ships), அணுசக்தி விமானம் தாங்கிப் போர்க்கப்பல்கள் (Supercarriers - CVN-Class), ஈரூடக போக்குவரத்துத் தளக் கப்பல்கள் (Amphibious Transport Dock Ships - LPD-Class) போன்றவற்றில் தரித்திருப்பது வழக்கம். ஈரூடகத் தாக்குதல் கப்பல்கள் தான், ஒஸ்பிரே விமானங்கள் மிக அதிகமாகத் தரித்திருக்கும் முதன்மைக் கப்பல்களாகும்.
இவை ஹெலிகொப்டர்கள் மற்றும் ஒஸ்பிரே விமானங்களை இயக்குவதற்காகவே, பெரிய தட்டையான தளங்களைக் கொண்டுள்ளன.
அமெரிக்கக் கடற்படையின் பிரம்மாண்டமான நிமிட்ஸ் மற்றும் ஜெரால்ட் ஆர். போர்ட் ஆகிய அணுசக்தி விமானம் தாங்கிக் கப்பல்களில் கடற்படையின் விநியோகப் பிரிவைச் சேர்ந்த CMV-22B ரக ஒஸ்பிரே விமானங்கள் பொதுவாகத் தரித்திருக்கும்.விமானங்கள் காண்க
கரையில் உள்ள தளங்களில் இருந்து இந்தக் கப்பல்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதிரிப்பாகங்கள், தபால்கள் மற்றும் பொருட்களைக் கொண்டு சேர்க்கும் விநியோகப் பணியை இவை மேற்கொள்கின்றன.
ஈரூடக போக்குவரத்துத் தளக் கப்பல்களில், பின்புறம் உள்ள சிறிய ஓடுதளத்தில் ஒஸ்ப்ரே விமானங்களை தற்காலிகமாகத் தரையிறக்கி, வீரர்களையும் பொருட்களையும் ஏற்றிச் செல்லும் வசதியே உள்ளது.
ஒஸ்பிரே விமானம் கட்டுநாயக்க வில் தரையிறங்கிய போது, அமெரிக்க கடற்படையின் நிமிட்ஸ் வகையை சேர்ந்த விமானம் தாங்கி கப்பலான யூ.எஸ்.எஸ். தியோடர் ரூஸ்வெல்ட், சிங்கப்பூரில் உள்ள சாங்கி கடற்படைத் தளத்திலிருந்து புறப்பட்டு இந்தியப் பெருங்கடல் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தது.விமானங்கள் காண்க
மறுநாள் நவம்பர் 8 ஆம் திகதி நள்ளிரவில், அது மலாக்கா நீரிணையை கடந்த நிலையில், தனது இருப்பிடத்தைக் காட்டும் AIS அமைப்பை அணைத்து விட்டு, இந்தியப் பெருங்கடலை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியது. ஒஸ்பிரே விமானம், இந்த கப்பலில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருப்பதற்கு சாத்தியங்கள் குறைவு.
அப்படியானால், வேறொரு போர்க்கப்பல் தான் தென்பகுதிக் கடலில் காணப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தை அமெரிக்கா தனது மூலோபாய தேவைகளுக்காக மீண்டும் பயன்படுத்த ஆரம்பித்துள்ளதை இது காட்டுகிறது.
நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் அமெரிக்க கடற்படையின் தற்காலிக விநியோகத் தேவைக்காகப் பயன்படுத்தப்பட்டது நினைவிருக்கலாம்.
இலங்கையை இந்தியப் பெருங்கடலின் ஒரு பிராந்திய விநியோக மையமாக மாற்றும் திட்டத்தின் ஒரு பகுதியாக, அமெரிக்கா இந்த விநியோகப் பணிகளை மேற்கொண்டது.
அமெரிக்க கடற்படை சரக்கு விமானங்கள் கட்டுநாயக்கவில் தரையிறங்கி, அழிவு ஏற்படுத்தாத பல்வேறு தளபாடப் பொருட்கள் மற்றும் விநியோகங்களை மாற்றி அனுப்பும் பணிகளைச் செய்தன.
நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் மூன்று கட்டங்களாக இந்த விநியோகப் பரிமாற்ற நடவடிக்கை இடம்பெற்றது.
முதன்முறையாக கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் திருகோணமலை துறைமுகப் பகுதி வழியாக 2018 ஓகஸ்ட் மாதம் விநியோகம் மேற்கொள்ளப்பட்டது.
இரண்டாவது முறையாக கட்டுநாயக்க விமான நிலையத்தில், 2018 டிசம்பர் மாதம், சரக்கு விநியோகப் பரிமாற்றம் நடந்தது.
மூன்றாவது முறையாக, 2019 ஜனவரி 21 முதல் 29 வரை கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக, அமெரிக்க கடற்படை விநியோக நடவடிக்கை தொடர்ந்தது.
இந்த தற்காலிக விநியோக மூலமாக, பிராந்திய கடற்பரப்பில் நிலைகொண்டிருந்த அமெரிக்காவின் யூ.எஸ்.எஸ். ஜோன் சி ஸ்ரென்னிஸ் போன்ற விமானம் தாங்கிக் கப்பல்களுக்கான விநியோகத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டன.விமானங்கள் காண்க
இலங்கையை அமெரிக்கா தனது இராணுவ விநியோக மையமாக மாற்ற முயற்சிப்பதாக அப்போது குற்றச்சாட்டுகள் எழுந்த போது, இலங்கை அரசாங்கத்துக்கு இதன்மூலம் சுமார் 25 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்ததாக கூறி நிலைமையை சமாளிக்க முயற்சிக்கப்பட்டது.
ஒஸ்பிரே விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த போது, இலங்கையை அண்டிய பகுதியில் அந்த விமானம் நேரடி கடல்சார் கண்காணிப்பு அல்லது உளவு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வதந்திகள் பகிரப்பட்டன.
ஆனால், ஒஸ்பிரே விமானங்கள், பொதுவாக உளவு, கண்காணிப்பு மற்றும் உளவுத் தேடுதல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுவதில்லை. அப்படியானால், ஒஸ்பிரே விமானம் ஏன் கட்டுநாயக்கவில் குறுகிய நேரம் தரையிறங்கியது?
இராணுவ உதவியுடன் கூடிய இராஜதந்திர விநியோகங்கள் மற்றும் பாதுகாப்பான அஞ்சல் போக்குவரத்து என்றொரு விடயம் உள்ளது.
இராஜதந்திர உறவுகள் தொடர்பான வியன்னா உடன்படிக்கையின் 27வது பிரிவின் கீழ், அதிகாரப்பூர்வ தூதரகப் பைகள், வெளிநாட்டு எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளால் (சுங்கம்) தேடுதல், பறிமுதல் அல்லது பரிசோதனை செய்வதிலிருந்து சட்டப்பூர்வமாகப் பாதுகாக்கப்படுகின்றன.
தூதரக அலுவலகங்கள், பாதுகாப்புத் தூதுவர்கள் அல்லது கடற்படைச் செயலணிகள் இரகசியத் தகவல்கள், வன்பொருள் அல்லது தூதரக அஞ்சல்களை அனுப்ப வேண்டியிருக்கும் போது, வணிக சரக்கு விமானங்களின் மூலம் அனுப்பப்படுவதில்லை.
பொது விமான நிலையங்கள் வழியாக இவ்வாறான சரக்குகளை அனுப்பும்போது, வெளிநாட்டு சுங்கக் கையாளுபவர்கள் மற்றும் சரிபார்க்கப்படாத பணியாளர்களுக்கு அவை வெளிப்படுத்தப்படும்.
இவ்வாறான நிலையில், இராணுவ விமானத்தில் தூதரகப் பைகளைக் கொண்டு செல்வது, இராணுவத்திலி ருந்து தூதரகத்திற்கு ஒரு தடையற்ற பாதுகாப்புச் சங்கிலியைப் பராமரிக் கிறது. இது பிரத்தியேகமாக அங்கீகரிக்
கப்பட்ட பணியாளர்களால் பாதுகாக் கப்படுகிறது. நவீன இராணுவ வான்
வழிப் போக்குவரத்து, இறையாண்மை க்குட்பட்ட தூதரகத் தொடர்புகளை உலகம் முழுவதும் எவ்வாறு இணைத்து வைத்திருக்கிறது என்பதை இது காட்டுகிறது.
அதேவேளை, இந்த விமா னத்தின் வருகை கோட்டாபய ராஜபக் ஷ அரசாங்கத்தின் வருகைக்குப் பிறகு, அமெரிக்காவின் விநியோகத் தேவைகளுக்காக கட்டுநாயக்க விமானத் தளத்தைப் பயன்படுத்துவதற்கு ஏற்பட்டிருந்த தடைகளை அமெரிக்கா உடைக்கத் தொடங்கி விட்டது என்பதை காட்டுவதாகவும் அமைந்திருக்கிறது.
ஹரிகரன்
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!